“What are we having this liberty for? We are having this liberty in order to reform our social system, which is full of inequality, discrimination and other things, which conflict with our fundamental rights.” – Dr.B R Ambedkar  Ambedkar

டாக்டர் அம்பேத்கர் பற்றிய கட்டுரைகள் அல்லது விவாதங்கள் என்னைக் கடக்கும் போதெல்லாம், அந்த மனிதரைப் பற்றிய வியப்பும் கூடவே வந்து என்னை ஆட்கொள்வதைத் தவிர்க்க இயலாது. ஒரு மிகப்பெரிய சிந்தனையாளர், குறியீடுகளைத் தாண்டி அடக்குமுறை வடிவங்களையும், மனிதக் குழுக்களில் நிலவும் வேறுபாடுகளையும் அதன் பரிமாணங்களையும் பற்றிய மிகச் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டவர், வாழும் காலத்தில் தான் ஒரு அறிவார்ந்த மனிதன் என்பதையே கடுமையாகப் போராடி உறுதி செய்தவர், அந்த உறுதியில், மனித இனங்களின் பிறப்பு அடையாளங்களுக்கும், சிந்தனைகளுக்கும் ஒரு போதும் தொடர்பு இல்லை என்பதை தர்க்கரீதியில் உணர்த்தி ஒரு புதிய பாதையை இந்திய தேசத்தின் சமூகப் பயணத்திற்கு வழங்கிய மாமேதை அவர்.

“For a successful revolution it is not enough that there is discontent. What is required is a profound and thorough conviction of the justice, necessity and importance of political and social rights.” – Dr.B.R Ambedkar

ஆனால், இந்த அறிஞரைப் பற்றிய பார்வை பல்வேறு சிதைவுகளையும், நீட்சிகளையும் உள்ளடக்கி மாற்றம் அடைந்திருக்கிறது. இன்றைய பொது மனிதனின் பார்வையில் முற்றிலும் ஒரு குறியீட்டு அடையாளமாக அம்பேத்கர் என்னும் அறிஞர் பல்வேறு புறக்கருவிகளால் வரையப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் தங்கள் மேம்பட்ட வாழ்விற்கு உழைத்தவர் அல்லது அதற்கான அடிப்படை அறிவுப் புரட்சியை மேற்கொண்டவர் என்பதையும் தாண்டி வழிபாட்டுக்குரிய தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் ஓர் அடையாளம் என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்றைய இந்தியாவின் இளைய சமூகம் ஒரு போலியான பொதுமைப்படுத்தப்பட்ட வாழ்நிலை வெளிகளுக்குள் இயங்கும் சூழலில், இந்த சமூகத்தின் மிக உறுதியான அசைக்க முடியாத இருண்ட பக்கமாகத் தங்களையும் அறியாமல் துரத்தி வரும் சாதீய, மதக் குறியீடுகளையும் அதன் தாக்கங்களையும் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இத்தகைய பொதுமை வெளிகளில் வாழும் இளைஞர்கள் பெரும்பாலும் சாதீயக் குறியீட்டின் எல்லையைச் சந்திக்க நேர்வது இடஒதுக்கீடு என்கிற புள்ளியில் தான், வேலை செய்யும் இடத்திலோ அல்லது கல்வி நிலையத்திலோ பொது மனிதனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற ஒரு இளைஞனின் இட ஒதுக்கீடு பற்றிய புரிந்துணர்வும், அந்தப் புரிந்துணர்வை வலிந்து உட்செலுத்தும் புறக் காரணிகளும் இன்றைய தலித் இளைஞர்களிடையே கூட இட ஒதுக்கீடு மற்றும் சாதீயக் குறியீடுகள் பற்றிய ஒரு தவறான படிமத்தை உருவாக்கி வருகிறது. இந்தத் தவறான சூழல் அதன் தவறான விளைவுகளைத் தன்னுடைய சொந்த சமூகத்தின் உள்ளடக்கத்தில் எதிரொலிக்கும் என்கிற உண்மை போலியான நகரச் சூழலில் மறைந்து, ஊரகப் பகுதிகளில் கிளைத்துத் தளைக்கிறது.

“Unlike a drop of water which loses its identity when it joins the ocean, man does not lose his being in the society in which he lives. Man’s life is independent. He is born not for the development of the society alone, but for the development of his self.” – Dr.B.R Ambedkar

ஏற்கனவே புரையோடிப் போன சமூகப் புண்ணாக நீக்கமற எல்லா இடங்களிலும் வேரூன்றி இருக்கும் சாதி, மதக் குறியீடுகளை அழிப்பதற்கான ஒரே ஆயுதம் இட ஒதுக்கீடு தான் என்பதையும், அதன் மூலம் தான் கல்வியிலும், பொருளாதாரத்திலும் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இருந்து, நீண்ட காலம் விலக்கப்பட்ட மனிதர்கள் உயிர்த்து எழ முடியும் என்பதை உணர்ந்து தன்னுடைய கடும் போராட்டங்களினாலும், அறிவுப் புரட்சியினாலும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெற்றுத் தந்த இட ஒதுக்கீடு என்கிற அந்த ஆயுதம், இன்றைக்குத் தேவையற்ற ஒன்று என்கிற மனப்போக்கு தலித் இளைஞர்களிடம் வந்திருக்கிறது, இதற்கான காரணம், அம்பேத்கர் என்கிற அறிஞரின் உருவத்தைப் போற்றும் அளவிற்கு அவரது சிந்தனைகளையும், கருத்தியல் வடிவங்களையும் போற்றி வளர்க்காதது தான்.

இதற்கிடையில் தான் அம்பேத்கரின் உருவம் பொறித்த ஆடைகளை அணிய வேண்டும் என்கிற ஒரு சாராரின் குரல் உரக்க ஒலிக்கிறது, சமூகத்தின் கடைக்கோடியில் பிறந்தவர் என்று சித்தரிக்கப்பட்டவர், அறிவு சார் உலகில் இயங்கத் தகுதியற்றவர் என்று முத்திரை குத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு மனிதர், இவற்றை எல்லாம் கடந்து சமூகம் கட்டமைத்த அமைப்பு ரீதியான குறியீடுகள் தவறானவை, பிறப்பின் அடையாளங்களுக்கும், மனிதரின் அறிவுத் திறனுக்கும் துளியும் தொடர்பில்லை என்று தன்னுடைய வாழ்வின் உயரங்களால் மட்டுமே உறுதி செய்த மிகப் பெரிய தத்துவ ஞானியின் உருவம் பதிக்கப்பட்ட ஆடைகளை அணிவது மகிழ்ச்சிக்குரியது, அதனை விரும்பிச் செய்யும் அனைத்து இளைஞர்களையும் நாம் வரவேற்போம், வணங்குவோம்.

“It is disgraceful to live at the cost of one’s self-respect. Self-respect is the most vital factor in life. Without it, man is a cipher. To live worthily with self-respect, one has to overcome difficulties. It is out of hard and ceaseless struggle alone that one derives strength, confidence and recognition.” – Dr.B.R Ambedkar

ஆனால், இவற்றை விடவும் மேலாக மிக இன்றியமையாத பணி, அம்பேத்கரின் சிந்தனைகளை, அவரது நிறுத்தப்பட்ட அல்லது நின்று போன பணிகளைத் தொய்வின்றித் தொடர்வது என்ற உண்மையை நாம் உணர வேண்டும், ஏனென்றால் இந்திய தேசத்தில் இன்னமும் தலித் மக்களின் சேரிகளை அடையாளப்படுத்தும் பெயர்ப்பலகை வடிவமாகவும், காலனித் தொழில் செய்யும் தலித் மக்களின் கடைகளில் இறுக்கமாய் பொருத்தப்பட்டிருக்கும் உருவமாகவும், இன்னும் சொல்லப் போனால் தலித் என்கிற சொல்லாடலின் காட்சி வடிவமாகவும் அம்பேத்கர் மாற்றப் பட்டிருக்கிறார், இதிலிருந்து நீங்கள் முரண்பட்டாலும் இதுதான் மறைக்க முடியாத உண்மை. எந்த ஒரு மாற்று சமூகத்தின் வாழிடங்களிலும், வணிக நிறுவனப் பலகைகளிலும் அம்பேத்கரும், அவரது சிந்தனைகளும் விடுதலை பெற்ற இந்தியாவின் அறுபது ஆண்டுகளில் இடம் பெறவே இல்லை என்கிற உண்மையைப் புரிந்து கொண்டால், ஆடைகளில் பொறிக்கப்படும் அம்பேத்கரின் உருவம் பற்றிய வெறுமை தெரிய வரும் என்று நம்புகிறேன்.

இந்தச் சூழலில், தலித் இளைஞர்கள் அம்பேத்கரின் உருவம் பொறித்த ஆடைகளை அணிவதை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்களில் இருந்து நான் முரண்படுகிறேன், படித்த, நடுத்தர வர்க்கம் சார்ந்த தலித் இளைஞர்கள் இன்றைக்கு பொதுமை வெளிகளில் இயங்கும் ஒரு சுதந்திரமான இயக்கத்தை இழக்க விரும்பவில்லை, தங்கள் அடையாளங்களில் இருந்து அவர்கள் விரும்பி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள், இந்தியாவில் மதமும், சாதியும் ஒரு சாராரைத் தங்கள் முகத்தைப் பார்த்து வெட்கம் கொள்வதற்கும், இன்னொரு சாராரைத் தங்கள் முகத்தைப் பார்த்துப் பெருமை கொள்வதற்கும் அடிப்படையாக வழி செய்து கொடுத்திருக்கிறது. அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பவில்லை, அல்லது அவர்கள் தங்கள் பழைய அடையாளங்களில் இருந்து தற்காலிகமாக விடுபட்டிருக்கிறார்கள், இப்படியான சூழலில் அம்பேத்கர் உருவம் பொறித்த ஆடைகளை அணிவது மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில இளைஞர்களின் முற்போக்கு முகமூடியாகவோ ஒரு விளம்பரக் கிளர்ச்சியாகவோ இருக்கலாமே ஒழிய அதன் உட்பொருளை வெளிப்படுத்தும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது.

“This condition obtains even where there is no slavery in the legal sense. It is found where as in caste system, some persons are forced to carry on the prescribed callings which are not their choice.” – Dr.B R Ambedkar

ஏனென்றால், அம்பேத்கர் என்கிற ஒரு மிகப் பெரிய போராளியின் சிந்தனைகள் அவர்களை இன்னும் முழுமையாக எட்டவில்லை அல்லது அதற்கான முன்முயற்சிகளை நாம் செய்யவில்லை என்று கொள்ளலாம், அம்பேத்கரின் சமூகம் பற்றிய சிந்தனைகளை, உலகளாவிய மனித இனங்களின் குறியீட்டு அடையாளச் சிக்கல்களைப் பற்றிய கருத்துக்களை இன்னும் நவீனப்படுத்தி சமூகத்தின் பல்வேறு நிலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பணியும், அவரது கருத்தியல் வடிவங்களை மாணவர்களின் நெஞ்சில் நிலையுறுத்தும் பணியும் மிக இன்றியமையாதது. இன்றைய இந்தியாவின் பள்ளிகளில், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் முனைப்புடன் செயல்படுத்தப்படுகிற காந்தியச் சிந்தனைகளைப் போலவே அம்பேத்கரின் சிந்தனைகள் அறிவு சார் வழிகளில் உள்ளிருத்தப்பட வேண்டும்.  அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் கண்டறிந்து செயல்படுத்துவது ஒன்றுதான் அம்பேத்கர் என்கிற ஒரு மாபெரும் அறிஞரைப் பொதுமைப்படுத்த நாம் செய்யும் நகர்வாக இருக்க முடியும். அதுதான் திட்டமிட்டு அழுத்தப்பட்ட சாதீயக் குறியீடுகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கரை மீட்டு வெளிக்கொண்டு வருவதற்கான வழியாகவும் இருக்கும்.

Man is mortal. Everyone has to die some day or the other. But one must resolve to lay down one’s life in enriching the noble ideals of self-respect and in bettering one’s human life. We are not slaves. Nothing is more disgraceful for a brave man than to live life devoid of self-respect.” – Dr.B.R Ambedkar

பல்வேறு உலகப் பல்கலைக் கழகங்கள், அமைப்புகள் ஒப்புக் கொண்டு இன்னும் ஆய்வு செய்கிற ஒரு மேதையின் உருவம், தான் பிறந்த சொந்த மாநிலத்தின் தெருக்களில் கூட இன்னமும் முழுமையாக நுழைய முடியாத இழிந்த சாதி, மதக் கட்டமைப்பில் நடைபோடுகிற ஒரு தேசத்தில், மென்மேலும் அந்த மேதையை ஆழமான சாதிக் குறியீடாக மாற்றும் இத்தகைய ஆடையில் உருவம் பதிக்கும் முயற்சிகளில் தங்கள் ஆற்றலை வீணடிக்காமல், அம்பேத்கர் வழியிலேயே அறிவு சார் புரட்சியின் மூலம் அவரது கருத்தியலை நகர்த்தும் பணியைச் செய்ய விளைவோம்.

அதுவரையில் ஆடைகளில் உருவம் பொறிக்கும் முற்போக்கு என்பது "வெறும் கையில் முழம் போடுவது" என்று சொன்னால் யாரும் கோபம் கொள்ள மாட்டீர்கள் தானே???

“I like the religion that teaches liberty, equality and fraternity.” – Dr.B.R Ambedkar.

- கை.அறிவழகன்
Pin It