இமைக்க மறந்த தருணத்தை
வெயிலாக்கி உரைத்ததில் குளிரானது
நாம் விழுங்கிய சொல்

ஒரே பார்வைக்குள் நான்கு விழிகள்
பதறி எடுத்த கண்களில்
காட்சி மாற்றிக் கொண்டோம்

நீ சொல் என நானும்
நானே சொல் என நீயும்
எதிர்முனை வினைகளோடு
அவரவர் எல்லைகள் காத்தோம்

ஒரு முறை பற்றிப் பிரிந்த
காலம் உறைந்து கிடந்தது
இடம் மாற்றியது நாமே தாம்

அவரவர் அறைக்குள் சென்ற பின்னும்
திறந்து கொண்டேயிருந்தன ஜன்னல்கள்
அடைக்க மறந்த கைகளில் ஆளுக்கொரு நாம்....!

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.