என்னை வாழச்சொல்லிச் சபிக்கும்

காலப்பெருந்துயர நிழலில்

மூர்ச்சையற்றுக்கிடக்கிறேன்

நூற்றாண்டுகள் தாண்டிய இருள்வெளியாய்..

 

நகரும் கணங்களின் மிக நிதான திசைகளில்

எதிரொலிக்கும் என் மௌனக்கதறல்கள்

துரிதகதியில் காற்றைப்பற்றிக்கொண்டே

திசைகளை நிரப்புகின்றன..

 

நீயும் நானும்

துரத்தும் மரணக்கால்களின்

சுவடுகளை அண்மித்தபடி

துயரக்கவிதைகளை பாடிக்கொண்டிருக்கிறோம்..

 

ஓப்பாரி ராகங்கள் நமது மூங்கில் துளைவழியே

கசிவது கண்டு வழிப்போக்கர்கள் நம்மை ஏளனிப்பது

எத்தனை விநோதமானது பார்…

 

செல்லும் வழிப்பயணங்களெல்லாம்

முடிவிடம் தொடுமென்ற

அசட்டு நம்பிக்கையில்

அவ்வப்போது தீ விழும் துயரம்

உனக்குமா நிகழ்ந்தேறுகிறது..???

 

எது குறித்த அக்கறையுமின்றி

நதியென நகரும் வாழ்க்கைப்பயணம்

 

எந்தப்புள்ளியிலாவது சந்திக்கலாம்

இல்லையேல் சந்திக்க முடியாமலே

புள்ளிகளாய்த் தொலையலாம்

அவளும் நானும் பிரிந்தது போலவே

நீயும் நானும்….

 

- நிந்தவூர் ஷிப்லி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It