அன்புக் குழந்தையே

நள்ளிரவு கடந்துவிட்டது. அட்லாண்டிக் கடலுக்கு மேலே ஆயிரக்கணக்கான அடிகள் உயரத்தில் மணிக்கு நூற்றுக் கணக்கான மைல்கள் வேகத்தில் நான் பறந்து கொண்டிருக்கிறேன். நான் எகிப்துக்குப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். நான் ரஃபாவில் காசா எல்லைக்குச் செல்லப் போகிறேன்.

நீ ஒருபோதும் விமானத்தில் பறந்திருக்க மாட்டாய். நீ காசாவை விட்டு வெளியே ஒருபோதும் சென்றிருக்க மாட்டாய். மக்கள் நிறைந்த தெருக்களையும் சந்துகளையும் மட்டுமே உனக்குத் தெரியும். காங்க்ரீட் கொட்டில்கள். காசாவைச் சுற்றிலும் படைவீரர்களின் காவலில் பாதுகாப்புத் தடையரண்கள் மற்றும் வேலிகளையும் மட்டுமே நீ அறிவாய். விமானங்கள் உனக்குப் பயங்கரமானவை. ஜெட் போர் விமானங்களும் தாக்குதல் ஹெலிகாப்டர்களும் டுரோன்களும் உனக்கு மேலே வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அவை ஏவுகணைகளையும் குண்டுகளையும் வீசுகின்றன. நிலம் அதிர்கிறது. கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. மரணம். அலறல்கள். இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உதவி கோரும் குரல்கள் தடைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரவும் பகலும் அது ஓய்வதில்லை. நொறுங்கிய காங்க்ரீட் குவியல்களுக்கு அடியில் சிக்கிக் கொண்டவர்கள் உனது விளையாட்டுத் தோழர்கள், உனது பள்ளித் தோழர்கள். உனது பக்கத்து வீட்டுக்காரர்கள். கணநேரத்தில் காணாமல் போனவர்கள். அவர்களைத் தோண்டி எடுத்தபோது நீ அவர்களுடைய சுண்ணாம்புக் காரை அப்பிய முகங்களையும் உடலின் பாகங்களையும் பார்க்கிறாய். நான் ஒரு செய்தியாளன். இதைக் காண்பது எனது வேலை. நீ ஒரு குழந்தை, இதை நீ ஒருபோதும் பார்க்கக் கூடாது.gaza childமரணத்தின் துர் நெடி. உடைந்த காங்க்ரீட்டின் கீழ் அழுகிக் கொண்டிருக்கும் உடல்கள். நீ மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். உனது வாயை துணி கொண்டு மூடியிருக்கிறாய். நீ வேகமாக நடக்கிறாய். உனது அருகாமைப் பகுதி இடுகாடு ஆகிவிட்டது. நன்கு அறிந்த இடங்களெல்லாம் காணாமல் போய்விட்டன. நீ திகைத்துப் போய் நிற்கிறாய். நீ எங்கிருக்கிறாய் என்பதே உனக்குத் தெரியவில்லை.

நீ பயந்து போயிருக்கிறாய். அதிர்வெடிக்கு மேல் அதிர்வெடி. நீ அழுகிறாய். உனது அம்மா அல்லது அப்பாவைக் கட்டிப்பிடித்துக் கொள்கிறாய். காதுகளைப் பொத்திக் கொள்கிறாய். ஏவுகணையில் வெண்ணிற வெளிச்சத்தைக் காண்கிறாய், அது வெடிப்பதற்குக் காத்திருக்கிறாய். அவர்கள் ஏன் குழந்தைகளைக் கொல்கிறார்கள்? நீ என்ன செய்தாய்? ஏன் ஒருவராலும் உன்னைப் பாதுகாக்க முடியவில்லை. நீயும் காயமடைவாயா? உனது ஒரு காலையோ கையையோ இழந்துவிடுவாயா? உனது பார்வை பறிபோய்விடுமா? நீ சக்கர நாற்காலியில் தஞ்சமடைவாயா? நீ ஏன் பிறந்தாய்? அது ஏதாவது நல்லதற்கா? அல்லது இதற்குத் தானா? நீ வளர்ந்து பெரியவனாக/பெரியவளாக ஆவாயா? நீ மகிழ்ச்சியாய் இருப்பாயா? உனது நண்பர்கள் இல்லாது போனால் உனக்கு எப்படியிருக்கும்? அடுத்தது யார் சாவார்? உன் அம்மாவா? அப்பாவா? உனது சகோதரர்களா சகோதரிகளா? விரைவில், உனக்குத் தெரிந்த ஒருவர் காயமடைவார், உனக்குத் தெரிந்த ஒருவர் இறந்துபோவார்.

இருளில் குளிர்ந்த சிமெண்ட் தரையில் நீ படுத்திருப்பாய். அலைபேசிகள் துண்டிக்கப்பட்டிருக்கும். இணைய இணைப்பு இருக்காது. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உனக்குத் தெரியாது. வெளிச்ச மின்னல்கள் தான் தெரிகின்றன. வெடிகளின் பேரதிர்வுகள் அலை அலையாய் வருகின்றன. எங்கும் அலறல்கள். எதுவும் நிற்கவில்லை.

உனது அம்மாவோ அப்பாவோ உணவுக்காக, தண்ணீருக்காக அலைகிறபோது நீ அதற்காகக் காத்திருக்கிறாய். பயங்கர உணர்வு உனது வயிற்றைக் கவ்வுகிறது. அவர்கள் திரும்பி வருவார்களா? அவர்களை நீ மீண்டும் காண்பாயா? உனது சின்னஞ்சிறு வீடுதான் அடுத்ததா? குண்டுகள் உன்னைக் கண்டுபிடித்து விடுமா? பூமியில் இதுதான் உனது கடைசி நொடிகளா?

நீ அழுக்கடைந்த உப்பு நீரைக் குடிக்கிறாய். அதனால் உனக்கு நோய் வருகிறது. உனது வயிறு எரிகிறது. ரொட்டிக் கடைகள் அழிக்கப்படுகின்றன. ரொட்டி எங்கும் இல்லை. நீ ஒரு நாளைக்கு ஒரு வேளை கூட உண்ண முடியாமலிருக்கிறாய். பாஸ்தாவோ. வெள்ளரிப் பிஞ்சோ விரைவிலேயே உனக்குப் பெரும் விருந்தாய்த் தெரியும்.

கந்தைகளால் ஆன உனது கால்பந்தினை உன்னால் விளையாட முடியவில்லை. பழைய செய்தித்தாள்களால் ஆன உனது பட்டத்தை உன்னால் பறக்கவிட முடியவில்லை.

நீ அயல்நாட்டுச் செய்தியாளர்களைப் பார்த்திருக்கிறாய். நாங்கள் ஊடகம் என்று பொறிக்கப்பட்ட பல அடுக்குகள் கொண்ட மேலங்கியை அணிகிறோம். எங்களுக்குத் தலைக்கவசம் இருக்கிறது. எங்களிடம் புகைப்படக் கருவிகள் இருக்கின்றன. நாங்கள் ஜீப் வாகனத்தில் பயணிக்கிறோம். குண்டுகள் வீழ்ந்து வெடித்த பிறகும் துப்பாக்கிச் சூடு முடிந்த பிறகும் நாங்கள் அங்கு வருகிறோம். காபி அருந்திக் கொண்டு வெகுநேரம் அமர்ந்திருக்கிறோம், பெரியவர்களிடம் பேசுகிறோம், பிறகு சென்று விடுகிறோம். வழக்கமாக நாங்கள் குழந்தைகளிடம் நேர்காணல் செய்வதில்லை. ஆனால் குழந்தைகள் நீங்கள் எங்களைச் சுற்றிக் கூடுகிறபோது, நான் உங்களிடம் நேர்காணல் செய்திருக்கிறேன். நீங்கள் சிரித்துக் கொண்டே சுட்டிக்காட்டி எங்களிடம் உங்களைப் படம் பிடிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

காசாவில் நான் ஜெட் விமானங்களின் குண்டுவீச்சின் போது இருந்திருக்கிறேன். நீங்கள் பிறக்கும் முன்பே நிகழ்ந்த வேறு போர்களிலும் குண்டுவீச்சின் போது நான் இருந்திருக்கிறேன். நானும் மிகமிக அச்சப்பட்டிருக்கிறேன். இன்னும் கூட அதைப் பற்றிக் கனவு காண்கிறேன். காசாவின் படங்களைப் பார்க்கிறபோது, இந்தப் போர்கள் இடியும் மின்னலையும் போல வேகத்துடன் என்னிடம் திரும்பி வருகின்றன. நான் உன்னைப் பற்றி நினைக்கிறேன்.

போர் நிகழ்வுகளின் போது இருந்த நாங்கள் எல்லோருமே எல்லாவற்றையும் விடப் போரை மிகவும் வெறுக்கிறோம், ஏனென்றால் அது குழந்தைகளுக்கு இழைத்திருக்கும் தீங்கு கண்டு.

நான் உங்களுடைய கதையைச் சொல்ல முயற்சி செய்தேன். நான் உலகுக்குச் சொல்ல முயற்சி செய்தேன்: ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு தசாப்தமும் நீங்கள் மக்களிடம் கொடூரமாக நடந்து கொள்கிறபோது, நீங்கள் மக்களுக்கு சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் மறுக்கிறபோது, மக்களைத் திறந்தவெளிச் சிறையில் சிக்கவைத்து அவமதிக்கிறபோது, மிருகங்களைக் கொல்வதைப் போல மக்களை நீங்கள் கொல்கிறபோது, அவர்களுக்குப் பெருங்கோபம் வருகிறது அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்டதைப் பிறருக்குச் செய்கிறார்கள். இதை நான் மீண்டும் மீண்டும் உலகுக்குச் சொல்கிறேன். ஏழு ஆண்டுகளாகச் சொல்கிறேன். யாரும் கேட்பதில்லை. இப்போது இது.

மிகவும் துணிச்சலான பாலஸ்தீனிய இதழியலாளர்கள் இருக்கிறார்கள். இந்தக் குண்டுவீச்சுத் தொடங்கியதிலிருந்து அவர்களில் முப்பத்தியொன்பது பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வீரநாயகர்கள். அதேபோலத்தான் உங்கள் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களும் செவிலியர்களும். அதேபோலத்தான் ஐ.நா.வின் ஊழியர்களும். அவர்களில் எண்பத்தொன்பது பேர் இறந்துபோய்விட்டார்கள். அதேபோலத்தான் அவசர ஊர்தி ஓட்டுநர்களும் மருத்துவ உதவியாளர்களும். அதேபோலத்தான் இடிபாடுகளில் காங்க்ரீட் பலகைகளைத் தங்கள் கரங்களால் அகற்றும் மீட்புக்குழுவினரும். அதேபோலத்தான் குண்டு வீச்சுக்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் உங்கள் அப்பாக்களும் அம்மாக்களும்.

ஆனால் நாங்கள் அங்கு இல்லை. இந்த முறை நாங்கள் இல்லை. நாங்கள் உள்ளே வரமுடியது. நாங்கள் அனுமதிக்கப்படவில்லை.

உலகெங்குமிருந்து செய்தியாளர்கள் ரஃபாவில் உள்ள எல்லைக் கடவுக்குச் சென்று கொண்டிருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் இந்தப் படுகொலையைப் பார்த்துக் கொண்டு எங்களால் ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது. நாளொன்றுக்கு 160 குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் இறந்துபோகிறார்கள். இந்தப் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் எனவே நாங்கள் அங்கு செல்கிறோம். நாங்கள் அங்கு செல்கிறோம், ஏனென்றால் உங்களைப் போன்ற குழந்தைகள் எங்களுக்கும் இருக்கிறார்கள். விலைமதிப்பில்லா, கள்ளங்கபடமற்ற, அன்புக்குரிய குழந்தைகள் இருக்கிறார்கள். நாங்கள் அங்கு செல்கிறோம் ஏனென்றால் நீங்கள் உயிர்வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஒருநாள் நாம் சந்திப்போம் என்று நம்புகிறேன். நீ பெரியவனாக ஆகியிருப்பாய், நான் வயதானவனாக ஆகியிருப்பேன். இருந்தாலும் இப்போதே உன்னைவிட நான் மிகவும் வயதானவன் தான். உனக்கான எனது கனவில் நான் உன்னைச் சுதந்திரமானவனாக, பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கக் காண்பேன். யாரும் உன்னைக் கொல்வதற்கு முயற்சி செய்ய மாட்டார். குண்டுகள் நிரம்பிய விமானங்களில் அல்ல, மக்கள் நிரம்பிய விமானங்களில் நீ பறந்து செல்வாய். நீ எந்த வதைமுகாமிலும் அடைக்கப்பட்டிருக்க மாட்டாய். நீ இந்த உலகைக் காண்பாய். நீ வளர்வாய், உனக்குக் குழந்தைகள் பிறப்பார்கள். உனக்கும் வயதாகும். இந்தத் துன்பத்தை நீ நினைவில் வைத்திருப்பாய், ஆனால் அதன் பொருள் துன்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு நீ உதவ வேண்டும் என்பதாகும். இது எனது நம்பிக்கை. இது எனது வேண்டுதல்.

எங்களால் உனக்கு உதவ முடியவில்லை. இது எங்கள் மனதைக் கனக்கச் செய்யும் குற்ற உணர்வாகும். நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் நாங்கள் போதுமான அளவுக்கு முயற்சி செய்யவில்லை. நாங்கள், செய்தியாளர்கள் பலர், ரஃபா செல்வோம். காசாவின் எல்லைக்கோட்டுக்கு வெளியே நின்று எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம். நாங்கள் எழுதுவோம், திரைப்படம் எடுப்போம். இதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம். அது ஒன்று பெரிய விடயம் அல்ல. சிறிதுதான். நாங்கள் உங்கள் கதையை மீண்டும் சொல்வோம்.

இது ஒருவேளை உங்களிடம் மன்னிப்பைக் கேட்பதற்குரிய உரிமையை எங்களுக்கு நீங்கள் அளிக்கப் போதுமானதாக இருக்கலாம்.

- கிரிஸ் ஹெட்ஜெஸ், புலிட்சர் விருதுபெற்ற இதழியலாளர். நியூயார்க் டைம்ஸ் இதழின் அயல்நாட்டுச் செய்தியாளராக பதினைந்து ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் அந்த இதழுக்கான மத்தியக் கிழக்குப் பிரிவின் தலைவராகவும் பால்கன் பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார்.

(நன்றி: ஜனதா வீக்லி)

தமிழில்: நிழல்வண்ணன்

Pin It