எனது பெயர் பத்திரிகையாளன்
உரத்துச்சொல்ல
கொஞ்சம் தயக்கம் எனக்கு..
எனது எழுத்தும் சிந்தனையும்
அரச தணிக்கைகளால்
உருக்குலைந்து அச்சேறுகின்றன..
குண்டுவெடிப்பாகட்டும்
படுகொலையாகட்டும்

கற்பழிப்பாகட்டும்
கட்சி தாவலாகட்டும்
யார் செய்கிறார்கள் என்பதைப்பொறுத்தே
செய்தி தயாரிக்க முடியும் என்னால்..
சிலவேளைகளில் பொய்மைகள் குழைத்து
செய்தி எழுதும்போது
என்னை நல்லதொரு சிறுகதை
எழுத்தாளனாக இனம்காண்கிறேன்..
உள்ளதை உள்ளபடியே

என்றுமே அச்சேற்ற முடிவதில்லை
சில செய்திகளில் சிறு தணிக்கை
சில செய்திகளில் முழுத்தணிக்கை
இது பரவாயில்லை
சில செய்திகளை
அவர்களே தயாரித்துத்தருகிறார்கள்..
மிரட்டல் தொலைபேசி
அதட்டல் வார்த்தைகள்

இப்படி எழுது
அப்படி எழுதாதே..
தீப்பிழம்புகள் உறங்கும்
பேனாக்களில்
சினிமாக்கிசு கிசுவா எழுதிக்கொண்டிருப்பது..?
குற்றவாளிகளை அடையாளம்
காட்டினால்
நான்தான் குற்றவாளி..
அவர்கள் அகராதியில்
எனக்கு மரண தண்டனை..

அடிக்கல் நடுவதை
அரைப்பக்கத்தில் போடவேண்டும்
படு கொலை புரிவதை
பேசாமல் விடவேண்டும்
அடேயபடபா..

பத்திரிகைச்சுதந்திரம் கொடிகட்டிப்பறக்கிறது..
பொய் வாக்குறுதி தருவதில்லை
மக்களை காட்சிப்பொருளாக்குவதில்லை
பணத்துக்காய் காட்டிக்கொடுப்பதில்லை
இருந்தும்
எப்போதும் என் தலைக்கு நேரே

குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்று
என்னை குறிபார்த்தபடியுள்ளது..
உரத்துப்பேச முடியாதபடி
எனது பேனாவின் உதடுகள்
இறுகக்கட்டப்பட்டிருக்கின்றன..
இன்றைய தலைப்புச்செய்தியில்தான்
தங்கியிருக்கிறது
எனது தலையெழுத்து..

திரிபு படுத்தி
எல்லோரையும் திருப்திப்படுத்தினால்
காத்திருக்கிறது
சில பல விருதுகள் எனக்கு..
பாருங்கள்
வெறும் பேனாமுனைகளுக்கு

எத்தனை பேர் அஞ்சுகிறார்கள் என்று...!
தீ வீழ்ச்சியும்
பிரவாக மழையும்
என் பேனாக்களில் உள்ளுறைந்து கிடப்பதை
அவர்கள் சொல்லித்தான் நானே அடையாளம் கண்டேன்..
எனது பலம் என்னவென்று
எனக்குப்புரிய வைத்ததே அவர்கள்தான்..
அதற்காகவே கோடி நன்றிகள் அவர்கட்கு !


பி.கு :-ஆசியாக்கணடத்தில் ஊடகவியலாளர்கள் அதிகம் கொல்லப்படும் நாடாகவும் ஊடக சுதந்திரம் குறைந்த நாடாகவும் இலங்கை தனது பெயரை பொறித்துள்ளது..கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொல்லப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை நூறை அண்மித்துள்ளது..
இந்தக்கவிதை அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்தவுக்கு சமர்ப்பிக்கிறேன..

- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It