ஆயிரம் நாற்றுக்கள் குமிழ்ந்தெழும் 
அந்தக் கிளையில் 
வகுப்பறையின் கனமோடு 
காத்திருக்கிறேன் 
வழி தப்பி வந்து தலைக்கு மேல் 
வட்டமிட்ட பறவையாய் நீ 
சுழியில் கரையும் ஆழிக்குள் 
பனித்துளி படர்ந்த கால் தடங்கள் 
கீற்றில் முறிந்து நடக்கிறேன் 
என் வாழ்விடத்தை மாற்றிக் கொள்ள,
பூந்தோட்டமொன்றை 
விற்பனை செய்து 
கொண்டிருக்கிறான் அவன் 
பூக்கள் தம்முள் மாறி மாறி 
உதிர்க்கின்றன இதழ்களை 
ஒரே ஒரு பூவின் வாசம் 
என்னை முகர்கிறது 
வளர்ந்து பெருகி காற்றை அசைத்தது
என்னுள் நீ ஊர்ந்த தடம் ஆதித்யா

00 

எரிதழலில் மூழ்குமா சூரியன் 
என் கடலாய் கவர்ந்திழுக்கும் 
அலைச்சுழல் அல்லவா நீ

விழுங்கும் மூச்சில் கலக்கும் 
முரட்டுக் காற்றை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள் 
அது புயலை 
முடுக்கி விடுகிறது 
நொய்த நுரையீரலில்

விடை தெரிந்த வினாக்களை
நா உச்சரிக்கிறது 
நஞ்சையே முறிக்கும் மருந்து 
உன் நா தயாரிக்கும் எனவறிந்து.

சுற்றி மறைக்கப்பட்ட 
வானத்தை உடைக்கிறேன்
காயத்தை தழுவும் இறக்கைகள் 

விரிப்பதைத் தவிர 
துயர்களை இருண்ட வீதியில் 
கொட்டி விடுவதற்காக.

எனக்கான முகில்களை
உருவாக்குகிறாய்
அந்த முகில்களுக்கு மேலே 
நான் மலையேறிக் கொள்கையில் 
என் காயங்கள் உன்னில் 
சிவப்பேறி இருக்கக் கூடும்.

பூப்பந்தலின் நிழலில் உன்னை 
இளைப்பாற்றுகிறேன்.
எவ்வாறு இருப்பதாக 
நீ நினைக்கிறாயோ
அவ்வாறே என்னை 
மகிழ்ச்சியில் விரித்து 
துயரில் மடக்கி 
காயங்களின் கழிம்புகளை 
உன்னில் படர்த்துகிறேன்.

பேரலைகளைத் 
தாண்டுவதற்கான உத்தியாய் 
நெற்றியை முத்தமிடுகின்றன 
உன் தளிர்க் குஞ்சுகள்
கீற்றென ஈரலித்து.
நீ ஒளியா நிழலா மரமா"சொல்" ஆதித்யா

00

திறக்கும் கடற்குவளை எல்லாம்
நேசத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறாய் 
ஆவியாகி உப்பைச் 
சேகரிக்கிறேன்

நூல்களை திரித்து ஒளிர்த்தும்
தாய்ப்பிறை ஒன்றை 
அனுப்பி வைக்க உன்னால் முடியும்
தீய்ந்து போகிறது
கறுத்த ஊர் என்பது தெரியாமலிருக்குமா

மனதின் எல்லையில் 
பதற்றம் நிலவுகிறது 
நீ அன்பின் ஊற்றைக் கடத்துகிறாய்
ஏரிக்கரையில் வீழும் அருவியின் 
நீர்ப்பாய்வு போல.

மென் சூட்டில் 
குளிர்தாரகை ஒன்று சேதி சொன்னால் 
திருப்பி அனுப்பி வை 
அதனுள் உன் விழி பொருத்தி 

விடியலை தக்க வைத்துக் கொள்கிறேன் ஆதித்யா 

00

இரண்டு கைகளையும் 
ஒரு சேர அள்ளிப் பருகிய நீரில் 
நீ மூழ்கிய மூச்சு குமிழ்த்தது 
என் சுவாசமாய்

கொத்தி உடைத்து
ஆயுள் புடைத்த மனக்காகம்
ஈர மொழியில் கூடு கட்டியது 
வாழும் குயிலுக்கு

கரையொதுங்கிய உயிருக்குள்
பாய்மச் சுழியில் 
மழையின் நீர்மை

ஒன்றுமே இல்லை 
நைந்திருப்பினும் 
நிறம் அழியாத பூக்களில்
வேரின் இதயம் நீயென
துடித்துக் கொண்டே இருந்தது ஆதித்யா

00

உள்ளங்கையணையில் சாய்ந்துறங்கும் 
எழுத்துக்களின் இதயத்தில்
உன் நினைவுகளின் ஈர உடல்

மிதந்து வரும் அலைநுரையெங்கும் 
கால்த்தடம் கலைந்த மீதியாய் 
உலரும் வெண்மதிமுக நிழல்

பலவந்தமாக அபகரித்துப் போன 
காற்றின் மொழியில் 
மிதந்து மூழ்கும் 
ஒரு காதல் புழுத்தூண்டில்

வளர்த்த சிறைச் செட்டையில்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் 
வெல்ல முடியாத
எட்டுநாள் சுவாச முடிச்சு

தேங்கிய பள்ளத்தில் 
வளர்ந்து பெருகிய தவளை முட்டைகள் 
அடை மழையின் புழுதியேறிய புயல்

கொஞ்சம் நீரும் 
கொஞ்சம் மண்ணும் 
இன்னும் சித்திக்காத 
துளிர் விடும் 
பிஞ்சு வனாந்தரத்தில் கனவு ராத்திரி

கவிழ்த்துக் கொட்டிய
எழுத்துக் கூடையில் 
கடலா அலையா நுரையா
எது நீ "சொல்" ஆதித்யா!


- தமிழ் உதயா, 
லண்டன்

Pin It