அருமைக்காட்சிகளின் தொகையது, இந்த
வெற்று உலகஎச்சங்களின் தேக்கமது.
ஆம்,
துச்சங்களும் உச்சங்களும்
எச்சமாகிய மிச்சங்களின் கூடமது.

அறிவிற் சிறந்தோரே!
சிறந்ததெலாம் இறந்தபின்னே
தொன்மமாகித் தொலைந்துபோயும்
தேய்ந்தொழிந்து இழிந்துமாயும்!
அறிவீர் சிறந்தோரே!

புயபலத்தான் புயமொழிந்தபின்
கூடும் மட்டும் கூட்டிக்கட்டி
கூடு எலும்புக்கூடு ஆனான்!

அமிலப்புட்டி ஆழ்ந்திருந்தும்,
உமிழத்தக்க வாடைபூண்டும்,
உருச்சிதையா பறவை, பாம்பும் பலவும்
கண்ணாடியுள் காட்சிப்பிழையாய்...

தொல் தோல் சுருள்கள் காணீர்!
முன் நாளின் உரை உறைகற்களவை!

அமிலப்புட்டி உள்ளேதான்
அஃறிணை என்றுமில்லை!
உயர்திணை ஒன்றுமில்லை!
ஆண்டானடிமை என்பதில்லை! எனில் இம்
மண்ணாங்கட்டித் தேவையில்லை!

உயிரிருந்து ஆண்டதெலாம்
உயிரிருந்து உலவுமெலாம்
உயிரிழந்தால் வேடிக்கைக்கே! ஆம்!
உயிருடையாரது வேடிக்கைக்கே!

உன் வேடிக்கை வேடங்களை
நாடிவந்துக் காண்கின்றார்!
வேடிக்கையின் வாடிக்கையாளர்!
நாளையை அறியாராய்! அவர்
வேடிக்கையின் வாடிக்கையாளர்!

காட்சிகளாய் நின்றவற்றால்
காட்சியகம் என்றழைப்பார்!
அரும்தத்துவச் சொற்குவியல்
அதிற்கண்டு, அகங்கண்டார்,
மெய்கண்டார் அவரேதாம் அருங்காட்சியகம் என்றழைத்ததார்...
- "அது சரி!
என்னையா யாரென்று தேடுகிறீர்கள் ...
நான்தான் நாளைய எலும்புக்கூடு பேசுகிறேன்...

என் சதையுடலை -ஊரார்
*விஜய்* என்றழைப்பார்கள்...

நீங்களும் அப்படியே குறித்துக்கொள்ளுங்கள் எலும்புக்கூடுகளே....!"

- சிவா விஜய்

Pin It