எல்லையில் போர்

தலைவர்களின் கைகுலுக்கலில்
போர் நிறுத்தம் துவங்கியிருக்கும்.

புண்ணான உடலொன்றின் பொட்டலத்துக்கு
தாய்க் கிழவி காத்திருப்பாள்.

காதலின் கணவனுக்கு மனைவியும்
சாகச தகப்பனுக்கு பிள்ளைகளும்
காத்திருக்கத் தொடங்கி இருப்பார்கள்.

இக்கணத்தில் எனக்கு
என் தாய்நாட்டை
விற்றவனைத் தெரியவில்லை.
விலை கொடுத்தவரையெல்லாம் பார்க்கிறேன்.

******

மனைவிக்கான கடைசி வரிகள்

மெதுவாய் கொல்லுங்கள் எனை.
மனைவியின் அன்பு இதயத்துக்கு
என் கடைசி வரிகளை
எழுதிக் கொள்ள அவகாசமாய்
மெதுவாய்க் கொல்லுங்கள் எனை.
பெருஞ்சிரிப்புடன்,
என் மனைவியின் அன்பு இதயத்துக்கான
கடைசி வரிகளை மட்டும்
என்னிடமிருந்து எடுத்துக் கொண்டு,
மெதுவாய்க் கொன்றார்கள் எனை.

******

அடுத்த சந்திப்பு

பார்த்துக் கொள்வது எப்பொழுதென்றாள்.
போர் முடியும் மறுவருடம் என்றேன்.
போர் முடியும் எப்பொழுதென்றாள்.
பார்த்துக் கொள்வோமே அப்பொழுதென்றேன்.

******

பாலஸ்தீன் கவிஞன் மஹ்மூத் தர்வீஷ் எழுத்தை தழுவி, தமிழில் லேனா.பழ

Pin It