அழுவது ஏனென்று தெரியாது
வழியும் ஒரு கண்ணீர்த் துளியில்
நேசத்தின் ஒரு கோடி சாகாத செல்கள்

கோப்பையில் ஊற்றி வைத்திருக்கும்
ஒரே கோப்பை தேனீரை
ஆளுக்கு ஒரு மிடறு பருகுவதும்
காரணமாயிருக்கலாம்

முத்தமிடக் காத்திருக்கும்
குழந்தை போல
காதிற்கும் மேலே
எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்
முதல் நரைக்காகவும் இருக்கலாம்

மாலை நடைப் பயிற்சியின் போது
அனுமதியின்றி உன் கரங்களை
என் கரங்களோடு
பிணைத்துக் கொண்டதற்காகவும் இருக்கலாம்

அல்லது அந்தி வானின்
காகிதக் கப்பலாய்
நீந்திக் கொண்டிருந்த
வெண்நாரையை
பார்வையிலிருந்து மறையும் வரை
உற்று நோக்கி விட்டு
பின் ஒருவர் முகத்தை
ஒருவர் பார்த்து
சிறிது புன்னகைத்தோமே
அதற்காகவும்
இருக்கக் கூடும்

- தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.