பகல் முழுவதும் பறந்த பட்டம்
ராத்திரியில் ஒரு முறையாவது
படக்கென பறக்க எத்தனித்து
அடங்கிக் கொள்கிறது
பட்டம் விட்டவன் தூக்கத்தில்
உளறுவது போல...

*
ஒருவன் சற்றுமுன் அடக்கம் செய்த
மரணத்தை மறந்து தேநீர் குடித்தான்
ஒருவன் தேநீர் குடிப்பதையே மறந்து
மரணம் அருந்தினான்
அதன்பிறகு
எல்லாரும் அவரவர் மறதிக்குத்
தகுந்தாற் போல தேநீர் குடித்தார்கள்
தேநீர் அருந்தினார்கள்

*
ஒருக்காலும் ஆகாது என்றவள் தான்
சாம்பிராணி புகையை வீடு முழுக்க காட்டுகிறாள்
யாருக்குத் தெரியும்
பூகம்பம் வந்து பிழைக்க நேரிட்டால்
ஓயாது திட்டித் தீர்க்கும்
விக்கிரங்கள் சூழ்ந்த
கோயிலுக்குள்ளும் தங்க நேரிடலாம்
டெய்சி அத்தை

*
என்னை கீழே தள்ளி
அவமானப்படுத்திய பிறகும்
அவனோடு தான் குடிக்கிறேன்
அவனை அவனே தள்ளி விட்டுக் கொள்ளும்
ஒரு நாளில்
அவனை தூக்கி நிறுத்தி பாதுகாத்து
பலி தீர்த்துக் கொள்வேன்

*

பூட்டியிருக்கும் கோவில் வாசலிலும்
சந்து வழி தரிசனத்துக்கு
வரிசையில் நிற்போரிடம்
இடைவெளி இருக்கிறதா என்று
பார்த்து அதட்டி கெஞ்சி
ஒழுங்கு படுத்திக் கொண்டேயிருக்கும்
கிறுக்குத் தாத்தாவுக்கு
அப்படியே உள்ளிருக்கும் சாமி சிலையின் சாயல்

- கவிஜி

Pin It