ஒவ்வொரு காதலும்
ஒவ்வொரு காரணம் சொல்லும்
சேர்வதற்கும் பிரிவதற்கும்
இல்லையேல்
பிரிவதற்கும் சேர்வதற்கும்.

ஒவ்வொரு காதலும்
ஒரு கீதை தான்.
ஒவ்வொரு காதலையும்
கொண்டாடும்
பக்தர்கள் நாம்.

ஆரம்ப காலங்கள் போல்
இல்லை நாங்களும்
எங்கள் காதலர்களும்.
ஒவ்வொருவரிடமும் கீதையும்
கீதைகளும் இருந்தது.
பாதைகள் ஏதுமற்று
தேவையுமில்லை.

கலாசாரம் என்றும் - பிறத்தியார்
ஏதும் கூறுவார் என்று என்றுமே
நாங்கள் நடித்ததில்லை. - நடித்தபடி
நீடித்ததில்லை.

சீதனச் சந்தையின்
சில்லறைத் தனங்கள் எல்லாம்
எங்களிடம் இல்லை. - அதை
எள்ளி நகையாடும்
எளியோர் கூட்டம் நாங்கள்.

பலகாலக் காதல்
முதல் காதல் என்ற
ஒரு காதல்
போன்ற
போலி கட்டுப்பாடுகள்
இயற்கைக்கு
எதிரான ஒழுங்குகள்
ஏதும் இருந்ததில்லை.
இயற்கையோடு இயைந்தவர்கள்
நாங்கள்.

இவற்றுக்காகவெல்லாம்
உன்னை பிடிக்கும்
இவற்றுக்காகவெல்லாம்
உன்னை பிடிக்காது - இது
தவிர ஏதுமில்லை.
நளினங்கள் இருந்ததே தவிர
நடிப்புகள் ஏதுமில்லை.

உணர்ச்சிகளும்
ஊடல்களும் இருந்தே தவிர
உதாரணங்கள் பார்த்து
காதலித்ததில்லை.

சுயத்தை இழந்து
சமூகம் புறணி சொல்லும்
காதலித்து விட்டோமென்றெல்லாம்
காதலித்து நடிப்பதில் - என்ன
சுகம் இருக்க முடியும்.

சுயமாக
சுதந்திரமாக காதலித்தல்
என்பது
சிற்றின்பமல்ல பேரின்பம்.

- புருஷோத்

Pin It