தொடர்புடைய படைப்புகள்

நீதிமன்றத்தில் அனைத்தும் விசாரிக்கப்பட்டு நீதிபரிபாலனம் செய்யப்பட்டது. இறந்தவர்களின் பெயர் விபரப்பட்டியல் மற்றும் இழப்பீட்டுத்தொகைக்கான காசோலைகளும் தயார் செய்யப்பட்டது. இதுதான் தற்போதைய இந்தியாவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய மக்களின் வாழ்க்கை நிலை.

கரூரில் நடைபெற்ற ஒரு அரசியல் கட்சியின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறப்பு என செய்தி. இவ்வாறு நடப்பது டிஜிட்டல் இந்தியாவிற்கே அவமானகரமான ஒன்று. ஆனால் சில, பல வாரங்களில் இந்நிகழ்வு தணிக்கை செய்யப்படாத பதிவேட்டின் அடிக்குறிப்பை போல மாறிவிடும்.

ஆம் இது ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல. இது நமது இந்திய நாட்டின் ஒரு அமைப்பு முறையான பேரிடர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள மோசமான நோய். இந்த அமைப்புமுறையில் கூட்ட நெரிசல் மரணங்கள் வழக்கமான ஒன்றாக மாறிவிட்ட நிலையை நாம் பார்க்கிறோம். இந்த கூட்ட நெரிசல்கள் கடவுளால் உண்டாக்கப்பட்டது அல்ல. அரசியல் அல்லது மரபு சம்பிரதாயம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் அழுத்தம் பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு நெறிமுறைகளைப்பார்த்து கேலியாய் சிரிக்கும் நிகழ்வுகளின் வெளிப்பாடு. நிர்வாகத்தின் போதாமை, ஒருங்கிணைப்பின் அலட்சியம் என்ற நமது தேசிய குணத்தின் மூலம் தொடர்ந்து நடந்துவரும் கூட்ட நெரிசல் மரணம் என்ற தொடர்கதை இது.

இது இந்தியா முழுவதும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பரவியிருக்கு ஒரு வியாதி. இந்த கூட்ட நெரிசல் மரண வியாதிக்கு இந்த மாநிலம், அந்த மாநிலம், இந்த ஊர், அந்த ஊர், இந்த அரசாங்கம், அந்த கட்சி என்ற பாகுபாடு கிடையாது. இதை தடுக்கும் தடுப்பாற்றலும் இதுநாள்வரை இந்தியாவில் யாருக்கும் இல்லை.

1992 ஆம் ஆண்டில் கும்பகோணம் மகாமகத்தில் அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மறைந்த தலைவர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் 48 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டுபோனார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிகழ்வும் நமது வரலாற்றில் வடுவாக பதிந்து உள்ளது. அதனை அழிக்க இயலாது.

2024 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹத்ராஸ் -ல் நடைபெற்ற சத்சங்க நிகழ்வில், குழந்தைகளும் பெண்களுமாக மொத்தம் 121 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் நடந்ததை நாம் அனைவரும் அறிவோம். அரசு இயந்திரம் பல்வேறு காரணங்களால் அந்த உயிரிழப்பைத்தடுக்க முடியாமல் போயிருக்கலாம். கும்பமேளாவில் மில்லியன் கணக்கில் மக்கள் கலந்து கொள்கின்றனர். கூட்ட நெரிசல் மரணங்களும் நடக்கின்றன. அதை நம்மால் தடுக்க முடியவில்லை. கூட்டம் கூடினால் அதிகமானால் இப்படித்தான் நடக்கும் என்று நமது பொதுப்புத்தியில் பதிந்துவிடுகின்றது. கடைசியாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் எத்தனை பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள் என்ற சரியான எண்ணிக்கை கூட இந்திய மக்களுக்கு கிடைக்கவில்லை.

ஒருவேளை கும்பமேளாவில் இத்தனை பேர் இறந்துவிட்டார்கள் என்ற விபரம் நாட்டு மக்களுக்கு தெரிந்துவிட்டால் அங்கு ஆளும் கட்சியின் நிர்வாகத்திறமை இந்திய மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற அச்சம் கூட எண்ணிக்கை விபரம் தெளிவாக வெளியிடப்படாததன் காரணமாக இருக்கலாம்.

மேற்கண்ட சம்பவமானது, மதம் சார்ந்த நம்பிக்கை நிகழ்வின் கூடுகை, படிப்பறிவில்லா பாமர மக்கள் கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்டனர் என நாம் கடந்து போய்விட்டோம்.

கேரள மாநிலம் கொச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 2023 ஆம் வருடம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பயின்ற மாணவர்கள் குழுமியிருந்த ஆடிட்டோரியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆடிட்டோரியம் சிறியது. ஆயிரக்கணக்கில் மாணவர்கள் கூடிவிட்டனர் , இறப்புகளைத்தவிர்க்க முடியவில்லை என்று காரணம் சொல்லி நாம் கடந்து சென்றுவிட்டோம்.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி சென்னை கே. கே . நகரில் நடந்த தமிழக அரசின் வெள்ள நிவாரண உதவி வழங்கும் இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 50 பேர் உயிரிழந்தனர்.

2011 –ல் கேரளாவில் சபரிமலை கூட்ட நெரிசலில் 104 பக்தர்கள் உயிரிழந்தனர். வாரணாசியில் 2016 –ல் ராஜ்காட் பாலத்தில் நடந்த ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 24 பேர், பாட்னா தசரா விழாவில் 33 பேர் என கூட்ட நெரிசல் உயிரிழப்பு என்பது மாறிமாறி தொடர்கதையாக நமது இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. கூட்ட நெரிசல் உயிரிழப்பு என்பது படித்தவர், படிக்காதவர், மத நம்பிக்கையுடையவர், இல்லாதவர் என்ற பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களையும் காவு வாங்கி வருகின்றது.

அந்தந்த இடங்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஒருங்கிணைப்பவர்களுக்கும், அதற்கு அனுமதி வழங்கும் அரசு நிர்வாகங்களுக்கும் ஏன் இந்த நிலை ஏற்படுகிறது என்ற சிந்தனை எப்போதாவது எழுந்திருக்குமா என்பது கேள்விக்குறியே?

நமது நாட்டில் அடுத்தடுத்து விழாக்காலங்கள், தேர்தல் பிரச்சாரங்கள், ஊர்வலங்கள், மாநாடுகள், தசராக்கள் என தொடர் நிகழ்வுகள் வருடாவருடம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கவே முடியாதா என யோசிக்கும் நிலைக்கு மக்களாகிய நாமாவது வந்திருக்கிறோமோ என்றால் அதுவும் கேள்விக்குறியே?

நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினத்தில் இராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்;டிவிட்டோம். நிலாவுக்கு விண்கலம் அனுப்பிவிட்டோம். ஆனால், கூட்ட நெரிசல் மேலாண்மையில் நாம் பின்தங்கிவிட்டோம். கூட்டத்தைக்கட்டுப்படுத்த இன்றும் ஒலிபெருக்கியில் கத்திக்கொண்டு, லத்தியை தட்டிக்கொண்டு தீர்வை நோக்கி நகராமல் காலத்தை கடத்தி கொண்டிருக்கிறோம்.

ஆம் மக்களாகிய நமக்கு அரசாங்கத்தை விட நமது உயிர் மீது அதிக பொறுப்புள்ளது. சென்னையில் நடந்த இந்திய விமானப்படையின் ஏர் ஷோ என்ற சாகச நிகழ்ச்சியை பார்க்கச்சென்ற கூட்டத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். ஏர் ஷோ நடைபெற்ற இடம் விசாலமான மெரினா கடற்கரை ஆகும். எத்தனை விசாலமான இடமாக இருந்தாலும், மக்கள் திரள் அதிகரித்து விட்டால் ஏற்படும் தள்ளுமுள்ளவில் உயிரிழப்பு என்பது தவிர்க்க முடியாததாக மாறிவிட்ட காலம் இது. ஆக மக்களின் மனநிலை மற்றும் சிந்தனையோட்டம் ஒரு இடத்திற்கு செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

பேரிடர் மேலாண்மை சட்டம் - 2005 என பல்வேறு நெறிமுறைகள் வழிமுறைகள் நம்மிடம் இருந்தாலும் யார் இதை நடைமுறைப்படுத்துவது?

கோவில்களில் கூட்டம் கூட்டமாக தான் விரும்பும் இறைவனை தரிசிக்க நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் பிள்ளை குட்டிகளோடு காத்திருக்கும் பொது மக்களைப்பற்றி எந்தவித கவலையும் அக்கறையும் இன்றி சிறப்பு விஐபி தரிசன வழியில் சாமி கும்பிடும் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாண்பமை நபர்களுக்கு கூட்ட நெரிசலைப்பற்றி என்ன அனுபவம் இருக்கும்? அவர்கள் கூட்ட நெரிசலைப்பற்றி கவலைப்படுவார்களா என்ன?

கரூர், ஹத்ராஸ், சபரிமலை, கொச்சின் பல்கலைக்கழகம், சென்னையில் விமானப்படையின் ஏர் ஷோ, 2005 –ல் வெள்ள நிவாரணம் வாங்கச்சென்ற மக்கள் கூட்ட நெரிசலில் பலியானது உட்பட கூட்ட நெரிசல் உயிரிழப்புகளை நாம் சர்வசாதாரணமாக மறந்து போக பழகியிருக்கிறோம்.

எல்லாவற்றிற்கும், ஆளும் அரசுகள் தான் பொறுப்பா ? அறத்தின் வழியில் அரசு செல்ல அங்குசம்தான் மக்கள் சக்தி….. அப்படிப்பட்ட மக்கள் தான் இந்திய குடியரசின் பொறுப்பான குடிமக்களாகிய நாம் வல்லரசு நாட்டின் ஜனங்களாகிய நாம், இதுபோன்ற கூட்ட நெரிசல்களில் சிக்கி கொள்ளாமல், கலந்து கொள்ளாமல் முன்னெச்சரிக்கை உணர்வோடு அதனை தவிர்க்க பழகுவோம். நம் சந்ததிகளையும் பாதுகாப்போம். வீட்டில் ரேசன் கடைக்கோ, இதர அத்தியாவசிய பொருள்கள் விற்பனை நிலையங்களுக்கோ சென்று வீட்டின் தேவைகளை, ரேசன் கடையில் கூட்டமாக உள்ளது நான் போக மாட்டேன் என மறுக்கும் இன்றைய இளம் தலைமுறை தேவையற்ற இடங்களில் கூட்டத்தில் சிக்கி உயிரை விடுவது ஏற்புடையது அல்ல.

தேசம் என்றால் மக்கள்தான். தேசப்பற்று என்றால் மக்கள் மீதுள்ள பற்று. தேசம் என்பது வெறும் நிலமும், இடமும், மண்ணும், மண்ணாங்கட்டியும் அல்ல என்பதை உணர்வோம். பொறுப்புணர்வோடு இந்திய மக்களாகிய நமது செயல்பாடுகள் அமையட்டும். ஆளும் அரசுகளை மட்டும் குறைசொல்லாமல் நாமும் கொஞ்சம் முன்யோசனையோடு சிந்தித்து பொது இடங்களில் செயல்படுவோம். பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வோம். இந்த கூட்ட நெரிசல் மரணம் என்ற அவலநிலை தொடர்கதைக்கு முடிவுரை எழுதுவது என்ற எண்ணம் நமது சிந்தனையில் உதயமாகட்டும்.

யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பதை விட நாம் என்ன செய்யலாம். நம்மால் என்ன செய்ய முடியும் என்ற சிந்தனையே மாற்றத்தை உருவாக்கும்.

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் வரிகளில், ‘கெட்டவை, தப்பானவை, ஒழுங்கினமானவை, சல்லித்தனமானவை, அபத்தமானவை, அற்பங்கள், நோய்கள், புண்கள், இவற்றில்தான் மனிதர்கள் அடர்ந்து இருக்கிறார்கள். பலவீனங்கள் என்று சொல்லப்படுபவையால் ஆனவனே மனிதன். பலம், இயற்கை அல்ல. பலவீனம், முட்டாள்தனம், அபத்தமே மனிதாம்சங்கள். நாம் மனிதர்களோடுதான் இருக்க முடியும்.

 - சு.பாலகணேஷ்

More articles by சு.பாலகணேஷ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.