மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் வேலையை இந்திய அரசு 1993-லேயே தடை செய்துவிட்டது. அதனைத் தொடர்ந்து 2013-ல் அத்தகைய செயல்களில் ஈடுபட வைப்போரைத் தடுக்கும் பொருட்டும், மனிதக் கழிவை அள்ளும் வேலைக்குத் தள்ளப்படுவோர்களுக்கு நிவாரணம் மற்றும் மாற்றுத் தொழிலில் ஈடுபட வைப்பதையும் உறுதி செய்வதற்கு The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013 (மனிதக் கழிவை மனிதனே அள்ள பணியாளர்களை அமர்த்துதல் தடை மற்றும் அவர்களுக்கான புனர்வாழ்வுச் சட்டம் 2013) என்ற சட்டம் மற்றும் அதனுடன் விதிமுறைகளையும் மத்திய அரசு இயற்றியது. ஆனாலும் அத்தகைய சட்டங்களும் விதிமுறைகளும் தற்போது காகித்தில் மட்டுமே உள்ளன. அச்சட்டம் முறையாக அமல்படுத்தப்படாத காரணத்தால், தற்போதும் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோகின்றன. இதில் ஆச்சரியத்திற்கு உரியது என்னவென்றால் இத்தகைய கொடூர சம்பவங்களில் தமிழகம்தான் முன்னிலை வகிக்கின்றது.manual scavenging

அரசின் அலட்சியமும், அதிகரித்து வரும் மனிதக் குழி இறப்புகளும்

மனிதக் குழியில் மனிதனே இறங்கி கழிவுகளை அள்ளும் பணிகளில் ஈடுபடுவோருக்கு முறையான மாற்றுத் தொழிலில் ஈடுபடுவதற்கான உதவிகள் மற்றும் நிவாரணங்களை கொண்டு சேர்க்கத் தவறிய அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் வேறு வழியின்றி பல பேர் இன்றும் இப்பணியை தொடர்ந்து வருகின்றனர். தமிழக அரசின் தகவல்படி தமிழகத்தில் மட்டும் கடந்த 2013 முதல் 2018 வரை 144 பேர் மலக்குழியில் இறந்துள்ளனர். இத்தகைய அவலத்திற்குப் பிறகும் தமிழக அரசு சுதாரிக்கத் தவறி விட்டது. தற்போது 2019 ஆண்டில் மட்டும் 14 மரணங்கள் மனிதக் குழியில் பணிசெய்யும்போது ஏற்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான மரணங்கள் சென்னை மற்றும் கோவை போன்ற பெருநகரங்களில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

தமிழகத்தில் உள்ள மனிதக் கழிவுகளை அள்ளும் பணியாளர்களின் எண்ணிக்கை

2013 சட்டத்தின்படி தமிழகத்தில் மனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலாளிகளை அடையாளம் கண்டு கணக்கிடும் பொறுப்பு நகராட்சிகளின் நிர்வாக இயக்ககத்திடம் ஒப்படைக்கப் பட்டது. அதன்படி மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழு அமைத்து கணக்கிடும் பணி நடைபெற்று அடையாளம் கண்ட தொழிலாளர்களுக்கு ஒரு தவணை உதவித் தொகை நிவாரணம் மற்றும் மாற்றுத் தொழிலில் ஈடுபட பயிற்சியும், பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்க சட்டத்தில் வழிவகுக்கப் பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு இதுநாள் வரை 363 பணியாளர்களை மட்டுமே கண்டறிந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களிலேயே உள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது. அடையாளம் கண்டுள்ளவர்களுக்கும் முறையான நிவாரணங்கள் சென்று அடைந்ததாக தகவல்கள் எதுவும் இல்லை.

எடுத்துக்காட்டாக சென்னை பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் கண்டுள்ள 173 பணியாளர்களுள் 18 பேருக்கு மட்டுமே ஒரு தவணை உதவித் தொகை கொடுக்கப் பட்டுள்ளது. மீதிப் பேருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவர்களுக்கு மாற்றுத் தொழில் செய்ய பயிற்சி மற்றும் இதர நிவாரணங்கள் வழங்காமல் அரசு அலட்சியம் காட்டி வந்தால் என்னவாகும்? அவர்களின் குடும்பத்தைக் காப்பாற்ற மீண்டும் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் நிர்பந்தத்திற்கு செல்லக் கூடும் என்பதை அரசும், அரசு அலுவலர்களும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விழிப்புணர்வு

மாநிலத் தலைநகர் சென்னையிலேயே மனித மலத்தை மனிதனே அள்ளும் செயல் நடக்கும்போது, விழிப்புணர்வு இல்லாத சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை அரசு அதிகாரிகள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிறு நகரங்களிலும், கிராமத்திலும் நமக்கும், ஊடகங்களுக்கும் தெரியாமல் எத்தனை மனிதக் குழியில் பணிபுரிபவர்கள் உள்ளனரோ? அவற்றில் நமக்குத் தெரியாமல் எத்தனை மரணங்கள் ஏற்பட்டனவோ? எத்தனை குடும்பங்கள் இந்த அவலத்தால் தவிக்கின்றனவோ? என்ற கேள்விக்கு அரசே பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளது.

எங்களுக்குத் தெரியாது என்ற பதில் நிச்சயம் அரசிடமிருந்து வரக்கூடாது. ஏனென்றால் அரசு இயந்திரமானது கிராமம் முதல் பெருநகராட்சி வரை பரந்து விரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு அரசு இயந்திரமும் தனது பணிகளை செவ்வனே செய்து மனித மலத்தை மனிதனே அள்ளும் பணி தடை செய்யப்பட்ட ஒன்று என்பதையும், அப்பணியில் ஈடுபட்டு வருபவர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு நிவாரணம் மற்றும் மாற்றுத் தொழில் பயிற்சி அளிக்க வழி வகுத்தால் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை குறையும், நாளடைவில் அத்தகைய மரணமே தவிர்க்கப்படும். தமிழகத்திற்க்கு வந்த இந்த அவலம் நீங்கும். தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கும்.

- சி.பிரபு