தமிழ் படிப்பாய்த் தூயத் தேனைச்
     சுவைப்பது போலே – யாவும்
தமிழில் படிப்பாய்க் கனிகளைச்
     சுவைப்பது போலே

தமிழைப் படிப்பின் அன்னைதன்
   அன்பை உணர்வாய் - நின்
தந்தைதம் அறிவை வீரத்தை
   செல்வமாய் சேர்ப்பாய்ச்
அயல்மொழி கற்றால் வயிறு
   வளர்க்கக் கூடும் - உனது
அன்னை மொழிகற்றால் உயர்வை
   வளர்த்துக் கூட்டும்
அன்னையும் தந்தையும் தெய்வ
   மென்பார் முன்னோர் - உன்
அன்னையும் தந்தையும் பேசியது
   தமிழன்றோ கண்ணே!

அன்புக்கு உண்மைப் பொருள்
   தமிழில்தான் உண்டு – நல்
அறத்தை வளர்க்கும் நூல்பல
   தமிழில்தான் உண்டு
அறிவைப் பெருக்கி மனிதம்
   வளர்த்திடும் யாண்டும் – தமிழே
அறியாமை போக்கி அறிவியல்
   சிந்தனை தூண்டும்
மானிடர் அனைவரும் மேதினில்
   சமமென் றாக்கும் - தமிழே
வானும் வையமும் அனைவர்க்கும்
   பொதுவென் றாக்கும்

பண்பை வளர்க்கும் நல்ல
   ஒழுக்கத்தைக் காக்கும் - தமிழ்
உண்மை ஒன்றையே உள்ளத்தில்
   என்றைக்கும் தேக்கும்
வன்மை வித்தது எண்ணத்தில்
   வீழாது காக்கும் - தமிழ்
தன்மானம் குன்றாது பிறர்மானம்
   மதித்திடச் செய்யும்
உன்னைநீ உணர்ந்தே உலகைப்
   புரிந்திடச் செய்யும் - தமிழ்
நின்மனம் நினைத்து முயன்றது
   கைக்கூடச் செய்யும்

நேர்மை நாணயம் நம்பிக்கை
   பண்பினைக் கற்பிக்கும் - தமிழ்ச்
சீருளத்துச் சான்றோரை நட்புக்கு
   அடையாளம் காட்டும்
இனமானம் மீட்டிட இனத்தோடு
   கொண்டு சேர்க்கும் - விரைந்து
வினைமுடிக்க ஊக்க மீந்து
   வெற்றியை நல்கும்
வாழ்க்கைத் துணையுன் விருப்பம்
   போலவே வாய்ப்பார் - நின்
வாழ்வெலாம் காதலில் இல்லற
    இன்பமே துய்ப்பார்;

மக்கள் செல்வங்கள் மாசறு
    பொன்னெனப் பிறப்பார் – எட்டுத்
திக்கெலாம் காற்றெனப் புகழை
   வீசியே வெல்வார்
முற்றிய கனியாய் முதுமைப்
   பருவத்தில் பட்டறிவை – கற்று
உற்றார் ஊரார்; பயன்பட
   நிறைவாக்கும் வாழ்வை
மறையாம் திருக்குறள் காட்டிடும்
   முடிவுரை புரியும் – தொண்டால்
நிறைவாழ்வு வாழ்ந்த மகிழ்வுடன்
   இன்னுயிர் பிரியும்.

- குயில்தாசன்

Pin It