இந்திய சமூகம் இயங்கிய முறை:
இந்திய சமூகம் நான்கு வர்ண சமூகமாக இருந்தது. இதில் மேல் வர்ணத்தார் எனப்படும் பார்ப்பனர், ஷத்திரிய வர்ணத்தாருக்கு இடையே அதிகாரப் போட்டிகள் இருந்து வந்தன. அவர்களே ஆட்சியிலும், கல்வியிலும் இன்ன பிற மேன்மை தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு வரை மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் கொண்டே இந்திய சட்டங்கள் இயங்கின. ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின் கல்வி, வேலை வாய்ப்பு இவை அனைத்திலும் உயர் வர்ணத்தார் மட்டுமே இருப்பதைக் கண்டு சூத்திரர்கள் கலகக் குரல்கள் எழுப்பினர். அவற்றின் விளைவு எல்லோர்க்கும் எல்லாம் என்ற நிலை மெல்ல உருவாகத் தொடங்கியது.
மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் பெண்களுக்கு வகுத்த விதிகள்:
மனுஷ்மிருதியில் பெண்களுக்கான விதியாகக் கூறப்படுவது பெண்கள் சமூக கட்டமைப்பில் எப்போதும் கீழ்நிலை வகையைச் சார்ந்தவர்கள். அதில் அனைத்து வர்ணப் பெண்களும் அடங்குவர். பெண்களுக்கு என்று சுயநினைவுக்கும், தனிப்பட்ட விருப்பத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மனிதப் பிறவிக்கு சமமான உரிமை பெறத் தகுதியற்றவர்கள். அவர்களது பிறப்பே இழிபிறப்பு. பெண்கள் தங்கள் கணவன், தந்தை அல்லது மகனின் கையாளுதலில் மட்டுமே இருக்க வேண்டும். அதுவே மனுஷ்மிருதியில் பெண்களுக்காண சட்டம். ஆண்களுக்கு கீழ்படிந்து, மனிதப் பிறவியற்று கீழான பிறவியாக வாழ்வதே பெண்களுக்கான கடமையாக மனுஷ்மிருதி கூறுகிறது.
அர்த்தசாஸ்திரத்தில் பெண்களை பொருள் ஈட்டுவதிலிருந்து, அரசியலில் ஈடுபடுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். பெண்கள் தங்கள் குடும்ப அமைப்பின் மேன்மையிலும், குடும்ப விருத்தியிலும் மட்டுமே கவனம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். ஆண்கள் அன்றி பெண்கள் எவ்வித செயல்பாடுகளிலும் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாதியின் கொடூரமும், ஆணாதிக்கத்தின் உச்சநிலையுமே மனுவும், அர்த்தசாஸ்திரமும். இது சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகும் கீழ்நிலை சாதியைவிட, கீழான பிறவியாக அனைத்து சமூக பெண்களும் கருதப்பட்டனர். இதில் ஒடுக்கப்பட்ட சூத்திரப் பெண்களுக்கு சாதி இழிநிலையும் சேர்ந்து கொள்கிறது.
இந்தியாவில் இடஒதுக்கீடு
இடஒதுக்கீடு என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவதும், சமுதாயத்தின் நலிந்த பிரிவினர், குறிப்பாக சமூக, கல்வி, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் சம வாய்ப்பை வழங்குவதுமாகும்.
இந்தியாவில் இடஒதுக்கீடு சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே இட ஒதுக்கீடு கருத்தாக்கம் உருவாயிற்று. 1921இல், நீதிக் கட்சியைச் சார்ந்த பனகல் அரசர் தலையிலான மெட்ராஸ் மாகாண அரசு பார்ப்பனர் அல்லாதவருக்கு 44%, பார்ப்பனர்கள், முஸ்லீம்கள், ஆங்கிலோ இந்தியர்களுக்கு தலா 16%, பட்டியலின மக்களுக்கு 8% அரசு வேலைகளை வழங்கியது. 7 ஆண்டு கழித்து, 1928 இல் சுப்பராயன் தலைமையிலான அரசு communal G.O. என்னும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு செயல்வடிவம் கொண்டு வந்தது. அன்றிலிருந்து 1950 வரை அமலில் இருந்த இந்த அரசாணை வேலைவாய்ப்பிலும், கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையிலும் பயன்படுத்தப்பட்டது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னர், அண்ணல் அம்பேத்கர் தலைமையில் தனி அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. அதன்படி சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், குறிப்பாக பட்டியலின, பழங்குடியின வகுப்பினரின் கல்வி, பொருளாதார நலன்களில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி அவர்களை இடஒதுக்கீட்டின் மூலம் சமூக அநீதியிலிருந்து பாதுகாக்க வேண்டி அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது
ஆனால் பட்டியலின, பழங்குடியின அல்லாத இதர பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு தரப்படவில்லை. அந்தக் கோரிக்கையை அன்றைய பிரதமர் நேரு ஏற்காததால், அமைச்சரவையில் இருந்து பதவி விலகினார் அண்ணல் அம்பேத்கர். பின்னாளில் 1989 ஆண்டு மண்டல் கமிஷனைப் பயன்படுத்தி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கியது விபி.சிங் அரசு. இதனால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு பெற்றனர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இதில் எங்கும் பெண்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை எழவில்லை.
இந்தியாவில் பெண்கள் இடஒதுக்கீட்டுக் குரல்:
இட ஒதுக்கீடு வேண்டும் என்று கலகக் குரல்கள் எழுப்பியவர்கள் யாரும் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கவில்லை. இட ஒதுக்கீட்டுப் போராட்டம் என்பது சாதிய ஒடுக்குமுறைக்கும், சமூக சமத்துவத்திற்காக நடந்ததே ஒழிய அதில் பெண் ஓர் அங்கமாக கருதப்படவில்லை பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று முதன் முதலில் முழங்கியது 1927ல் All India women's Conference (AIWC). கல்வி, வேலை, அரசியல் ஆகியவற்றில் பெண்களுக்கான இடஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினர் இந்த மாநாட்டில் முக்கிய பங்கு வகித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஐரிஷ் பெண்ணான மார்கரெட் குயின்ஸ் (Margaret Cousins). பெண்களுக்கு அரசியல் உரிமைகள், இடஒதுக்கீடு வேண்டும் என்ற கருத்தை நாடு முழுவதும் பரப்பினர். அன்றைய மகளிர் உரிமைப் போராளியாக கருதப்பட்ட ஹன்சா மேத்தா, ரேணுகா ராய் போன்றோர்களும் சம உரிமை வேண்டும் என்று மட்டுமே முழங்கினர். அரசியல் சட்ட சபையில் 1946-49 பெண்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்ட ஹன்சா மேத்தா, ரேணுகா ராய் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற கருத்தை வலியுறுத்தினர், அவர்கள் ஆண்களுக்கு நிகரான சம உரிமை மட்டுமே கேட்டனர். அவர்கள் அப்படிக் கேட்டதில் தவறில்லை. ஏனெனில் அவர்கள் உயர் ஜாதி வகுப்பைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு என்று சாதி இழிவு ஒன்று இல்லை. அவர்கள் எதிர் கொண்டது ஆணாதிக்கம் மட்டுமே. ஆகையால் கூட அந்நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருக்கக் கூடும்.
பின்னாளில் 1970-80 களில் பெண் இயக்கங்கள் எழத் தொடங்கின. அந்த இயக்கங்கள் பெண்களிடையே வலுப்பெறத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை மீண்டும் வலு பெறத் தொடங்கியது.
உயர் சாதிப் பெண்களுக்கு இல்லாத நெருக்கடி பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினப் பெண்களுக்கு உண்டு. இங்கு ஒரு மனிதன் சாதியால் மட்டுமே மதிப்பிடப்படுகிறான். ஆனால், பெண்களுக்கு இரண்டு மதிப்பீடுகள் இந்த சமூதாயத்தில் நிலவுகிறது. ஒன்று பெண் என்றும், மற்றொன்று இன்னசாதிப் பெண் என்றும் மதிப்பிடப்படுகிறது. உயர் சாதிப் பெண்களுக்கு கூடுதல் மேன்மையும், சூத்திரப் பெண்களுக்கு கூடுதல் இழிவும் இச்சமுகத்தில் நிலவுகிறது. அதனால் தான் பெண்களுக்கான இட ஒதுக்கீடுக் கோரிக்கை எழும் போதெல்லாம் உள்ஒதுக்கீட்டுக் கோரிக்கையும் சேர்ந்தே எழுகிறது.
அதன் விளைவு 1992-93 பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் 73வது மற்றும் 74 வது அரசியல் அமைப்பு சட்டத்திருத்தங்கள் மூலம் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகராட்சியில் 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
விடுதலை அடைந்து சுமார் 40 ஆண்டுகள் கழித்து பெண்களின் போராட்டத்திற்கு சிறு ஆறுதலாக இந்த சட்டத்திருத்தம் அமைந்தது. ஆயினும் முழு வெற்றி கிட்டவில்லை. இதன் மூலம் அரசியல் துறையில் பெண்கள் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னதாக, பஞ்சாயத்துத் தேர்தல்களில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இடஒதுக்கீடு வந்த பின், ஆயிரக்கணக்கான பெண்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் அரசியல் என்பது ஆண்களின் உரிமை மட்டும் அல்ல என்ற எண்ணம் சமூகத்தில் உருவானது. பெண்கள் தலைவர்களாக வந்த பின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் அதிக கவனம் பெற ஆரம்பித்தன. இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் SC/ ST பெண்கள் தலைவர்கள் ஆயினர். இதன் மூலம் சாதிய- வர்க்க மேன்மைகள் உடையத் தொடங்கின.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. பெண் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், அரசியல் பெண்ணாளுமைகளும் பல ஆண்டுகளாக பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கான உள் ஒதுக்கீடு கூடிய பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக போராடி வருகின்றனர். ஆனால் சட்டமசோதா கொண்டு வரப்படும், பிறகு நிறைவேற்றப்படாமல் முழுமையடையாமல் நின்றுவிடும். இது போல் கடந்த 1996 ல் இருந்து கடந்த 25 வருடங்களாக நடைபெற்று வந்தது. 2023 ஆம் ஆண்டு "நாரி சக்தி வந்தன் சட்டம்" என்ற பெயரில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீடு அனைவராலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை.
வெளிநாடுகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு:
வெளிநாடுகளில் பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன. நார்டிக் நாடுகளில் (ஸ்வீடன், நோர்வே, டென்மார்க்) அரசியல் கட்சிகள் 40–50% பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துகின்றன. ருவாண்டாவில் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் 30% இடஒதுக்கீடு உள்ளது. இதனால் அந்நாட்டில் நாடாளுமன்றத்தில் பெண்கள் 60%க்கும் மேல் உள்ளனர். பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் Gender Parity Law மூலம் ஆண்கள் – பெண்கள் சமமாகவே வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர். நேபாளத்தில் 33% இடஒதுக்கீடு சட்டரீதியாக உள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்தில் சட்டப்படி இடஒதுக்கீடு இல்லையென்றாலும், கட்சிகள் தன்னார்வ அடிப்படையில் பெண்களை அதிகமாக நிறுத்துகின்றன.
ஒப்பீட்டளவில் இந்தியாவை விட வெளிநாடுகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு சிறந்த முறையில் செயல் வடிவம் கொண்டுள்ளது. அது பெண்களுக்கான வளர்ச்சியை உறுதி செய்துள்ளது.
நாடு விடுதலை அடைந்து 78 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த தேசத்திற்காகவும், சமூகத்திற்காகவும் பெண் போராளிகள் செய்த தியாகங்கள் ஈடு இணையற்றது. எப்படி இந்த நாடு சாதி என்னும் பெரும் பேயால் பீடிக்கப்பட்டிருக்கிறதோ, அதே போல் சாதி மற்றும் ஆணாதிக்கப் பேய்பிடியில் பெண்களை வைத்துள்ளது. அதனால் மிகவும் நலிந்த பிரிவினரான பெண்களுக்கு குறிப்பாக சாதியாலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு இந்த அநீதிக்கு எதிராக மற்ற நாடுகளைப் போல் இன்னும் சட்ட ரீதியான சமூகநீதி வழங்கப்படவில்லை அல்லது இன்னும் பெண்களுக்கான சமூகநீதி அரசியல் செயல்வடிவம் பெறவில்லை.
எனவே, அனைவரும் சேர்ந்து ஒருமித்த குரல் எழுப்புவோம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்று.
- காயத்ரி விஜயபாஸ்கர்