கனிக்கன்னம் கிள்ளிவிட்டு கண்ணே! என்றான்
கட்டழகி முகம்சிவக்க என்ன அத்தான்!
இனிப்பான இரவிருக்க பகலில் வந்தேன்
இளித்தபடி நிற்கின்றீர் போவீர் என்றாள்.
தனித்தமிழே! இன்னுமிரு நாளில் பொங்கல்
தாவிவந்து முத்தமிட உள்ள தென்றான்.
பனித்தையில் பொங்கலிடல் வழக்கந் தானே!
பகல்நேரம் பரிதிவரல் இயற்கை என்றாள்.
 
செடிமஞ்சள் வாசத்தில் பொங்கல் வைத்து
செங்கரும்பைச் சேர்ந்துண்ணும் இனிமை என்னே!
அடி!கரும்பின் சாற்றைப்போல் இனிக்கும் பெண்ணே!
அடிக்கரும்பின் சுவைக்கிணைதான் ஏது என்றான்.
வெடிவிழாவாம் தீவாளி பிள்ளை யார்க்கு
வேடிக்கை விழாசதுர்த்தி; தசரா பூசை;
படிவிழாக்கள் என்றெல்லாம் பலவும் உண்டு
பச்சரிசிப் பொங்கலையேன் புகழு கின்றீர்.
 
நீயுரைத்த பண்டிகைகள் வடக்கால் இங்கு
நீண்டுவிட்ட விழாக்கள்தான்; தொன்று தொட்டு
நேயமிக்க தமிழர்கள் உழவர் தம்மை
நெஞ்சார வாழ்த்தும்நாள் பொங்கல் கண்ணே!
மாயங்கள் மந்திரங்கள் கதைகள் இல்லா
மாத்தமிழன் வியர்வையினை மதிக்கும் ஓர்நாள்.
ஆயிழையே என்னோடு நீயி ருந்து
அமுதுண்ணும் தலைப்பொங்கல் இதுதான் அன்பே!

தங்கமன உழைப்பாளர் இல்லம் பொங்கும்
தள்ளாடும் முதியோரின் உள்ளம் பொங்கும்
பொங்குமுயர் வள்ளுவத்தில் மூன்று பாலும்
பொழுதெல்லாம் மண்மணக்க சேர்ந்து பொங்கும்
சிங்கமென சிலிர்த்தாடும் இளைஞ் ருக்கோ
சீறியெழும் காளையுடன் வீரம் பொங்கும்
அங்கிங்கு எனாதபடி தமிழே பொங்கும்
அழகேநான் பொங்குவதும் அதனால் தானே!

காரிருளை கிழிக்கின்ற கதிரைக் கண்டு
கவினுலகம் மலர்கின்ற காலை போன்று
பாரெல்லாம் தமிழினத்தை மகிழச் செய்யும்
பண்பார்ந்த பயிர்த்திருநாள் பொங்கல் அன்றோ!
சீரெழுதி சிறப்பெழுதி தமிழர் மாண்பை
செருக்கோடு காக்கின்ற நாள்தான் பொங்கல்
ஏருழுத கைகளுக்கு நன்றி சொல்லும்
எழிலார்ந்த பொங்கல்தான் தமிழ்நா ளம்மா!

- கவியன்பன், திருத்தணி

Pin It