உனது
கண்ணீரில்
நனைந்து போனது
எனது மனசு

இருவரதும்
இறுக்கத்தை
அதிகப்படுத்தும்
அல்லது
குறைக்கும்
நம் மௌனங்கள்
கண்ணீரிலா முடிய வேண்டும்?

தனிமையில்
நம் பிரிவின் வலிகளில்
நான் வடிக்கும்
கவிதைகளில்
நிறையவே பொதிந்து
கிடக்கின்றன
சில கண்ணீர்த்துளிகளும்
சில இரத்தத்துளிகளும்

நினைவுகளை
பின்னோக்கி
நகர்த்திவிட்டு
இனி ஒரு போதும்
நிகழ முடியாத
அந்த நாட்களில்
புதைந்து கிடக்கிறேன்

வசந்த கால
இலைச் சருகின்
முனகலும்
மயான வெளியில்
பறவைகளின்
அலறலும்
சிந்தனையின்
வெற்றிடத்தை
நிரப்பிக் கொண்டிருக்கின்றன

நீ பற்றிய
ஞாபகங்கள்
நொந்துபோன மனசின் பரப்புகளில்
அர்த்தமில்லாத அவஸ்தைகளாய்
கனக்கின்றன

ஒரே ஒரு கேள்வி

அகால மரணமாய்
திடீரெனச் செத்துப்போனதே
நம் உறவு

எப்படி
நேர்ந்தது
அது?

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It