man waiting for lover copy

மென்சாரல் பார்வைகளை
திடும்மென மழையாக்குவதும்
பின் வறண்ட பூமியாக்குவதும்
உனது வாடிக்கை நிகழ்வுகளே...

உன்னைக் களவாடும்
தருணங்களை வேண்டுமென்றே
நீ தவற விடுவது உனது
மாயங்களின் நிகழ்த்துக் கலை...

எனது எல்லா காட்சிகளிலும்
முன்பின் சரிபாதி என
வந்து நிறைந்து கரைந்து
கண்ணடிக்கிறது
உனது நிழல் வாசங்கள்...

இலைகளின் தாலாட்டை
இணுங்கிய விழிகளோடு
எனைக் கடக்கும் உன்
சாயந்திரங்களை தெருவில்
அடை காக்கிறேன்...

தனிமை நாழிகைகளை
இனிமைக்குள் துவட்டி சொட்ட
செய்யும் உன்
ஈரப் பேச்சுக்களில்..
நான் கவிதைகள் கோர்க்கிறேன்....

எல்லா புள்ளிகளையும்
கோலமாக்கிடும் உன்
இருத்தலின் நினைவுகளோடு
அதோ தொடுவானத்தில்
ஊரும் பூமியென நகர்கிறது
என் இயல்பு...

வந்து சேர்வாய் என்றொரு
தவத்தை சுற்றி எனை போர்த்தி
இதோ உனக்கான வார்த்தைகளையும்
சேர்த்தே மௌனிக்கிறேன்..
முடிந்தால் சொல்லி விட்டுப் போ
ஒரு ம்.......

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.