பிடிக்கவில்லை என நேரில் கோபம் காட்டி
நிலைக் கண்ணாடியில் தாபம் பார்ப்பாயோ

வடிவம் வர பிசையும் சப்பாத்தி மாவில்
என்னை செய்கிறாய்
உன் அம்மாவிடம் பொம்மை என்கிறாய்

பூக்காரியிடம் இத்தனை நேரம் பேசுகிறாய்
பூச்சூடுவதை பிரார்த்தனை
போல செய்கிறாய்
எதிர் வீட்டு வாண்டு முகத்தில்
கண்கள் உருண்ட எமோஜி

காகம் கரைந்தால் வாசல் பார்க்கிறாய்
வானம் கரைந்தால் தூரம் பார்க்கிறாய்
வருவதென்னவோ என் குறுஞ்செய்திதான்

நல்லவேளை நான் சொந்தமில்லை
அல்லாக்கா தூக்க முடியுமா
பிரெஞ்சு கிஸ் தெரியுமா
உனதெல்லாப் புறணியும்
என்னைச் சுற்றியே இருந்திருக்கும் இப்படி

பஞ்சு மிட்டாய்க்காரனை உலவ விட்டு
என் பால்யத்தை வேவு பார்க்கிறாய்
ஐஸ்வண்டிக்காரனாய் வா என்பது உன்
கோடை கால வேண்டுதலோ

காய்கறி வாங்க வந்து விட்டு
மாத்தி மீன்கள் வாங்கிப் போகிறாய்
மத்தி மீன்கள் அவை என்பது ரகசிய ரசனை

கொடியில் காற்றுக்கு படபடக்கிறாய்
உன்னாடையோ என் பாட்டுக்கு ஈரம் சொட்டுகிறது
உன் வீட்டு மொட்டை மாடியில்
காற்றுக்கும் குழப்பம் தான்
என் பாட்டுக்கும் குழப்பம் தான்

- கவிஜி

Pin It