மனித வாழ்க்கையில் “வழிபாடு” என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு ஆன்மீக செயல். உலகின் எந்த சமூகம் எடுத்தாலும், மனிதன் தன்னைவிட பெரிய சக்தியொன்றை ஏற்றுக்கொண்டு அதற்குள் தன் நம்பிக்கையையும் பயத்தையும் நன்றியையும் ஒப்படைத்திருக்கிறான். ஆனால் பெரும்பாலும் இந்த வழிபாடு ஒரு வேண்டுதலுடன் தான் இணைந்திருக்கும். “எனக்கு இதை கொடு” என்ற மனநிலை வழிபாட்டின் மையமாக மாறிவிடுகிறது.
இந்தப் பின்னணியில் பலருக்கு வழிபாடு என்பது ஒரு பரிவர்த்தனை போல இருக்கும். இந்த அணுகுமுறையில் இல்லாத கடவுள் ஒரு அருளாளன் அல்ல; ஒரு வழங்குபவர் ஆகிவிடுகிறார். இதனால் பக்தி மெதுவாக பேராசையுடன் கலந்துவிடுகிறது.
“வழிபாடு” என்ற சொல்லை நாம் பொதுவாக மதத்தோடு இணைத்துப் பார்க்கிறோம். ஆனால் அரசியலிலும் ஒரு விதமான வழிபாடு நடந்து கொண்டே இருக்கிறது — அது தலைவர் வழிபாடு, கட்சித் தெய்வீகம், குருட்டு ஆதரவு போன்ற வடிவங்களில் வெளிப்படுகிறது. இந்த நிலையில் “இலக்குகளற்ற வழிபடுதல்” என்பது ஆன்மீக உயர்வு அல்ல; அது ஜனநாயகத்திற்கு ஒரு பெரிய ஆபத்து. அதே மனநிலை அரசியலுக்குள் நுழையும் போது அது ஒரு ஆபத்தான மாயையாக மாறுகிறது. குறிப்பாக, எட்ட வேண்டிய இலக்குகள் குறித்து எந்தத் தெளிவும் இல்லாமல், அவற்றின் சிக்கல்களைப் புரிந்து கொள்ளாமலும், “எல்லாம் எளிதாக நடந்து விடும்” என்ற நம்பிக்கையுடன் ஒரு தலைவரை பின்தொடர்வது — அதுவே வழிபாட்டு அரசியல்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது சுலபமான ஒன்றல்ல. அது பல அடுக்குகள் கொண்ட ஒரு செயல்முறை. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கட்டமைப்பு வளர்ச்சி போன்ற துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய சிக்கலான அமைப்பு. இத்தகைய சூழலில் எந்த மாற்றமும் தெளிவான இலக்குகளால் தொடங்க வேண்டும். “எதை அடைய வேண்டும்?” என்ற அடிப்படை கேள்விக்கு விடை இல்லாத இடத்தில், எந்தத் திட்டமும் பொருளற்றதாக மாறிவிடும். ஆனால் மக்கள் இந்த இலக்குகளைப் புரிந்து கொள்ளாமல், ஒரு நபரின் மீதான நம்பிக்கையில் மட்டுமே அரசியலை பார்க்கத் தொடங்கும் போது, அது ஆதரவு அல்ல; திசையற்ற வழிபாடு.
இலக்குகள் மட்டும் போதுமானதல்ல; அவற்றை அடைய செயல் தந்திரமும் அவசியம். செயல் தந்திரம் என்பது ஒரு நாட்டின் இலக்குகளை அடைவதற்கான முழுமையான வரைபடமாகும். எந்த வழியில் முன்னேற வேண்டும், எந்த வளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எந்த முன்னுரிமைகள் முக்கியம் என்பதைக் குறிப்பது தந்திரத்தின் பங்கு. ஒரு நல்ல தந்திரம் தரவுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்; அது உணர்ச்சிகளால் அல்ல, உண்மைகளால் வழிநடத்தப்பட வேண்டும். ஆனால் வழிபாட்டு அரசியலில் இந்த தந்திரம் பெரும்பாலும் காணாமல் போகிறது. உணர்ச்சி தான் முடிவுகளை நிர்ணயிக்கும் நிலையில், திட்டமிடல் பின்தங்கிவிடுகிறது.
அதேபோல், செயல் நுட்பம் இல்லாமல் எந்தத் தந்திரமும் வெற்றியடையாது.
செயல் நுட்பம் என்பது திட்டங்களை நிலத்தில் நடைமுறைப்படுத்தும் முறைகளை குறிக்கிறது. ஒரு திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, அது மக்களிடம் எப்படிச் சேர்கிறது, அதன் தாக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது — இவை அனைத்தும் செயல் நுட்பத்தின் பகுதிகள். ஒரு நல்ல கொள்கை கூட சரியான நடைமுறை இல்லாமல் தோல்வியடையும். எனவே, செயல் தந்திரம் ஒரு சிந்தனை என்றால், செயல் நுட்பம் அதன் செயலாக்கம்.
இலக்கு, தந்திரம், நுட்பம் — இந்த மூன்றின் ஒருங்கிணைப்பில்தான் ஒரு நல்ல ஆட்சி உருவாகிறது. ஆனால் வழிபாட்டு அரசியலில் இந்த மூன்றும் தளர்ந்து விடுகின்றன. இலக்கு தெளிவற்றதாக மாறுகிறது; தந்திரம் உருவாகாமல் போகிறது; நுட்பம் செயலிழக்கிறது. அதன் விளைவாக பெரிய வாக்குறுதிகள் மட்டுமே உருவாகின்றன; ஆனால் அவை நிஜமாக மாறுவதில்லை.
இதற்கு முக்கிய காரணம் மக்களின் மனநிலையே. கேள்வி கேட்காத ஆதரவு, எந்த அரசியலையும் பொறுப்பற்றதாக மாற்றிவிடும். “இந்த திட்டம் எவ்வாறு செயல்படும்?”, “இதற்கான வளங்கள் எங்கிருந்து வரும்?”, “இதன் விளைவுகள் என்ன?” போன்ற அடிப்படை கேள்விகள் எழாதபோது, அரசியல் ஒரு கண்காணிப்பில்லா அமைப்பாக மாறிவிடுகிறது. இதுவே ஜனநாயகத்தின் பலவீனமாகும்.
ஆனால், இதை விட முக்கியமான ஒரு கேள்வி உள்ளது: ஒரு இயக்கம் உண்மையில் மக்களுக்காக நீண்ட காலம் இயங்க வேண்டும் என்றால், அதன் செயல்பாடுகள் என்னவாக இருக்க வேண்டும்?
ஒரு உண்மையான அரசியல் இயக்கம் வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டுமே இயங்கக் கூடாது. அது ஒரு சமூக மாற்ற இயக்கமாக இருக்க வேண்டும். அதன் முதல் கடமை மக்களின் அறிவாற்றலை வளர்ப்பது. விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் எந்த நல்ல கொள்கையும் நீடிக்காது. எனவே, மக்கள் எதை ஆதரிக்கிறார்கள், ஏன் ஆதரிக்கிறார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதைக் கேள்வி கேட்கும் திறனை வளர்த்தெடுப்பது அவசியம்.
அடுத்து, உழைப்பாற்றலை பயனுற மாற்றுவது ஒரு இயக்கத்தின் முக்கிய பங்காகும். மக்கள் உழைக்கிறார்கள்; ஆனால் அந்த உழைப்பின் பலன் சமமாக கிடைக்கவில்லை என்றால், அது ஒரு சமூக குறைபாடு. ஒரு நல்ல இயக்கம் மக்களின் உழைப்பை திசை திருப்பி, திறன் மேம்பாடு, தொழில் வாய்ப்பு, உற்பத்தி வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் அதை பயனுள்ள சக்தியாக மாற்ற வேண்டும்.
அதேபோல், அறிவாற்றலும் உழைப்பாற்றலும் ஒன்றோடொன்று இணைந்தால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறும். அறிவு இல்லாத உழைப்பு திசை இழக்கும்; உழைப்பு இல்லாத அறிவு செயலற்றதாகிவிடும். இந்த இரண்டையும் இணைக்கும் சூழலை உருவாக்குவது ஒரு இயக்கத்தின் உண்மையான வெற்றி.
இவை அனைத்தும் இல்லாத இடத்தில், அரசியல் வெறும் வாக்குறுதிகளின் மேடையாக மாறிவிடுகிறது. இலக்குகள் தெளிவில்லாமல், தந்திரம் வடிவமைக்காமல், நுட்பம் செயல்படாமல் இருக்கும் போது, பெரிய கனவுகள் பேசப்படலாம்; ஆனால் அவை நிஜமாக மாறாது. இதற்கு காரணம் மக்களின் மனநிலையே. கேள்வி கேட்காத ஆதரவு, எந்த அரசியலையும் பொறுப்பற்றதாக மாற்றிவிடும்.
ஜனநாயகத்தில் மக்கள் “குடிமக்கள்”.அவர்களுக்கு உரிமைகளும், கேள்வி கேட்கும் பொறுப்பும் உண்டு. ஆனால் அரசியலில் இலக்குகளற்ற வழிபாடு உருவானால், குடிமகன் மெதுவாக பக்தனாக மாறுகிறான். அவன் கேள்வி கேட்க மாட்டான்.
தவறைக் கண்டாலும் நியாயப்படுத்துவான். “அவர் செய்தால் சரிதான்” என்ற மனநிலை உருவாகும். இதுவே ஜனநாயகத்தின் முதல் வீழ்ச்சி.
வரலாற்றில் பல நாடுகள் இந்த நிலையை சந்தித்திருக்கின்றன.
ஒரு தலைவர் மெதுவாக விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக மாற்றப்படுகிறார். அவரை விமர்சிப்பது நாட்டை விமர்சிப்பதாக கருதப்படுகிறது.
உணர்ச்சி அரசியல் மக்களின் உணர்வுகளை தூண்டி, பயம் அல்லது பெருமை உணர்ச்சியை உருவாக்கி, சிந்தனைக்கு பதில் உணர்வை ஆதரவாக மாற்றுவது. அடையாள அரசியல்
ஜாதி, மதம், மொழி, பகுதி போன்ற அடையாளங்களின் மூலம் ஒருவரை “நம் மனிதர்” என்று உயர்த்தி, அவரை விமர்சிப்பதே துரோகம் என்கிற மனநிலை உருவாக்கப்படுகிறது. தகவல் கட்டுப்பாடு ஒரே குரல் மட்டும் கேட்கப்படும் சூழல். மாறுபட்ட கருத்துகள் மறைக்கப்படும்போது, மக்கள் கேள்வி கேட்கத் தேவையான தகவலையே பெற முடியாது.
இத்தகைய செயல்முறைகளுக்கு அடிப்படையாக இருப்பது “அதிகாரம்” என்ற கருத்தே. அரசியல் தளத்தில் வலிமை என்பது பெரும்பாலும் அதிகாரத்தோடு தொடர்புடையது. ஆனால் அந்த அதிகாரம் ஒரே மையத்தில் சிக்கி, ஒருமைத்துவமாக மாறும் போது, அது ஜனநாயகத்தின் பலமாக இல்லாமல், அதன் பலவீனமாக மாறுகிறது. ஒரே நபர், ஒரே சிந்தனை, ஒரே குரல் — இவை அனைத்தும் ஒருமைப்பாட்டை உருவாக்குவது போல தோன்றினாலும், உண்மையில் அவை பல்வேறு சிந்தனைகளையும், எதிர்ப்புகளையும் ஒடுக்குகின்றன.
ஜனநாயகத்தின் உண்மையான வலிமை இதற்கு மாறான திசையில் உள்ளது. அதிகாரம் பங்கிடப்பட்டு, பல்வேறு குரல்கள் ஒருங்கிணைந்து, பன்மைத்துவமாக மாறும் போது தான் அது ஜனநாயகமாகிறது. பன்மைத்துவம் என்பது வெறும் வேறுபாடுகளை ஏற்கும் மனநிலை அல்ல; அந்த வேறுபாடுகள் ஒன்றோடொன்று உரையாடி, சமநிலையை உருவாக்கும் ஒரு செயல். இதன் மூலம் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது; அது பொறுப்புடன் செயல்படத் தள்ளப்படுகிறது.
ஆனால் வழிபாட்டு அரசியலில் இந்த பன்மைத்துவம் மெதுவாக குறைந்து விடுகிறது. ஒரு தலைவர் அல்லது ஒரு சிந்தனை மட்டுமே மையமாக மாறும்போது, மற்ற குரல்கள் ஒலிக்க முடியாத சூழல் உருவாகிறது. இதனால் அதிகாரம் ஒரே இடத்தில் குவிகிறது. அந்த அதிகாரம் சோதிக்கப்படாதபோது, அது பொறுப்பை இழக்கிறது; பொறுப்பில்லாத அதிகாரம் தான் ஆபத்தானது.
ஜனநாயகம் பக்தர்களை வேண்டாம். அது பொறுப்புள்ள குடிமக்களை வேண்டும் என்கிறது. கேள்வி கேட்கும் குடிமகன் தான் ஜனநாயகத்தின் பலம்.
கேள்வி கேட்காத பக்தன் தான் அதன் பலவீனம். பன்மைத்துவம் கொண்ட அதிகாரம், தெளிவான இலக்கு, மற்றும் பொறுப்புள்ள செயல்பாடே ஜனநாயகத்தின் உண்மையான அடையாளம்.
- கோபி சேகுவேரா