பூத்தமலர் மணம்தன்னில் ; மலையி ருந்து
    பூரித்து விழும்அருவி ஓசை தன்னில்
காத்திருந்து காற்றுடனே கைகள் கோத்துக்
   காட்டுகின்ற செடிகொடிகள் அசைவு தன்னில் ;
மூத்தகுரல் இயற்கையதன் குரலைக் கேட்டு
   முன்னோர்கள் அறிவுதனை சேர்த்துக் கொண்டே
ஏத்தவொரு நோயற்ற வாழ்க்கை யாக
   எழிலோடே ஒன்றாக வாழ்ந்தி ருந்தார் !

இயற்கையதன் குரல்செவியில் கேட்டுக் கேட்டு
   இயங்காத நாதன்னை இயங்க வைத்து
மயக்குகின்ற வகையினிலே பேசக் கற்று
   மண்ணாளும் வலிமையானக் குரலைப் பெற்று
வயல்விளைத்து வசதிகளைப் பெருக்கு வித்து
   வகைவகையாய்க் கலைகளினை வளர வைத்து
செயற்கையிலே இயற்கையினை வெற்றி கொண்ட
   செயல்மிதப்பில் முழங்கிநின்றான் மனித னிங்கே !

மனிதன்தன் குரலினையே அடக்கு கின்ற
   மகத்தான குரலாக இயந்தி ரத்தின்
தனிக்குரல்தான் ஒலிக்குதின்று ! மண்ணை விண்ணைத்
   தனக்குள்ளே அடக்கியதால் மாறிற் றெல்லாம் !
மனிதத்தை பாசத்தை அமைதி தன்னை
   மாசற்ற சூழலினைத் தொலைத்து விட்டே
இனியெங்கே காண்பதென்னும் ஏக்கத் தோடே
   இருக்கின்றான் பொய்மானைக் கையில் வைத்தே !

- கருமலைத்தமிழாழன்

Pin It