கடந்த சுவடுகள் வழியாய் தொட்டு
அப்படியே அதன் பின் பயணிப்பதைப் போன்ற அரூபம்
பாதங்கள் வழியாய் முட்டி நிற்கும் அந்த அலைகளில்
மெல்லப் பூத்துக் குலுங்கும்
கழித்தோட்டிய நாற்சந்திக் கழிவுகள் வாயிலாகவும்
ஏழெட்டு எமகாதகர்கள் அள்ளியிறைத்ததைப் போன்ற
பெருங்குட அலைகள் வாயிலாகவும்
என்னருகாமையில கடல் கவிழ்ந்து திரும்பும்
அதி அற்புதங்களிலான சில பிரதேசங்களை
நிறை தழும்பி நிற்கும் அந்தரங்க பொக்கிஷங்களை
அப்படியே இருகரமள்ளித் திணிப்பதைப் போல்
வலுத்த அதன் சீற்றங்களில் அள்ளியிறைத்துத் திரும்பும்
கரை வழியே கரைந்தொழிந்து போகாத அதன் ராஜாங்கத்தை
ஆறடி தூரம் குதித்தெழும்பும் அதன் கும்மாளங்களை
எகிறித் தாவும் அதன் இரைச்சல் வழியாய்
என் செவி பற்றி உள்ளுக்கிறங்கும்
வெகுநாள் முதற்கொண்டான எங்கள் புராதன பந்தங்களை
கடுத்துத் திரும்பும் காதலி போலாயும்
குட்டியுணர்த்தும் உறவில் உற்றவன் போலாயும்
எதையோ முயன்று பின் இயலாத் திரும்பும் அவ்வலைகளில்
என் கடந்த காலங்களை பொறுக்கிக் கொண்டிருப்பேன் நான்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.