கால்வயிறு நிறைத்து உழுது
அழுது கொட்டிய கண்ணீரில்
வளர்த்து பெற்ற அறுவடை-
கற்களைச் சுமந்து அடுக்கிய தளம்
கொட்டும் மழையிலும் எரிக்கும்
வெயிலிலும் கூவிக்கூவி விற்ற காசு
மரத்தை அறுத்தும் இழைத்தும்
நுரையீரலைக் கொன்றும்
எச்சில் இலை எடுத்தும்
மிச்சப்படுத்திய காசு- உயிர்களின்
கர்வமாக ஓலைக் குடிசை உண்டியலில்.

அரசின் கஜானா காலியெனச்
சொல்லி உண்டியலை
உடைத்தது அரசர் ஆணை
மந்திரிகளோடு பவனி வந்த
மூத்த மந்திரி குடியாட்சி
வாழ்கவெனச் சொல்லி
கொடியேற்றி சாக்லேட்
வழங்கினார் குடிசைகளுக்கு.
வள்ளல் மந்திரி வாழ்கவென
வால் போஸ்டர் குடிசையை
மறைத்து நின்றிருக்கிறது. 

- சோமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It