நெய்தோசை, வெண்பொங்கல் என கணக்கிட்டு
எண்பது ரூபாய் கொடுத்து வந்த அப்பாவிடம்,
"பாட்டி கடையில் நான் சாப்பிட்ட முட்டைய
மறந்துட்டீங்களே அப்பா!!"
கருவிழிகள் விரிய கேட்டு
வண்டி முன்புறம் ஏறி,
விரல்கள் ஒவ்வொன்றாய்
குறுக்கியும் நீட்டியும்
எண்ணத் துவங்குகிறாள் யாழினி....
"அடுத்த முறை கொடுத்து விடலாம்!
இப்போ என்னென்ன வேணும்
விளையாட, என் யாழினி குட்டிக்கு?" என்றதற்கு
இளஞ்சிவப்பு நிற பார்பி பொம்மை,
கலகலவென சிரித்துக் கொண்டிருக்கும்
கண்ணாடி வளையல்கள்,
வண்ண வண்ண விளக்குகளால்
உருகிக் கொண்டிருக்கும் கடைவீதி
என எதிலுமே லயிக்காமல்...
கொடுக்க மறந்த முட்டைக்கான
பத்து ரூபாயிலேயே
தொக்கிக் கொண்டு நிற்கிறது
வண்ணத்துப்பூச்சி சிறகுகளான மனம்..

- தேனு

Pin It