"அணி' மீண்டும் மலர்கிறது!

"ஓமென் றுரைத்தனர் தேவர் - ஓம்!

ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்

பூமியதிர்ச்சி உண்டாச்சு விண்ணை

பூழிப்படுத்திய தாஞ்சுழற் காற்று"

ஒண்ணுமில்லை... பின்ணணியில் ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட் இருந்தா நல்லாயிருக்கும்ல! சற்றேறக்குறைய இரண்டாண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் புத்துயிர்ப்போடு எழுகிறது "“அணி'. இதுகாறும் "“அணி' வெளிவராததற்கு அந்நிய நாட்டு சதியோ, மாவோயிஸ்ட் தீவிரவாத தாக்குதலோ, ராஜபக்ஷேவின் திருப்பதி பயணமோ, வருமானவரி உயர்வு, விலைவாசி பிரச்சினையோ காரணமென நீங்க நினைக்கக் கூடும்! ஆனா பாருங்க அதெல்லாம் காரணமில்லை! வேறென்ன? எங்களிருவரின் புருஷார்த்த குணமாகிய சோம்பேறித்தனமே காரணம்! மட்டுமல்லாமல் நேத்து ராத்திரி (யம்மா...) மிஸ் தமிழ்த்தாய் எங்கள் கனவில் எழுந்தருளி "“பொறுத்தது போதும் மக்களே பொங்கி எழுங்க!' என்று உசுப்பி விட்டதும் ஓர் காரணமெனில் தமிழ் கூறும் நல்லுலகம் நம்பாமலா போய்விடும்!

திலகபாமா, புதியமாதவி, சக்தி அருளானந்தம், இரா. தமிழரசி எனத் தேர்ந்த முன்னோர்களோடு கா.வ. கன்னியப்பன், ஜெ.பாலா, உக்கிரன் சேகுவாரா போன்ற புதிய தலைமுறைகளும் களம் இறங்குகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க சங்கதி கவிஞர். கா.வ.கன்னியப்பன் பழங்குடி இனமான இருளர் சமூகத்தைச் சார்ந்த கல்லூரி முடித்த இளைஞர். தமிழில் சிறுகதை, புதினம், நாடகம் எனப் பலதளங்களில் சாதனை படைத்த ஜெயந்தன் அவர்களுக்கு கம்பீரமான அஞ்சலி. கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கூடறாங்களாம்! இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் பதிவாகின்ற தருணத்தில் தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் பரிதாப நிலையும், தமிழ்ப் படித்தவர்களின் அவலமும், தமிழ்ப் படங்களுக்கு தமிழ் தலைப்புக்கான (!) அரசு உதவித்தொகையின் அபத்தமும் உங்களுக்குத் தொந்தரவு தராமலிருக்க நீங்கள் மானாட மயிலாட பார்த்து ரசிக்கலாம்; அல்லது 24 மணி நேர FM ல் பாட்டுக் கேட்கலாம் தமிழர்களே!! இந்தப் பின்னணியோடு தினமணி மதியின் கார்ட்டூன் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.   தமிழ்மொழி .... செம்மொழி........கனிமொழி... வால்க டமில்!

கொட்டாவி கலைந்த சுறுசுறுப்புடன்

அன்பாதவன் (94874 16446)

மதியழகன் சுப்பையா (093233 06677)

அடுத்த அணி தலித் கவிதை சிறப்பிதழ் படைப்புகள் தருக!

Pin It