வாழ்க்கையின் பல எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்படும் சில மனிதர்களின் நியாயமற்ற நடத்தை, தற்குறித்தனமான (கு)தர்க்கம்…. என எவ்வளவோ விஷயங்களுக்கான காரணம் புரிபடாமல் இருக்கும் ஒவ்வொரு முறையும் மனம் சளைக்காமல் ஒரே கேள்வியில் வந்து நிற்கும்: “என்னத்துக்கு இப்படி….?”. மண்டையைக் குடைந்தெடுக்கும் இக்கேள்வியைப் பெரும்பாலும் புறந்தள்ளி சிலவற்றை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு செல்லப் பழகியிருப்போம். ஏனெனில் அவற்றுக்கெல்லாம் பேதைமையைத் தாண்டிய பெரிய/உருப்படியான பதில் இருப்பதில்லை. ஆனால் சமீபமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இருந்து இக்கேள்வி அகல மறுத்து முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறது.naming 700அந்தக் கொடுமையை என் வாயால் எப்படிச் சொல்வேன்? அதனால் எழுதுவதென்று முடிவெடுத்துவிட்டேன். ஒரு தனி மனிதனது…. குறிப்பிட்டுச் சொல்வதாய் இருந்தால் தாம் ஈன்றெடுத்த மக்கட்செல்வத்தின் மாபெரும் அடையாளத்தை முளையிலிருந்தே சிதைக்கும் உன்னத நோக்கில், அத்தொண்டில் காலங்காலமாக ஈடுபட்டு வரும் அரியவகை அம்மா அப்பாக்களைத்தான் வியந்துட்டே இருக்கேன்!

நூதனமாகப் பெயரிடும் சூட்சுமத்தை அலசி துவைத்துக்காய வைத்து இஸ்திரி போட்டதில் கிடைத்தவைதாம் கீழ்க்காணும் நுணுக்கங்கள்.

  • முதலில் தமிழ்ப்பெயர்களுக்கு ஒலிப்பியலின் அடிப்படையிலான ஒலிகளை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் - ஷ, ஹ, ஸ, ஜ, க்ஷ. ஆமா! ஆமா! தமிழ்ப் பெயருக்குத்தான் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்! ஏன் ஒரு தினுசாக உங்கள் புருவங்கள் வளைந்து நெளிந்து நெரிகின்றன? இவற்றையெல்லாம் தமிழாகக் கருதத் துவங்கிதான் வெகு காலமாயிற்றே! பல ஜோசியக்காரர்களின் புண்ணியத்தில் ர, ய, ல ஆகிய எழுத்துகளில் துவங்கும் தமிழ்ப் பெயர்கள்(!) கூட முளைத்துவிட்டன. தமிழின் சொற்களஞ்சியத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் இந்த அரும்பெரும் பணி ஒரு சமூகமாக அனைவராலும் முன்னெடுக்கப்படுவது பெருமைக்குரிய விஷயம்தானே!
  • இரண்டாம் தொகுதி: ர, த, ய மூன்றாம் தொகுதி: ப்ர, த்ர… போன்று ஏதேனும் ஒரு மெய் எழுத்தின் அடுத்து இரண்டாம் தொகுதியில் உள்ள ஏதேனும் ஓர் எழுத்தைச் சேர்த்துக் கொள்வது.
  • இம்மூன்று தொகுதிகள்தாம் பிரதானம். இவற்றிலிருந்து பிடித்தவற்றை ஒரு வாணலியில் பசு நெய் இட்டு நன்கு வதக்கவும். நாவுக்கு இன்னும் நோவு வர வைக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் மேலும் சில பல ஒலிகளைத் தேவைக்கேற்ப கண்ணை மூடிக்கொண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
  • ‘கண்ணை மூடிக்கொண்டு’ என்பதை நீங்கள் நம்பவில்லைதானே? இதோ ஆதாரத்தோடு நிறுவுகிறேன். ரியான்ஷ், ரித்திகா, ரித்வி போன்ற பெயர்கள் போதுமான அளவு நாராசமாக இல்லை என்று தோன்றினால் ஒவ்வொரு பெயரின் முன்னும் ‘ஹ்’ இட்டுப் பாருங்கள்.
  • முதல் சுற்றில் தேர்வான பெயர்ப் பட்டியலில், நாம் பள்ளியில் படித்த வரிசைமாற்றம் மற்றும் சேர்வு (permutation and combination) கோட்பாட்டைக் கட்டவிழ்த்துவிட்டால்…. வானமே எல்லை. உதாரணம்: ப்ரணீதா, ப்ரதீக்ஷா – இவை இரண்டும் சேர்ந்து எண்ணற்ற குட்டிகள் போடும். ப்ரணீக்ஷா, ப்ரணீஷா, ப்ரதீஷா, ப்ரக்ஷா,…. ப்ரஷ் என்று கூட வையுங்கள். யார் கேட்கிறார்கள்? நான் சும்மா விளையாட்டாக உருவாக்கிய ஒவ்வொரு பெயருக்கும் நிஜமாகவே ஒரு பொருளைக் காட்டுகிறார் கூகுள் ஆண்டவர்.
  • இம்முறையில் பெயர் வைக்கத் தேடும் போது ஆண், பெண் என்று தனியாகவெல்லாம் தேட வேண்டியதில்லை. கிரீஷ், ஹர்ஷ், மணீஷ், ப்ரணீஷ், ஆத்விக், சாத்விக், ரித்திக்,…. ஷ், க் ஆகியவற்றை முறையே ஷா, கா என மாற்றினால் ஆண்பால் பெயர்கள் அனைத்தும் பெண்பால் பெயர்கள் ஆகிவிடப் போகின்றன.
  • இச்செயல்முறையின் போது நினைவில் கொள்ள வேண்டிய தலையாய விஷயம்: ஒரு பெயருக்கு கூகுள் என்ன பொருள் சொல்கிறது என்பதுதான் முக்கியம். அப்பெயரின் தேவபாடை வேர்ச்சொல்லின் பொருள் எல்லாம் தேவையற்றது. உதாரணமாக, ‘ஆரவ்’ என்ற பெயரைக் கொள்ளுங்கள். சாந்தமான, அமைதியான என்று கூகுள் கூறும் பொருளோடு நிறுத்திக் கொள்ளுதல் நலம். அதன் வேர்ச்சொல்லின் பொருளான சத்தம், முழக்கம் என்பவற்றை அறிய முற்படுவதெல்லாம் தேவையில்லாத ஆணி. நிவான் என்பதற்கு ‘புனிதமான’ என்று ஏதோ ஒரு வலைப்பக்கம் சொன்னால் அகமகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு சென்றுவிடுங்கள். ‘சேறு’, ‘சதுப்பளம்’ போன்ற அதன் உண்மையான பொருள் எல்லாம் எவனுக்குத் தேவை?
  • பெரும்பாலான நவீன பெயர்கள் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்டவை என்பதால் அவற்றுக்கென்று ஒரு பொருள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. வாயில் வந்த பொருளை அடித்து விட வேண்டியதுதான்.
  • மிக அபூர்வமாக தாத்தா, ஆச்சியின் பெயர்களை இட விரும்பி அவர்களுடைய பெயர்கள் பழையதாக இருப்பதாக நினைத்தால், குப்புசாமியின் பேரன் ‘குப்ரீஷ்’ ஆகவும், முனியம்மாவின் பேத்தி ‘முனித்ரா’வாகவும் இருந்துவிட்டுப் போகட்டும் என்று துணிந்து முடிவெடுக்கலாம்.
  • கற்பனை வளம் நிறைந்து பொங்கி வழிந்து ஆறெனப் பெருக்கெடுத்துக் கடலில் கலக்கும் ஒரு வழிமுறையும் இருக்கிறது. சம்பந்தமே இல்லாத இரு பெயர்கள் இறுதிச்சுற்றில் தேர்வாகிவிட்டது எனக் கொள்ளுங்கள். ஒன்று குடும்பத்தில் உள்ள ஒருவரது பெயர், இன்னொன்று நாவைப்பின்னிக் கொள்ள வைக்கும் பெயர். இப்போது எப்படி இரண்டையும் இணைப்பது என்றுதானே குழப்பம்? இருக்கவே இருக்கிறது @, அதாவது (எ) – என்ற. விசாலாட்சி (எ) ஷனாயா – WAH! (இல்ல இல்ல… வாந்தி எடுக்கல. வாவ் என்று அதிசயிக்கிறேன்!) Whatte creativity!
  • அப்புறம்… சும்மா புள்ளைய போட்டு நொய் நொய்ன்னு கூப்பிட்டு யாரும் தொல்லை பண்ணக்கூடாது என நினைப்பவர்கள் கையாள வேண்டிய உத்தி – வண்டி ஓட்டத் தெரியாத ஒருவர் carஐ துவக்க முனையும் போது engine கரட்டு கரட்டு என முட்டி நிற்கும்; அது போன்ற பெயர்களை வைத்துவிட்டால் அப்பெயர் சொல்லி அழைப்பதற்குள் அழைப்பவரின் ஆத்மா சாந்தி அடைந்துவிடும். பரிந்துரைகள் – ரௌனக் மித்ரன், புஷ்பக் நேத்ரன், ஷஷாங்க் ரிஷான், ஷாஷாங்க் ரிடம்ப்ஷன்……
  • குழவியின் பெற்றோரில் ஒருவர் தாய்மொழிப் பற்று மேலிட்டு ஒரு நல்ல தமிழ்ப் பெயருடன் வந்து நின்றால் பெயர் சூட்டும் விழா துவங்கும் ஒரு நொடி முன்பு வரை குட்டையைக் குழப்பி அப்பெயரைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டே இருத்தல்தான் உறவுகள் ஏற்றெடுக்க வேண்டிய க(ம)டமை கண்ணியம் கட்டுப்பாடு. தம் பங்குக்கு எல்லா குரளி வித்தைகளுக்கும் அப்பெயரை உட்படுத்தி குறைந்தபட்சம் பெயரின் முன் ‘சாய்’ சேர்த்துப் பெயரில் ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு…’ என விளையாடி விட்டு வருதல் விலா எலும்புக்கு நன்மை பயக்கும்; ஒரு நல்ல பெயரை வெட்டிச் ‘சாய்’த்த பெருமையை வென்றெடுக்க உதவும்… என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
  • குடும்பத்தினரின் பெயர்களில் இருந்து ஒவ்வொரு எழுத்தாக எடுத்து டப்பாவில் போட்டுக் குலுக்கிப் பெயர் முடிவு செய்யும் ஒரு விசித்திரமான பழக்கம் இடையில் ஒரு காலகட்டத்தில் பரவலாக இருந்ததாகத் தரவுகள் கெக்கலிக்கின்றன. உதாரணம்: குழந்தையின் சுற்றத்தில் உள்ள பெயர்கள் விபரம்: அம்மா வழி ஆச்சி: மஞ்சுளா அப்பா வழி ஆச்சி: கங்கா அம்மா வழித் தாத்தா: கிருஷ்ணமூர்த்தி அப்பா வழித் தாத்தா: குப்புசாமி அம்மா: பல்லவி அப்பா: ப்ரஹலாத்
  • அடிக்கோடிட்ட எழுத்துக்களை மேற்கூறியது போல் டப்பாவில் போட்டுக் கையிலெடுத்து சிவபெருமானின் ‘தாண்டவ’ ஆட்டத்தை அரங்கேற்றி முடித்துப் பக்திப் பரவசத்தோடு டப்பாவைக் கொட்டிப் பார்த்தால் பெயர் தானாகக் கோர்த்து நிற்கும் - ‘மங்கி குல்லா’. ஈஸ்வரனே அருளித் தந்த ‘நாமம்’ என்று ‘பட்டை’யைக் கிளப்ப வேண்டியதுதான் பாக்கி.

இவ்வாறான பெயர்களுடன் தங்களையோ தங்களது குழந்தைகளையோ அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் அனைவரும் என் short term memory lossக்கு இரையாகிவிடுகிறார்கள். அப்பெயர்கள் மனதினுள் செல்வேனா என அடம் பிடித்து மறுத்து பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் எடுத்து மறைந்துவிடுகிறது.

அதே தமிழ்ப் பெயர்கள் கொண்டவர்களாயின்…. ஒரு முறை Ronkonkomaவில் இருந்த Walmartல் எட்டு மாதக் குழந்தை ஒருவளையும் அவளது பெற்றோரையும் எதிரில் வரக் கண்டோம். முகம் தென் இந்தியா எனக் காட்டிக் கொடுக்க, புன்னகைப் பரிமாற்றம் நிகழ்ந்தது. இயல்பாகத் துவங்கிய ஊர் பெயர் உள்ளிட்ட அறிமுக விசாரிப்புகள் குழந்தையின் பெயருக்கு வந்தடைந்தது. யாழ் நிலா! அட! ‘தேடித் தேடி நல்லாத்தான்யா வைக்குறாங்க’ என்று மனம் குதூகலிக்கவும் ரசனையான பெயர் சூட்டியதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்து டாட்டா சொல்லி விடை பெற்றுவிட்டோம். அதன் பிறகு அவர்களைப் பார்த்ததேயில்லை. அலைபேசி எண், முகவரி என்று எதையுமே பரிமாறிக்கொள்ளவில்லை ஆதலால் இனியும் பார்ப்பதற்கான சாத்தியக் கூறுகள் கிட்டத்தட்ட கிடையாது. ஆனால் அப்பெயர் எந்நாளும் எம் மனதில் நிலவும்.

‘மண்ணாங்கட்டி’ என்னும் பெயரைக் கேட்டால் சுழியும் முகம் (தாராளமாகச் சுழித்து விட்டுப் போங்கள்! அது இல்லை பிரச்சனை) Clay Walkerஐ கேட்டால் எவ்விதச் சலனமும் இன்றி இயல்பாக இருப்பதெப்படி? LongWood, Emma Stone, Kate Moss, Megan Fox,…. இப்படியாக நாய், நரி, மரக்கட்டை, கல்லு, மண்ணு, சகதி என்ற பெயர்கள் ஆங்கிலத்தில் இன்னும் பரவலாகத்தான் இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் இன்றும் தங்களது முன்னோர்களின் தொழில்களை எவ்விதக் கூச்சமுமின்றி குடும்பப் பெயர்களாகக்(surname) கொண்டுள்ளனர் – mason, baker, smith, miller, shepherd, thatcher, tanner, chandler…. ஒரு பண்பட்ட சமூகமாக நாம் இப்படியெல்லாம் பெயரிட வேண்டாம். கூடவும் கூடாது. ஆனால் நல்ல தமிழ்ப்பெயர் வைப்பதற்கே ஏன் வலிக்கிறது?

அப்படியாவது பகவானுக்குத் தெரிந்த அந்த ஒரே மொழியில் வைக்கப்படும் அப்பெயர்கள் இனிமையாக இருந்தாலும் பரவாயில்லை. புதிதாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக “பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாருக்கு!” என்று எப்படிக் கூற இயலும்? வளமான செம்மையான தமிழ்ப்பெயர்கள் இருக்க…. கனிஇருப்பக் காய் கவர்ந்தற்று! வேற என்னத்தச் சொல்ல?

யாழினி, மகிழினி, புகழினி, தளிர், இனியா, இளவேனில், வாலறிவன், ஆதன், இளன், நிலன், பாரி…… - இத்தமிழ்ப் பெயர்களுக்கு என்ன குறைச்சல்? இப்பெயர்கள் எப்படி எங்ஙனம் எவ்வாறு சிறப்பல்லாதவையாகத் தெரிய முடியும்? இயல்பாகவே அழகியல் உணர்வு(aesthetics), மொழி உணர்வு அறவே இல்லாமல் அவதரித்த காணாததைக் கண்ட கனவான்களுக்குத்தான் தமிழைத் தாய்மொழியாகப் பெற்றதன் அருமை சற்றும் தெரியாமல் போகும். அதற்காக இவர்களெல்லாம் தமிழினத்தின் சாபக்கேடு என்றெல்லாம் கூற முடியாதல்லவா? அதனால் என் ஆதங்கத்தை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

ஒரு குழந்தையின் முக்கிய அடையாளம் – அக்குழவியின் பெயர். வாழ்க்கை முழுக்கக் கூடவே வரப்போகிற ஒருவரது பெயர் – அவரது குடும்பத்தின் ஊர், மொழி, நாகரிகம், பண்பாடு, கருத்தியல் என ஏதோ ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ சுட்டுவதாக அமைவதே உலக வழக்கம். அதுவே இயல்பும் நியாயமும் கூட.

ஆனால் தமிழ்ப் பெற்றோர் தம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதில்தான் … இல்ல! இல்ல! தமிழை ‘மாத்ருபாஷா’வாகக்(தாய்மொழியாகக்) கொண்ட ‘மாதா’ ‘பிதா’க்கள் தம் ‘சிசு’க்களுக்கு ‘நாமகரணம்’ செய்யும் லட்சணத்தில் மட்டுமே தாம் ஒரு பூர்ஷ்வா (Bourgeois) மனநிலையை (நிலை அல்ல! மனநிலைதான்!) அடைய முடியும் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர். அந்தச் செயற்கையான மேட்டுக்குடி மனப்பான்மையை வலிந்து பெற தமது அடுத்த தலைமுறையின் அடையாளத்தையே பாடையில் ஏற்றுவதைப் பூடகமாகக் குறிக்கத்தான் தேவபாடையைத் தேர்வு செய்கின்றனரோ?

‘குழந்தையைப் பெற்றெடுக்கும் முன் பெயர் வைக்காதே’ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் தற்காலச் சூழலைப் பார்த்தால் கருவுறும் முன்பே குழந்தையின் பெயரை முடிவு செய்து கூறச் சொல்லி அதன் அடிப்படையில் குழந்தை பெற்றுக் கொள்ளுதலுக்கான உரிமத்தை வழங்கி அனுமதிக்கலாம் போலும்.

என்னமோ போங்க.

‘என் குழந்தையின் பெயர் uniqueஆக இருக்க வேண்டும்’ – ‘தனித்துவம்’னு வச்சுட்டுப் போறதுதானே? Each individual is unique, just like everyone else!

‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டால் ‘அப்போ எதிலுமே என்னதான் இருக்கிறது?’ என்று மறுமொழிவேன். ஆக்கமான பெயர் தேர்வு செய்தவர்களுக்கெல்லாம் ஜெகப்பிரியர் ஒரு கேடு!

‘பெயரில்தான் மொழிப்பற்றைக் காண்பிக்க வேண்டும் என்பதில்லை’ – ‘மிகவும் சரி. ஆனால் அப்படியே வேறு எதில் காண்பிக்கலாம் என்பதையும் கூறிவிட்டால் பாடையைத் தூக்கிரலாம்’.

பள்ளியிலும் இந்தி, ஃப்ரெஞ்சு எனப் படிக்க வைத்தவர்களுக்கு/வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வக்கணையெல்லாம் தேவைதானா?

Nowadays kids’ name looks like they were chosen by looking at the monitor after a cat ran over the keyboard.

கருத்தியல் ரீதியாக ஒரு சமூக செயற்பாட்டாளர்/ புரட்சியாளர்/ போராளி/ தலைவர் பிடிக்கும் என சேகுவாரா, மார்க்ஸ், லெனின், அண்ணாதுரை…. என்றாவது பெயரிட்டுவிட்டுப் போங்களேன். பெரிய சித்தாந்தங்களைத் தூக்கிப் பிடிக்கும் சிந்தனைகளை ‘மொழி உணர்ச்சியா? கிலோ எவ்வளவு?’ என்று கேட்பவர்களிடத்து எதிர்பார்ப்பது என் தவறுதான்.

அசட்டுத்தனங்களையும் கோணங்கித்தனங்களையும் மட்டுமே முதன்மையாகக் கொண்டு பெயரைத் தேர்ந்தெடுக்கும் பெருமான்களே! இதற்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு எக்கேடும் கெட்டுப் போங்கள் –

“என்னத்த நெனச்சு உங்க புள்ளைக்கு அந்தப் பெயர் வச்சீங்க?”

- சோம. அழகு

    Comments

    0 comments

    0

    Leave a comment

    Fields marked with * are required.

    ✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

    கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

    வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.