சராசரியாக ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அந்த உணவின் கழிவை வெளியேற்றுவதும் மிக முக்கியமாகும். வெறும் உடற்கூடாக நினைத்து சில பரஸ்பர தேவை கருதி கழிப்பிடங்களின் வேலைகளைப் பேசுவதில்லை. அப்படிப் பேசினால் அருவருப்புப் படுவதும் கேவலமாக ஒதுக்குவதும் தான் நிகழ்ந்துள்ளன. உணவு என்பது உடலிற்குப் புரதம் மற்றும் அனைத்து சக்திகளையும் தரும் சக்தி ஊக்கியாக இருந்தாலும், அந்தச் சக்தி நீக்கப்பட்ட கழிவை நமது உடலில் வைத்து கொள்ள முடியாது. கழிவுகளாக வெளியேறி விட்டதும் அடுத்த உணவு கொண்டு சக்தியை உருவாக்குவது தான் உடலின் அன்றாட நடவடிக்கையாகும். ஐம்பத்தைந்து அல்லது ஆறுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைக்குள் ஆட்படுவதையும் அறிவோம். வீடுகளிலும் தொழில் நிறுவனங்களிலும் கழிப்பறைகள் இல்லாமல் இல்லை. பொதுக் கழிப்பறை, நவீன கட்டணக் கழிப்பிடங்கள் என்பதான கழிப்பறை வசதிகளின் பெருக்கமும் தேவையும் உள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் ரெஸ்ட் ரூம், பாத்ரூம், கழிப்பறை, கக்கூஸ், கழிப்பிடம், கழிவறை போன்ற வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதைக் காணலாம். மேலும், மடங்களில் கழிப்பறை உண்டு, கோவில்களில் கழிப்பறை கிடையாது. ஒரு காலத்தில் வீட்டிலிருந்து மிகத்தொலைவிலே கழிப்பறை கட்டப்பட்டன. இப்போது வீட்டிற்குள்ளே கழிப்பறைகள் வந்து விட்டன. வீட்டிற்குள் வந்ததற்கும் வெளியே இருந்ததற்கும் காரணம் உண்டு.
தமிழ்நாட்டின் கழிப்பறைகள் இருந்தனவா? முற்கால அரசர் காலத்தில் அவர்கள் வாழ்வில் எப்படி இருந்திருக்கும்? தமிழ்நாட்டில் பிற்காலத்தில் தான் கழிப்பறை உருவாக்கப்பட்டிருக்கின்றனவா?. என்கிற எண்ணபோக்கு உருவாகாமல் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலையில் உள்ள பத்மநாத அரண்மனையில் அன்று உருவாக்கி வைத்திருந்த கழிப்பறை இப்போதும் பார்க்கலாம். அகழ்வாய்வில் மூடிய , மூடாத கழிவுநீர் கால்வாய்கள் உருவாக்கத் தெரிந்த இந்தச் சமுதாயத்திற்குக் கழிப்பறை உருவாக்க தேவையில்லாமல் போனதா என்பதையும் பார்க்க வேண்டும். 9ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தில் கழிப்பறை இருந்ததாகக் தகவல் உள்ளது. இது பொது பயன் பாட்டிற்கானவை அல்ல என்பதாகத் தெரிகிறது.
உடலின் கழிவை வெளியேற்ற என்ன மாதிரியான நடவடிக்கைகளை ஆதி மனிதன் செய்திருப்பான். விலங்குகளை போல கழிவுகளைக் கழித்திருப்பானா? அல்லது பூனைகளைப் பார்த்து விவரம் கொண்டு கழிவுகளைப் புதைத்து வைத்திருப்பானா என்றால் இது இரண்டும் நடந்துள்ளது என்று தான் கூற வேண்டும். தொ.பரமசிவன் பண்பாட்டு அசைவு என்கிற பனுவலில் ‘வீடும் வாழ்வும்’ குறித்தான கட்டுரையில் தமிழ்ச் சமூகத்தில் கழிவறைப் பற்றிக் கூறும்போது, கழிவறை இல்லாத வீடுகளையும் அதே வேளை கழிவறைச் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்கள் தோன்றவில்லை என்பதையும் கூறுகிறார். இதில், ”இந்த வீடுகளைப் பற்றி நாம் சொல்லக்கூடிய ஒரே குறைபாடு அவை கழிவறை வசதி இல்லாதவை என்பதுதான் ’கழிவறை’ என்ற கோட்பாடும் இட வசதியும் வெப்ப மண்டலப் பகுதியான தமிழ்நாட்டில் இல்லை (எனவே மலம் அள்ளும் சாதியாரும் தமிழ்நாட்டில் தோன்றவில்லை)”1 என்கிற பதிவின் மூலம் பிற்காலத்தில் தான் பரவலாக்கப்பட்ட கழிவறை வந்திருக்கலாம் என்று யுகிக்கலாம்.
பரந்துபட்ட இந்திய சமுதாயத்தில் அதிகார வர்க்கம் கொண்ட மனிதர்களுக்குத்தான் தன் பாதுகாப்பு கருதி கழிவறைகள் உருவாக்கப்பட்டன. இது தான் உண்மை. கழிப்பறைக்குள் மலம், சிறுநீர் கழிக்கின்ற இடம் என்பதான பொருள். கழிவறை வருவதற்கு முன்பாக (கக்கூஸ் toilet டாய்லெட்) காட்டுப்புறம், ஒதுக்குப்புறம், கொல்லைப்புறம் போன்ற பெயர்களோடு மலம் கழிக்க சென்றவர்கள் தான். ஒரு தலைமுறைக்கு முன் உள்ளவர்கள். காட்டுக்குப் போனது பற்றிக் கூறுவதாகப் பதிவுகள் உள்ளன, இதனை, கி.ரா., “பெரியவர்கள் மந்தைக்குப் போகிறார்கள்- குழந்தைகள் ‘தெரு’வுக்குப் போகிறார்கள். கிராமம் மலம் கழித்து அசுத்தப்படுவதின் மூலம் சூழல் அசுத்தமாகிறது”2 என்பதாகப் பதிகிறார். ஒரு ஐம்பது வருடங்களுக்குள் கழிவறைகள் எண்ணிக்கை அதிகரித்ததுடன். மனித மலத்தை மனிதர் அள்ளக்கூடிய வன்மம் திணிக்கப்பட்டது. 1989களில் மலம் அள்ளும் இழிநிலை ஒழிக்கப்பட தீவிரமான கருத்துகள் முன் வைக்கப்பட்டது.
மனிதர் காலையில் எழுந்ததும் காலைக் கடனை முடித்தல் என்பது மிக முக்கிய அத்தியவசியங்களில் ஒன்று, இதனால் தான் முன்னோர்கள் இதற்கு காலைக்கடன் என்கிற பெயரைப் பொருத்தினார்கள். கடன் முடிந்து விட வேண்டும் இல்லை மனச்சிக்கலை ஏற்படுத்தும் அதுபோல காலைக்கடன் முடிக்கவில்லை என்றால் மலச்சிக்கலை ஏற்படுத்தும். பிறந்த குழந்தை முதல் இறக்கின்றவர் கடைசி தருவாய் வரைக்கும் மலம் நம்மை எப்போதுமே அடையாளப்படுத்திக் காட்டும். இயற்கையான மரணத்தில் மலம் வெளியேறுவது நடந்து விடும். வாழ்வியலில் நோய் கண்டுபிடிப்பிற்கு மலமும் சிறுநீரும் காரணியாக உள்ளன. ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’ என்கிற பனுவலில் பழ.அதியமான் பதிவில் குருகுலத்தில் படிக்கின்ற மாணவர்களில் அன்றாட நடவடிக்கை என்கிற பெயரில், ”காலை நான்கு மணிக்கு ஆரம்பம் ஆகிவிடும் முதலில் ஐயர் எழுந்து விடுவார், கை கால்களை சுத்தம் செய்துகொண்டு நாலு முப்பது மணிக்கு ஒரு விசில் மூலம் ஒளி எழுப்பி மாணவர்களை கிளப்புவார். எல்லோரும் எழுந்து பல் துலக்கி தேகப் பயிற்சி செய்வார்கள்.. பிறகு வெளிப்புறம் சென்று திரும்புவார் கண்ட இடங்களில் மலம் கழிக்கலாகாது என்று ஐயர் கண்டிப்பாக இருப்பார் குறிப்பிட்ட இடத்தில் தான் மலம் கழிக்கலாம். கையில் ஒரு சிறு மண்வெட்டியுடன் போக வேண்டும் அரை அடி ஆழத்தில் குழி வெட்டி அதில் மலம் கழித்து மண் போட்டு மூடி விட வேண்டும் இந்த மாதிரியான ஒரு ஏற்பாடு காந்தியடிகளின் ஆசிரமங்களில் கையாளப்பட்டு வந்தது”3 என்கிற பதிவை நம் உற்று கவனிக்க வேண்டும். மலம் வெளியே தெரியாமலிருக்க மண்வெட்டியால் மண்ணை அள்ளிப் போட்டு மூடி வருகின்ற பழக்கமிருந்திருக்கின்றன. இன்னோர் பக்கம் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் மலம் கழித்து வருவதும் இருந்திருக்கின்றது. திறந்த வெளியில் மலக்கழிப்பும் நடந்திருக்கின்றது.
இதற்கு அடுத்த காலங்களில் தான் கக்கூஸ் என்கிற ஒதுக்குப்புறமாக கட்டிக் கொள்ளும் கழிப்பறை உருவானது. அந்தக் காலத்தில் ஒரு கிராமத்தில் ஒன்று இரண்டு வீடுகளில் கழிப்பறைகள் இருந்திருக்கலாம். மற்றபடி அந்தக் கிராம மக்கள் காட்டுப் பக்கமாக ஒதுங்குவது தான் நடந்திருக்கின்றன. கும்பலாகச் சேர்ந்து காட்டுப்பக்கம், கொல்லைப் புறப்பக்கம் ஒதுங்குவது என்பது வரலாற்றில் எழுதப்படாத பதிவு. பொதுவாக ஆண்கள் தனித்துப் போவதும். பெண்கள் இரண்டு மூன்று பேர்கள் மேல் கூட்டாகச் சேர்ந்து போவதும் வழக்கமாக இருந்துள்ளன. இதை , அ.கா.பெருமாள் கூறும் போது, “ஒளிச்சுப் பேலுவான் வெள்ளைக்காரன்”4 என்பதாகப் பதிகிறார். இது காலனிய ஆட்சிக் காலத்தில் உருவானது. இதுவே பின்னால் இந்தியர்களுக்கும் தொற்றிக் கொண்டது. கக்கூஸ்(kakhuis) என்கிற சொல் கூட டச்சுக்காரர்களால் வந்தது தானே. மேலும், துபுவா என்கிறவரின் பதிவில் ”காலைக்கடன்களைக் கழிக்க அவன் வெளியே செல்வான். சரியான இடத்தைத் தேடிக் கண்டுபிடித்த பின் ஆடைகளையும் காலணிகளையும் களைய வேண்டும். தன் பின்புறத்தை இடது கையால் கழுவுவான். இதனால் இக்கையை உணவருந்தவோ, வேறெதையாவது தொடவோ பயன்படுத்தக்கூடாது. எத்தனை முறைக் கழுவ வேண்டும். உடலின் எந்தெந்த பாகங்களைக் கழுவ வேண்டும் போன்றவை பிராமணர்களின் சடங்குகளில் வரும்”5 என்பதனை பிராமண சமூக மக்கள் பற்றிய பதிவாகப் பார்க்க முடிகின்றது. மலம் அள்ளுபவர்களை இழிவான சாதியாகப் பதிந்துள்ளது, இவர்களை, “அனைத்து இறைச்சிகளையும் உண்பதால் ‘சக்கிலி’ (CHAKKILLI) என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மிருகங்களின் தோலை வெட்டுவதால் ‘வெட்டியான்’ என்ற பெயரினையும் பெறுகின்றனர்”6 என்கிறார். ஆனால் வெட்டியன் என்பதற்கு கூலி இல்லாமல் வேலை செய்யக்கூடியவன் என்பதான பதிவும் உண்டு. தாழ்நிலையில் வாழும் சில இனத்தவர்களை இழித் தொழில் புரிபவர்களாகக் காரணம் காட்டி கீழான சாதியாகக் காட்டுகின்றனர். இதில், “சஷ்குழி என்ற வடமொழிச் சொல் ‘சக்கிலி’ என்று மறுவியுள்ளது. இதன் பொருள் செத்த மாடு சாப்பிடுபவன்”7 என்பதாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அருந்ததியர்கள் என்கிற பொது சொல் கூறுக்குள் சக்கிலியர், பகடை, தோட்டி, மாதாரி, மாதிகர், செம்மான், ஜக்காலி, ஜாம்பவுலு, ஆதி ஆந்திரர், ஆதி கன்னடன் போன்ற பல இனக்குழுக்கள் ஒன்றிணைந்தவை தாம். ஆனால் இவர்கள் இந்த இழி தொழிலுக்குள் வந்த காலம் எப்பொழுது என்று தான் தெரியவில்லை. டி.டி.கோசாம்பி இவர்களைப் பற்றி கூறும் போது, “தோல் பதனீட்டாளர்கள் சுண்ணாம்புத் தொட்டியில் எருமைத் தோலை ஊற வைக்கின்றனர். இவர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வேறு சாதியிலிருந்து பெண்ணெடுப்பது இல்லை. சாதாரணமாக இவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுகிறார்கள்”8 என்கிறார். தோல் பதனீடு தொழிலைச் செய்த இவர்கள் காலனிய ஆட்சிக்காலத்தில் துப்புரவுப் பணிக்கு ஆட்படுத்தப்பட்டு கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய தள்ளப்பட்டிருக்கலாம். இத்தொழில் செய்யும் இவர்கள் தெலுங்கு, கன்னடம் பேசக்கூடியவர்களாக இருக்கின்றானர். இதனை “சுகாதார வசதிகள் ஏதும் இன்றியும் நாற்றமெடுத்துக் கொண்டிருந்தது. குப்பை வாருவதற்கும் கழிவுநீரை அகற்றுவதற்கும் கம்பெனி அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தொடக்கத்தில் பயனற்றுப் போயின”9 என்கிற கே.கே.பிள்ளையின் பதிவு வைத்து எடைப்போட்டுக் கொள்ளலாம். தோல் பதனீடு செய்பவர்களையும் செருப்பு தைப்பவர்களையும் இப்பணிக்கு உட்படுத்தி இருக்கின்றனர். மேலும், “மலம் அள்ளுதல் கால்வாய்களை சுத்தம் செய்தல் போன்ற தொழில்கள் நகர நாகரிகம் தோன்றிய பின்னர் தானே ஏற்பட்டிருக்க முடியும்? அதிலும் ‘தோட்டி’ வேலை என்கிற பணியே மனிதன் நாகரிக உலகில் தலையெடுத்த பின்பு தானே ஏற்பட்டிருக்க முடியும்? அப்படியாயின் அது ஒரு தொழில் என்ற நிலை தாண்டி சாதியாகக் கருதப்படும் நிலை எப்படித் தோன்றியது?”10 என்று சு.பொ.அகத்தியலிங்கம் கூறுவதையும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். எட்கர் தர்ஸ்டன் பதிவில் சக்கிலியர் இடம் பெறுகின்றனர். அதில் கழிவறை சுத்தம் செய்யக் கூடிய தொழிலைச் செய்வதாக எந்த முகாந்திரமும் அதில் பதியப்படவில்லை. இதில், பறையர்களை விட தாழ்ந்தவர்களாக இருப்பதாகக் கூறினாலும், “சக்கிலியரைப் பற்றி 1898 ஆம் ஆண்டு மதுரை மாவட்டக் கையேடு கூறுவதாவது: ‘இவர்கள் தோல் பதனிடுவதோடு செருப்புகள், குதிரைச் சேணங்கள், தோல் பொருட்கள் ஆகியவற்றைக் தயாரிக்கின்றனர்”11 இதில் மாட்டுன் கழுத்திற்கு வார், மாடு மேய்ப்பவர்களுக்கான தோலாலான சட்டை, கொல்லர்களுக்கான துருத்தி, அம்பட்டர்களுக்கான பைகள், எண்ணெணைய் வாணிகருக்கான தோல் பை, கிணற்றில் நீர் இறைக்க தோலாலான பறிகள் இப்படி எத்தனையோ தோலாலான வேலைகளைச் செய்திருக்கின்றனர்.
இதை விட மனிதக் கழிவை மனிதன் அள்ளக் கூடிய 1985-90 காலமும் இருந்துள்ளது. அன்று வீடுகளை ஒட்டி கழிப்பறைகளைக் கட்டுவதில்லை. வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளிக் கொல்லப்புறத்தில் கட்டி வைத்திருப்பர். இதனை எடுப்பு கக்கூஸ் என்பர். இந்தக் கழிப்பறைகள் சதுக்க அமைப்புடன் தகரக் கதவுடன் கொண்டது. உள்ளே மலம் கழிப்பதற்கு ஒரு நீண்ட சுவர் திண்டு போன்று அமைத்திருப்பர். அதன் பின்னே மலம் கழிப்பர். இதனை அள்ளிச் செல்ல, ஒருநாள் இருந்த மலத்தை மறுநாள் காலை வேளையில் வெற்றிலை மென்று கொண்டே வரும் அந்த சக்கிலிய பெண் இரண்டு வாளிகளுடன் வருவார். ஒரு வாளியில் எறுவுகளால், குப்பைகளால் எரிக்கப்பட்ட சாம்பல் கொண்டுவருவர். மலத்தை ஒரு வாளியில் கரண்டியால் அள்ளி எடுத்துக் கொள்வார். எப்போதாவது உள்ளே இருக்கும் மண் பானை தண்ணீரால் மலம் எடுத்த இடத்தில் லேசாக கழுவி விடுவர். அல்லது கொண்டு வந்த சாம்பலை அந்த மலப் பகுதியில் தூவி விடுவர். எடுத்து செல்லப்படும் மலம் எங்கு போகிறது என்பது தெரியாது. எடுத்து செல்பவர் ஊர் ஒதுக்குப்புறத்தில் கொண்டு வந்து வைத்திருக்கும் பெரிய டின்னில் அந்த மலத்தைக் கொட்டி அந்த டின்னை தள்ளிச் செல்லும் வண்டியில் மாட்டி உடுட்டிக் கொண்டு செல்வர். டி.எம்.சி காலனி பக்கம் அந்த டின்கள் சேகரிக்கப்பட்டு பெரிய வண்டி வந்ததும் ஆண்கள் இவற்றை பெரிய வண்டியில் ஏற்றி விடுவர். ஒரு மலம் அள்ளுபவரின் வாழ்க்கை அதை உணரும் வரை புரிந்து கொள்ள முடியாது. எடுப்பு கக்கூஸுக்கு பின் இன்டியன் டாய்லட்கள் வரவானாலும். திறந்த வெளியில் மலம் கழிப்பவர்கள் இருக்கத் தான் செய்தனர். கழிப்பறை வீட்டின் அருகிலேயே வர முக்கிய காரணத்தில் ஒன்று, திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்து மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வுத் தான். மாதவிடாய் காலங்கள் கழிப்பறை பக்கமிருக்க உதவிகரமாக அமைந்தது. இண்டியன் டாய்லட்கள் கடந்து, வயதானவர்களுக்கான வெஸ்டன் டாய்லெட் வரவும் இன்று உள்ளது.
மலம் எனும் சொல்
“மலம் (மனித உடலிலிருந்து) ஆசனவாய் வழியாக வெளியேறும் கழிவு”12 என க்ரியா தமிழ் அகராதி கூறுகிறது. ‘கொல்லைக்கிரு’ இதன் விளக்கம் மலம் கழி, “வீட்டுக்குப் பின்னால் போய் கொல்லைக்கிரு”13 என்பதாக நெல்லை வட்டாரா வழக்குச் சொல்லகராதி கூறுகின்றது. இலக்கண நூல் இவற்றை இடக்கரடக்கல் (சொல்லக்கூடதைவை ) என்பதாகப் பதிகிறது. வகட அகராதி அரிமலம் என்பதை ‘மாவிலங்கு’ என்கிறது. பீ எனும் சொல்லுக்கு ‘மலம்’என்பதாக பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதிக் கூறுகிறது. மலம் என்பதைச் செந்தமிழ் அகராதி “பவ்வீ, மாசு, மும்மலம்”14 என்று மூன்றாகக் கூறுகின்றது. ஆக மொத்தத்தில் மலம் என்பது ‘உடம்பினழுக்கு’ என்பதாகக் கொள்ள முடிகின்றது. கழிப்பிடம் என்கிற சொல் கழகத்தமிழ் அகராதியிலோ, செந்தமிழ் அகராதியிலோ காண முடியவில்லை. ஆனால் கழிப்பி என்பதாகக் கூறி அதற்கு ‘போக்கி’ என்று பொருள் கூறுகின்றது.
மலத்தைக் கழிவு என்கிற பெயரில் பொருள் பதிவு உள்ளது. மலக்கதிர்- மும்மலத்தார், மலத்திரயம்- மும்மலம், மலம், அழுக்கு, இருள், குற்றம், தீவினை,வகை மூம்மலம், ஆணவம், கன்மம், மாயை, பொதுவாக இச்சொல் மலத்தையே குறிக்கும்.
நிறைவாய்
நரகல் தின்னும் கருத்த பன்றிகள் கூட்டம் பெருகி கிடந்ததைப் பார்த்திருப்போம். நரகல் என்கிற மலத்தில் துப்பக் கூடாது. பீக்கு முந்திய குசு போல, இப்படி மலம் பற்றிய பேச்சு வழக்கு எத்தனையோ உள்ளன. அருந்ததியர் பற்றி, “கிருத்துவ சபைகள் கூட அருந்ததியர் மக்களை தங்கள் செயல்பாடுகளில் 1930 வரை சேர்த்துக் கொள்ளாமல் புறக்கணித்தது”15 என்ற பதிவு இருந்தாலும் மாற்கு என்ற சேசு சபை துறவி ‘அருந்ததியர் வாழும் வரலாறு’ என்கிற நூலை எழுதியுள்ளார்.
அருந்ததியினர்ப் பற்றி புனைகதைப் பதிவுகளாக, தகழி சிவ சங்கரன் எழுதிய ‘தோட்டியின் மகன்’ தமிழில் சுந்தர ராமசாமி மொழிபொயர்த்தார். பூமணியின் பிறகு, அறிவழகனின் கழிசடை, பெருமாள் முருகனின் கூள மாதாரி, மலர்வதியின் தூப்புக்காரி, பாண்டியகண்ணனின் சலவான், மழைப்பாறை ஆகிய புதினங்களிலும் துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வைப் பதிவு செய்திருக்கின்றனர்.
வெளிக்கிருக்க போகாத மனுசன் இல்லை. வெளியே போகவில்லை என்றால் வாழ்க்கை இல்லை. மனிதர் வாழ்வில் உண்ட உணவு செறித்து கழிவாக வெளியேறும், இது ஒருநல்ல உடலுல் ஒவ்வொரு நாளும் நடக்கும் சங்கிலி சங்கதி. சென்னை நகர் முன்னேற்றத்திற்கு சாக்கடைத்திட்டம் 1882 நிறைவேற்றப்பட்டு ஒழுங்குப்படுத்தப்பட்டது. இதில் துப்புரவுப் பணியாளர்களாக அன்று செருப்பு தைத்துக் கொண்டிருந்தவர்களையும் தோல் பதனீடு செய்பவர்களையும் ஆட்படுத்தினர். பின்னர் தெரு சுத்தம், சாக்கடை சுத்தம் கழிப்பறை சுத்தம் என்கிற பெயரில் இழிநிலைக்கு உள்ளானர்கள்..
குறிப்புகள்
1.தொ.பரமசிவன்., பண்பாட்டு அசைவு., காலச்சுவடு பதிப்பகம். ப.42
2. கி.ராஜநாராயணன்., கோபல்லகிராமம்.,ப.8
3.பழ.அதியமான்.,சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்., காலச்சுவடு பதிப்பகம். ப.27
4. , அ.கா.பெருமாள்., உணவுப் பண்பாடு.,
5. அபே ஜெ.எ.துபுவா., (தமிழில்:வி.என்.ராகவன்).,இந்திய மக்கள் மதம்-பழக்கவழக்கங்கள்-நிறுவனங்கள்.,அலைகள் வெளியீட்டகம். (ப.154)
6. திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப்பாடலகளில் சமுதாய அமைப்பு.,ப.173
7. …….. ப.92
8. டி.டி.கோசாம்பி., பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும்., ப.216
9. கே.கே.பிள்ளை., உலகத் தமிழாராச்சி நிறுவனம்.
10. சு.பொ.அகத்தியலிங்கம்., சாதிய வேர்கள் விளைவுகள் சவால்கள்.,ப.32
11 எட்கர் தர்ஸ்டன் (தமிழில் க.ரத்னம்)., தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்., தொகுதி 2., தமிழ்ப் பல்கலைக் கழகம்., தஞ்சாவூர்
12. க்ரியா தமிழ் அகராதி., ப.813
13. முருகையா(தொ.ஆ).,நெல்லை வட்டாரா வழக்குச் சொல்லகராதி.,ப.138
14. செந்தமிழ் அகராதி., ப.532
15. …………, அருந்ததியர் உள் இடஒதுக்கீடு வரலாறும், அவசியமும்., ப.11
- மா.ச.இளங்கோமணி