வீட்டை மறந்து
ஊரைத் துறந்து
உறவைப் பிரிந்து
மாநிலங்கள் தாண்டி
வாழ்வாதாரம் வேண்டி
துணிந்து இடம் பெயர்ந்தோம்
என்ன இடர் வரினும் காக்கும்
எங்கள் தேசம் என.

வானுயர்ந்த
கட்டிடங்களுக்காகவும்
வளைந்து நீண்ட
பாலங்களுக்காகவும்
மொழி அறியா ஊர்களில்
உழைத்தோம் ஓய்வின்றி
இது எங்கள் தேசம் என.

நோய்த் தொற்றுக்காக
தேசம் அணிந்து கொண்ட
பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே
நாங்கள் தூக்கி விசிறப்பட்ட போது
தொடங்கியது எம் பயணம்
கால்நடையாக
கோபமோ வருத்தமோ இன்றி
இது எங்கள் தேசம் என.

பாதங்கள் புண்ணாக
பசியும் வெயிலும் வாட்ட
எமக்கென்றிருக்கும் கூரைகளின் கீழ்
அடைக்கலமாகிட
பல்லாயிரக் கணக்கான மைல்களை
கடக்கிறோம் அகதிகளாக
இது எங்கள் தேசம் என.

பாதை தவறிவிடக் கூடாதென
இருப்புப்பாதை வழிசென்ற எம்மவர்
களைப்பிலே கண்ணயர அதுவே
கடைசி உறக்கமான
செய்தி கேட்டு
உடலும் உள்ளமும் நடுங்க
நடக்கிறோம் மெளனமாக
இது எங்கள் தேசம் என.

வேலைக்கு ஊதியம் என்றே
வாழ்ந்து பழகிவிட்ட நாங்கள்
சுயம் தொலைத்து
வேதனையுடனேயே
பற்றிக் கொள்கிறோம்
நீளும் உதவிக் கரங்களை
இன்னும் இருக்கிறார்கள்
எங்களுக்கும் சகோதரர்கள்
இந்தத் தேசத்தில் என.

தடுமாறும் முதியவர்கள்
தவிப்புடன் கர்ப்பிணிகள்
வதங்கிய மலர்களாய் குழந்தைகள்
உலர்ந்து மடியும் உயிர்கள்..
கண்ணீர் காய்ந்த கன்னங்களுடன்
தொடருகிறோம் துயருடன்
நேர்மையையும் உழைப்பையும் தவிர
வேறெதுவும் அறியாத எங்களால்
எழும்பிய தேசம்
இது எங்களுக்குத் தரும் வெகுமதி என.

- ராமலக்ஷ்மி

Pin It