ஜன்னல் திற
அல்லது கதவு திற
குறைந்த பட்சம் கனவையாவது திற

*****

ஞாயிறு மழையில்
பால்ய
வேர்கள்...

*****

மீன் வாங்க நின்றிருந்தேன்
வரிசைக்கு செதில்
முளைத்திருந்தது

*****

ஒன்றுமில்லாமல் இருக்கிறது
ஞாயிறும்
அதன் தியரியும்

*****

உன் நட்பு விண்ணப்பம் காணுகையில்
வயிறு முட்ட சிரிக்கிறேன்
கொஞ்ச நேரம் செத்த நிலை

*****

என்னிடம் கேட்டிருக்கலாம்
காசு போடாவிட்டாலும்
கவிதை போட்டிருப்பேன்

*****

12 ஐ நெருங்கி இருந்தது
பகல்
12 ஆகி இருந்தது நிழல்...

*****


நீ வரும்போது மட்டும்தான்
கடவுள் முகத்தில் வெளிச்சம் விழுகிறது
யாரும் நம்புவதற்கில்லை அதற்காக
அது கடவுள் இல்லை என சொல்ல முடியுமா!

*****


இரவெல்லாம் அவிழ்த்து விட்டு
அதிகாலையில் கட்டிக் கொண்டிருந்தாள்
வரி வரியாய் சிரித்தன முயல்கள்

*****

முதல் தடவை போல
கை குலுக்குகிறாய்
முன்பொரு முறையாகிறது எதுவும்...

*****

விரைத்துக் கிடைக்கும் என் உடம்புக்கு
காது மட்டுமாவது கேட்கட்டும்
நீ கத்தி அழு...

*****

ஒரு முனையில் நீ
மறு முனையில் நான்
எம்முனையில் நாம்

*****

வௌவால் பறந்த பிறகு
கண்களில் சுழலுகிறது
சற்று நேரம் படபடக்கும் இருள்...

*****

இரவெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக
சுற்றிக் கொண்டிருந்த பூனையை
விடிகையில் சுவற்றில்
அடைத்துப் போயிருந்தான்
ஓவியன்...

- கவிஜி

Pin It