இரத்ததானம்

ஒரு சொட்டு இரத்தம் வேண்டும்.
என்னதைத் தவிர
யாருடையதாக வேண்டுமானாலும்
இருக்கட்டும்.
என் மதத்தின் பேராலோ
என் கடவுளின் பேராலோ
என் இனத்தின் பேராலோ
எனக்கு வேண்டாம்;.
ஒரு மனிதன் என்பதால் மட்டும்
தாருங்கள்.
இரத்தருசி என் மூதாதையின்
நாக்கில் நான் அறிந்தது
என்பதற்காக கொடுங்கள்.
என் உள்ளங்கையில் ஏந்தியதை
நாவின் நடுவிலமர்த்தி
ருசித்துப் பெறுவேன்
கலவரங்களின் களியை
கொலையின் லகரியை
வன்புணர்ச்சியின் பேருவகையை.

ஓடு!

யாருமில்லாத தெருவுக்குள்
வெளிச்சத்தை இரவு
விபச்சாரத்திற்கு
அழைத்துக கொண்டிருந்த
ஆபாச மாலையொன்றில்
நுழைந்து விட்டேன்.

என் முன்னே ஒரு
குட்டைப்பாவடைச் சிறுமி
எதையுமே பார்க்காதவள் போல்
வேகநடைபோட்டுக் கொண்டிருந்தாள்.

எங்கிருந்தோ வந்து
அவள் பின்புறத்தைக்
கிள்ளிவி;ட்டு ஓடினான்
என்னைப் போலவே இருந்த ஒருவன்.

நடையின் வேகத்தைக் கூட்டி
அவளையும் தாண்டி ஓட ஆரம்பித்தேன்.
என்னை யார் யாரோவெல்லாம்
கேவலமாகப் பார்க்கிறார்கள்.

இரவுகளைச் சுமப்பவர்கள்

மலர்களை மலை போல்
பெற்றவள் ஒருத்தி
இரவுகளில்
இசைக்கிறாள்
தன் உருவமற்ற வீணையை.

வாசத்தைச் சுமக்கும்
கூதல் மெல்ல யாருமற்ற
வீதிகளை அலசிக் கொண்டிருக்கின்றது.

தாரில் நெய்த கூரைகளுக்குக் கீழே
தமது கைகள் தேய்த்து
வெப்பத்தைச் செய்கிறார்கள்
புதுமணத்தம்பதிகள்.

திண்ணைகளில் இருந்து கிளம்பும்
இருமல்கள் கதவுகளி;டம்
தோற்று பெமூச்சுகளாக
நுரைக்கின்றன.

முதிர்கன்னி
இரவைத் தீர்த்து
இளமையைச் சேமிக்க
இருட்டைப் பிசைந்து
மருந்து செய்கிறாள்.

நடைபாதையில் உறங்கும்
பைத்தியக்காரனின்
சுயமுயக்கம் போல
குறிக்கோள் எதுவுமின்றி
அலைகின்றது கூதல்.

- அரவிந்த் மாரிசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It