இடம் பொருள் ஏவல் ஒன்றுமில்லை
கை கோர்த்துக் கொண்டு நிறம் பார்ப்போம்
கண்ணுக்குள் நுழைந்து விட வழி பார்ப்போம்
தண்ணீருக்கு நிற்போம்
காதலால் தெருக் குழாய் கொட்டும்
என் பாட்டியிடம் குடம் குடமாய்
காக்காய் பிடிப்பாள்
அவள் அம்மாவிடம் சிறு புன்னகையில்
இடம் பிடிப்பேன்
கடும் வெயில் குளிர் சொட்டும்
கடும் குளிர் போர்வை மீட்டும்
மந்திரப் புன்னகை மாற்றிக் கொள்வோம்
மற்றவர்க்குத் தெரிந்தாலும்
தெரியாதென்றே நம்புவோம்
விடிய விடிய பேசியது உண்டு
விடிந்த பின் ஊர் பேசியதில் கள்ளச் சிரிப்பு
சுருள் முடி கேசத்தில்
சுளீர் புன்னகையில் அவள்
ஞாயிறு பூத்துக் குலுங்கும்
நானொரு நல்ல பூனையென
மெல்ல பிராண்டுவேன்
ஓடி விளையாடுகையில்
பின்னணி இசை இம்சிக்கும்
தேடித் தவிக்கையில்
குண்டு கன்னம் சிவக்க காத்திருப்பாள்
பின்னிரவு சுதா வீட்டு சந்தில்
முத்தமிட்டது நினைவில் இருக்கிறது
என் நிறம் பூசி ஊர் சுற்றியவள்
நிலவைக் கூட்டித் திரிவதாக சொல்வார்கள்
எங்களை சேர்த்துப் பேசாத ஆளில்லை
இருந்தால் பேச வைக்க பேசிக் கொள்வோம்
மார்க் வீட்டுத் திண்ணையில்
நாங்கள் எப்போதும் ஜோடிப் புறாக்கள்
எதிர்ப்படுகையில் எல்லாம்
நாங்கள் மாடப் புறாக்கள்
அப்போதெல்லாம் அப்பெரும் வீதியில்
நாங்களே நிறைந்திருந்தோம்
நாங்கள் மட்டுமே நிறைந்திருந்தோம்...!

- கவிஜி

Pin It