amitshah tamizhisai

கூர்மையான பார்வையில்லை - அதில்
கொலைவெறி கொஞ்சமும் இல்லை
கோரப்பற்கள் இல்லை - அதில்
கொன்று தின்னும் உணர்வுகள் இல்லை
கிழித்தெறியும் நகங்கள் இல்லை - அதில்
சிக்குண்டு எந்த உயிரும்
சிதைந்ததேயில்லை

ஆனாலும்
இந்திய வரலாற்றில்
பார்ப்பனிய பரிமாணத்தால்
கொலை விலங்குகளாக
பரிணமித்துப் போனது
பாவப்பட்ட பசுக்கள் ....

உழவுக்குத் தோள் கொடுத்து
உணவாக பால் கொடுத்து
பறையிசைக்க தோல் கொடுத்து - எங்கள்
பசியடைக்க மேல் கொடுத்த பசுக்கள்
இன்று
பார்ப்பனியத்தின்
புனிதக் கூண்டில் அடைக்கப்பட்டு
காவிச்சாயம் ஊற்றப்பட்டு
கலவரக் குறியீடாக
பரிணமித்துக் கிடக்கின்றன

மனிதன் கால்நடையாக
அலைந்து திரிந்த காலந்தொட்டு
உடன் நடையாக
கூடவே வந்த பசுக்கள்,
மனுவின் காலந்தொட்டு
மனிதருக்குள் ஒரு பிரிவை
கால்நடையினும் கீழாய்
அவமதித்து அடக்கிவைக்கும்
ஆதிக்க குறியீடாக
பரிணமித்துக் கிடக்கின்றன

விவசாயம் வீழ்ந்துபட்டு
நிலமெல்லாம் கல் முளைத்து
நகரத்தின் வீதிகளில்
வீசியெறியப்பட்ட மனிதனோடு
உடன் வந்து
பசும்புல் மறந்து
பசை ஒட்டிய சுவரொட்டியை
பசியாறத் தின்று விட்டு
வீதியோரம்
வீழ்ந்து கிடக்கும்
பசுக்களுக்குத் தெரியாது
பார்ப்பனியம் உருவாக்கிய
வேட்டை விலங்கு
தான் என்று.....

- வீர பாண்டி

Pin It