மீன் தேடச் சென்றவர்களை
நாம் தேடிச் செல்வோம்
பிறகு மீன்கள் நம்மையும் தேடி வரும்...

துரத்தும் புயலோ மிரட்டும் தோட்டாவோ
முன்பாதியில் மீன் சாகலாம்
பின்பாதியில் மீன்காரன் சாகலாம்

செதிலற்ற வார்த்தைகள்
வயிறு உப்பி மிதக்கும்
வங்காள விரிகுடா தீவொன்றில்...

தீபகற்ப தீர்க்கதரிசி என உலகை சுத்திகரிக்க
ஏதாவது உலக நாடொன்று
எண்ணெய் பிசுபிசுப்பைக் கொட்டலாம்...

மொய்க்கும் கேள்விகளை
வலையோடு விடுவோம் பிறகு
வாய் கிழிய அழுவோம்...

தொன்று தொட்டு வரும் கண்ணாமூச்சி
ஆட்டத்தில் ஆர்ப்பரிப்பு என்னவோ
கடலுக்குத் தான்....

இருக்கவே இருக்கிறது
எல்லாவற்றையும் மூடி சமன் செய்ய
எல்லா மனதுக்குள்ளும் எல்லா கடலுக்குள்ளும்
ஒரு சுனாமி....

- கவிஜி

Pin It