மெலிதாய் சொல்ல
வலிந்துச் சொல்ல
சொல்லாமலே விட்டுவிட
முயன்று முயன்று...

மெல்ல முடியாமல்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
வரைச் சட்டத்தை உடைத்து
கொட்டி விட்டாள் ஒருத்தி..

மீ-டு மீ-டு
நானும் தான்... நானும் தான்
கரும்புகையாக ஒலிகள்
தொடர் அலையாக

அக்கரும்புகை இருட்டில்
வரைச் சட்டம் இல்லாத
எதிர்மறை புகைப்படமென
தொங்க விடுவார்கள் சாரிசாரியாக..

மற்றொரு கழுவலுக்குப் பின்
மீண்டு வருவாய் வெளிச்சத்திற்கு
கைப்பட்டு அழியாதிருக்க
காலத்தால் மாறாதிருக்க
வரைச்சட்டமொன்று வடிவம் ஏற்கும்

அவ்வரைச்சட்டக் கண்ணாடியின்
பின்னுள்ள பிம்பம் உனதானது
முகம் பார்க்கும் கண்ணாடி அல்ல
உன் பிம்பம் பிரதிபிம்பமாக

புது அடையாளம் தேடலில்
உடல் மொழி மாற்று
உள்ள மொழி மாற்று
உன்னையே மாற்று
என நெருக்குகிற வேளைகளில்..

பிரகடனப் படுத்து-
நளினம்
மென்மை
மாண்பு
அன்பு...
இது எமது பிறப்புரிமை!

- கே.சித்ரா

Pin It