நன்றாய் திமிறி வளர்ந்த
தாத்தாவைப் போலவே
அத்தனை உறுதியாய்
கதவைக் காத்துக் கிடக்கும்
தாத்தாவின் பூட்டும்
அரை அடி சாவியைச் செருகி
முழுப் பலத்துடன் தாத்தா
மூன்று முறை திருக
பட்டென்ற பயங்கர ஒலியில்
திறந்து கொள்ளும் பூட்டு
தாத்தா மரித்து சில காலம் வரை
தொங்கிக் கிடந்தது அந்தப் பூட்டு
அதைத் திறக்கும் ஒவ்வொரு முறையும்
தாத்தாவைக் கடிந்து கொள்வார் அப்பா
பிறகு வீடு மாறிப் போகவே
பூட்டும் மாறிப் போனது
உள்ளங்கையளவு சைனாப் பூட்டில்
சிறுத்த சாவியை இடுகையில்
ஓசையின்றித் திறந்து கொள்ளும்
அந்தப் பூட்டு
எவருமில்லாத ஒரு நாள் பொழுதில்
இப்படித்தான் ஓசையின்றி
சாமான்களை கள்ளன் கொண்டு சென்று விட
மிக நீண்ட தினங்களுக்குப் பிறகு
வாய் திறந்தாள் பாட்டி
அவரு காலத்திலயெல்லாம்
ஒரு குண்டுமணி களவு போயிருக்குமா.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.