காவி உடுத்திய
ஐந்து பேரால்
வன்புணரப்பட்டு
உயிருக்காய்ப் போராடிக் கொண்டிருந்த மகள்
தீயில் தூக்கியெறியப்படுவதைத்
தடுக்க முடியாமல்
பார்த்துக்கொண்டிருந்தாள்
காவிகட்டிய வேறு நான்குபேரால்
வன்புணரப்பட்டு குற்றுயிராய்க் கிடந்த தாய்.

நெற்றி மயிர் பற்றி
தரதரவென இழுத்துவரப்பட்ட
நிறைமாதக் கர்ப்பிணியான மனைவி
நடுவீதியில் நிர்வானமாக்கப்பட்டு
காவிதரித்த கால்களால் மிதிபட்டு
வாளால்கீறி வெளியே எடுக்கப்பட்ட சிசு
தலை துண்டிக்கப்பட்டு
தீயில் வீசியெறியப்படுவதை
தடுக்க முடியாமல் கதறினான்
தீயில் உயிரோடு எரிந்து கொண்டிருந்த கணவன்.

ஐந்து தசாப்தங்கள்
அல்லும் பகலும் உழைத்து
கனவுகளோடும் கற்பனைகளோடும்
சாதாரணமாகக் கட்டப்பட்டு
திறப்பு விழாவுக்காகக் காத்திருந்த
தனது சின்னஞ்சிறிய பலசரக்குக் கடை
ஸ்ரீராம ஜெயத்தின் பெயரால்
பெற்றோல் ஊற்றிக் கொழுத்தப்படும் போது
தடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்
கை,கால்கள் துண்டிக்கப்பட்டு
வீதியில் செத்துக் கொண்டிருந்த
ஐம்பது வயதுக் கிழவன்.

கூப்பாடு போட்டு
கும்மாளமிட்டு மனித வேட்டையாடி
பச்சை மாமிசம் புசித்து
காவிக் கொடி காற்றில் அசைய
வெற்றிக் களிப்பில்
வெறியோடு செல்லும் தொண்டர்களை
தடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்
தலைவன்.

கொல்லப்பட்டதும் எரிக்கப்பட்டதுமான
ஆன்மாக்களின் அழுகை
வதோதேராவிலும்
வாணராசியிலும்
ஒலிக்காமலா போயிருக்கும்.

வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்க
பட்டாசு ஓசையில், பட்டுத் தெறிக்கின்றது,
உயிரோ டு எரிந்து கொலையுண்டு போன
குழந்தைகளின் சாபம்,
எதனையுங்கண்டு கொள்ளாமல்
காவல் புரிந்தார்கள் காவியுடையுடன்
தேசிய வீரர்கள்

கோத்ராவில் தொடங்கி, கோவை வரையும்
தேசமெங்கும் வெடிக்கும்
குண்டுகளுக்குப் பின்னாலும்,
எரி நெருப்புக்குப் பின்னாலும்
பொதிந்து கிடைக்கும்
கதிரைகள் பற்றியஅரசியல் கனவுகளை
கலைக்கமால் பார்த்துக் கொண்டிருந்து
காலம்

காலத்துக்குத் தெரியும்
எப்போது
எப்படி
மாற வேண்டுமென்பது.

தாயுமிழந்து தந்தையுமிழந்து
உறவுகளுமிழந்து
கலவரத்தின் போது பிறந்து
அதிஸ்டவசமாக உயிர்பிழைத்த
பன்னிரெண்டு வயது அநாதைச் சிறுவன்
குஜராத்தின் தெருவோரத்தில்
டீ விற்றுக் கொண்டிருந்தான்.
அல்லாஹ்வைக் கடவுளாக ஏற்றுக்கொண்டமனிதர்களுக்கு.

அதே வயதையொத்த
அதே வரலாற்றையுடைய
இன்னுமொரு அநாதைச் சிறுவன்
புதிய பிரதமருக்கு
வாழ்த்தட்டை எழுதிக் கொண்டிருந்தான்

காலத்துக்குத் தெரியும்
எப்போது
எப்படி
மாறவேண்டுமென்பது

முஸ்டீன், இலங்கை

Pin It