காடுகளைக் கண்காணிக்க லைடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஸ்காட்லாந்து திட்டமிட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கும் மிதமான மழைக்காடுகள் முதல் கேம்கோங்ம்ஸ் (Cairngorms) பகுதியில் இருக்கும் புல்வெளிப் பிரதேசங்கள், இயற்கை நில அமைப்பு ஆகியவற்றின் முப்பரிணாமப் படமெடுத்து ஆராயப்படும்.

இதன் மூலம் நாட்டின் நில அமைப்பு மற்றும் சூழல் மண்டலங்களின் ஆரோக்கிய நிலை பற்றிய துல்லியமான தகவல்களை ஆண்டு முழுவதும் பெற முடியும். இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்டுத்தீ சம்பவங்கள் நிகழக்கூடிய இடங்களை முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகள், காட்டு மரங்களின் ஆரோக்கிய நிலை, அவற்றின் அளவு போன்றவை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெறலாம்.

லைடார் என்னும் லேசர் தொழில்நுட்பம்

லைடார் (Lidar) (Light Detection and Ranging) என்பது லேசர் கதிர்களைப் பயன்படுத்தி தொலை உணரி முறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை முப்பரிமாண ரீதியில் படமெடுத்து ஆராயும் முறை. இது காலநிலை, உயிர்ப் பன்மயத்தன்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தல், காடுகளில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கார்பன் சந்தை (Carbon marketing) பற்றி உயர் தொழில்நுட்ப தரவுகளைப் பெறுதல், புவி வெப்ப உயர்வினால் சூழல் மண்டலங்களில் ஏற்படும் மாற்றங்களை அறிய முடியும். இந்த தொழில்நுட்பம் துல்லியமான தகவல்களைத் தருகிறது.

வெவ்வேறு உயரத்தில் வளர்ந்திருக்கும் காட்டு மரங்கள் ஒவ்வொன்றின் உயரம், ஆரோக்கியம் பற்றியும் ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி, மரங்களின் வரிசைகளுக்கு இடையில் இருக்கும் காட்டுப் பாதைகளின் நிலை பற்றியும் லைடார் விவரங்களை வழங்குகிறது. சூழலில் நேர்மறையான பலன்கள் ஏற்பட இந்த தொழில்நுட்பம் அவசியமானது என்று தேசியப் பூங்காவின் இயற்கை மீட்பு குழுவின் கேம்கோர்ம் இணைப்பு (Cairngorm Connect) என்ற அமைப்பின் திட்ட அறிவியலாளர் பிலிப்பா கலிட் (Philippa Gullett) கூறுகிறார்.lidar image

(லைடார் படம்)

காட்டின் உண்மை நிலையறிய

லைடார் கருவிகள் பொருத்தப்படும்போது சூழல் மண்டலங்கள் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கும். இத்தொழில்நுட்பம் ஏற்கனவே நார்வே, ஸ்வீடன் மற்றும் யு எஸ் ஆகிய நாடுகளில் முழுமையாக நடைமுறையில் உள்ளது. காடுகளின் அமைப்பை அறிய லைடார் படங்கள் உலகளவில் துல்லிய தரமுடைய ஒரு தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

லேசர்கள் மரங்களின் உயரம், அடர்த்தியை கணக்கெடுக்க உதவுகிறது. கிடைக்கப் பெறும் தரவுகள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆராய்வதால் கிடைக்கும் அதே பலன்களைத் தருகிறது. கார்பன் சந்தையில் கிடைக்கும் நிதியை இயற்கை மீட்புத் திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப் பயன்படுத்த உலக நாடுகளுக்கு இது உதவும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக (UCLA) பேராசிரியர் சாசன் சாச்சை (Sassan Saatchi) கூறுகிறார்.

காடுகளும் கார்பனும்

காடுகள் உறிஞ்சும் அல்லது உமிழும் கார்பனின் அளவுகள் துல்லியமானதாக இருக்க வேண்டும். லைடார் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி எடுக்கப்படும் படங்கள் ஒரு நாட்டின் சூழல் ஆரோக்கியம் பற்றிய உண்மையான நிலையை எடுத்துக் கூறுகிறது. புல்வெளி நிலப்பரப்பு மற்றும் காடுகளில் இருக்கும் உயிர்ப்பொருள் (biomass) கார்பன் பற்றியும் இதன் மூலம் மதிப்பிட முடியும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக சூழல் மண்டல ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் யட்வேந்தர்சிங் மால்ஹை (Yadvinder Singh Malhi) கூறுகிறார்.

லைடார் தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே சிறிய அளவில் தனியாரால் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காடுகள் பற்றிய நிலையைத் துல்லியமாக அறிய முடிவதில்லை. ஸ்காட்லாந்து போல உலக நாடுகள் அனைத்தும் இயற்கை மீட்பிற்கும், சூழல் பாதுகாப்பிற்கும் இத்தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஸ்காட்லாந்தை மற்ற நாடுகள் இதற்கு முன்மாதிரியாகக் கொண்டு செயல்படவேண்டும் என்று சூழல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்கள்: 

https://www.theguardian.com/environment/2023/may/12/scotland-annual-laser-scan-monitor-forest-health-aoe?CMP=Share_AndroidApp_Other

&

https://towardsdatascience.com/applications-of-lidar-in-forestry-13686e1b15a7

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It