அடர்ந்த காடுகளின் நிழலைப் போலொரு
முகங்களுடன் உயிர்த்தலையும் ஆன்மாக்கள்
குறித்த சித்திரத்தின் புத்தகம்
சற்று நேரத்தில் திறக்கப்படும்
ராஜ்ஜியங்களைப் பறிகொடுத்த
சக்கரவர்த்திகளின் சோகம் அது
போர்களங்களில் பத்தினிப் பெண்களின்
சாபங்களை முகத்தில் பூசிக்கொண்டவரவர்
தமது ஆளுகையின் பதாகையில்
சத்தியம் சொல்லி மரணங்களை
விதைத்தபோது உடைபடும் மௌனங்களை
தூக்கிலேற்றி வெந்து தணிந்தவர் நன்மக்கள்
காலம் கலைத்த புதிர்களின்
பெருங்குகைக்குள் சித்திரவதை முகாம்
நடப்பிலுள்ளது பிரதேசங்கள் மட்டும் மாறும்
ஒரே செங்கோலில் காலமும், அதிகாரமும்
கொன்றொழித்தலை நிகழ்த்திக்காட்டும் சூட்சுமம்
புனித கிரந்தங்களின் விதிகளிலுள்ளது
வாழ்ந்தவர்களை குறித்த அச்சம் அப்போது
இல்லையென்றாலும் காலக்கணக்கில்
நியாயதர்ம தராசில் மீண்டும்
தண்டிக்கப்படுவதற்கான சாத்தியங்களுடன்
பொழுதைக் குடித்து காத்திருக்கின்றனர்
ஒரு முழூநீள கதையின் நிறைவு போல.

- நட்சத்திரவாசி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It