ஒன்றிய ஆட்சியின் அடக்குமுறை சட்டங்களில் ஒன்றான உபா. (Unlawful Activities Prevention Act) சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த சட்டமே அரசியல் சட்டத்திற்கு எதிரான சட்டம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். பிணை வழங்காமல் நீண்டகாலம் சிறையில் அடைத்து வைப்பதற்காகவே இந்த சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டம் குறித்து அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் உயான் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். உபா சட்டத்தில் கைதானவர்களுக்கும் பிணை வழங்கலாம் என்று கூறிய நீதிபதிகள் “பிணை என்பது விதியாகவும்; சிறை என்பது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும்” என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்ல ஏற்கனவே இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றமே பிணை வழங்க மறுத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது என்றும் அந்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சையத் இப்திகார் அந்த்காமி என்பவர் உபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு 5-ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். போதைப் பொருள் கடத்தி தீவிரவாதிகளுக்கு நிதி அளித்தார் என்பது குற்றச்சாட்டு. எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றம் இப்போது பிணை வழங்கியுள்ளது. இதேபோல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவர் உமர்காலித் உள்ளிட்ட 7 பேர் மீது குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கலவரத்தைத் தூண்டினார்கள் என்று குற்றம்சாட்டி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்களைத் திரட்டி அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் உமர் காலித். அப்போது அவர் ஆற்றிய உரை மதக் கலவரத்தை தூண்டி வன்முறைக்கு வித்திட்டது என்று பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டி சிறையில் அடைத்தார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுள்ளது.
உமர் காலித் மீது வன்முறையைத் தூண்டியதாக இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கில் உமருக்கு ஏப்ரல் 2021-ல் பிணை வழங்கப்பட்டது. 2-வது வழக்கில் அவர் மீது சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் (உபா) பிரிவின்கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை இரண்டு நீதிமன்றங்கள் அவரது பிணை மனுவை நிராகரித்துள்ளனர். அவரது பிணை மனு ஏப்ரல்-2023 முதல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. ஏற்கெனவே 2021-ல் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு உபா சட்டத்தின் கீழ் பிணை வழங்க மறுத்தது. இப்போது 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூடுதல் நீதிபதிகள் கருத்தை மறுத்து பிணை வழங்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு மிகவும் பலவீனமானது; உமர்காலித்துக்கு எதிராக சாட்சிகள் இல்லை அந்தக் கலவரத்தின் போது உமர்காலித் டெல்லியிலேயே இல்லை என்றும் நீதிமன்றத்தில் கபில்சிபல் வாதாடினார்.
பிப்ரவரி 2020-ல், வடகிழக்கு டெல்லியில் கலவரங்கள் வெடித்தன. இதில், பெரும்பாலும் முஸ்லிம்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தனர். இந்தப் போராட்டங்களின் போது வன்முறையைத் தூண்டுவதற்காக உமர் காலித் மற்றவர்களுடன் சேர்ந்து சதி செய்தார் என்றும், அதுவே கலவரங்களுக்கு வழிவகுத்தது என்றும் அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது. 5 ஆண்டுகளாக இந்த வழக்கில் விசாரணையே தொடரப்படாமல் முடங்கிக் கிடந்ததை இப்போது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. `ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் உமர்காலித் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்தன. இந்த 5-ஆண்டுகளில் அவரது சகோதரி திருமணத்திற்காக மட்டும் ஒருவாரம் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.
ஏற்கனவே அப்சல்குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்துப் பேசியதற்காக அவர் மீது தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் “பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோகச் சட்டத்தை இப்போது பயன்படுத்தக்கூடாது என்று கூறியதோடு தேசத்துரோக வழக்குகளின் மீதான விசாரணையை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது”. இப்போது உபா சட்டத்தின் வழியாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கலாம் என்ற தீர்ப்பை தனது 5-ஆண்டு சிறைவாசம் வழியாக பெற்றுத் தந்து இருக்கிறார் உமர் காலித்.
தேசத் துரோக வழக்கை சந்தித்த போது அந்த சட்டத்துக்கே முற்றுப்புள்ளி வைத்தார் உமர். இப்போது உபா வழக்கை சந்தித்த போது பிணை வழங்கும் உரிமை பெற்றுத் தந்துள்ளார். பிணை வழங்கக் கூடாது என்று 3 நீதிபதிகள் அளித்த தீர்ப்பை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்க மறுத்ததும் மனித உரிமைக்கு கிடைத்த வெற்றி! உமர்காலித் தன்னைப் பற்றிக் கூறும்போது “நான் ஜனநாயகத்தின் தீவிரவாதி! தேர்தல் மட்டுமே ஜனநாயகம் என்று நம்பக்கூடியவன் அல்ல; அதையும் கடந்த மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவன். ஜனநாயகம் என்பது அரசியல் மட்டுமல்ல வாழ்க்கை நடைமுறையாக வேண்டும் என்பதே எனது கொள்கை” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டவர் உமர் காலித். தேசத் துரோக வழக்கிலும் சரி இப்போது உபா சட்டத்திலும் சரி உமர்காலித் மனித உரிமைகளை மீட்டுத் தந்திருக்கிறார்!
- விடுதலை இராசேந்திரன்