தமிழர்களின் மரபுத்தொடர் அறவொளிக் குவடான தந்தை பெரியார் காமராசருக்குச் சூட்டிய பெயர் ‘பச்சைத் தமிழர்’ என்ற தொகைச்சொல். இச்சொல் தமிழ்நாட்டு அரசியலில் காமராசரின் செயல்பாடுகளையும் ஈகத்தையும் தமிழக மக்கள் மேல் அவர் கொண்ட நேசத்தையும் பறை சாற்றும் ஒரு பண்புச்சொல்.
இராண்டாயிரம் ஆண்டுகள் இடைவிடாது நடந்து வரும் திராவிடர் ஆரியர் போரில் எந்தப் போராளியும் எந்தச் சூழ்ச்சியாளனும் திறனாளனும் செய்யாத ஒர் அரிய செயலை செய்தார் தந்தை பெரியார்.
பகையாளிகளின் அம்பறாத்தூணியில் இருந்து அம்பெடுத்து பகைவர்களை வீழ்த்துவதே வாடிக்கையாக கொண்ட ஆரியர்களின் படையிலிருந்தே காமராசு எனும் அம்பெடுத்து தமிழக அரசியலில் ஆரியக் கோட்பாட்டை வீழ்த்திக் காட்டினார் தந்தை பெரியார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை சரியாகப் படித்தவர்களுக்குத் தெரியும் இந்த உண்மை. தந்தை பெரியார் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட காமராசரை ஆதரித்து பரப்புரை செய்தார். அறிஞர் அண்ணா தி.மு.க. சார்பாக வேட்பாளரை நிறுத்தாமல் காமராசரை ஆதரித்தார். காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக இன்று காமராசரை ஆதரிக்கும் காங்கிரசு காரர்களும் காமராசர் சார்ந்த சாதிக்காரர்களும் காமராசர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆன காலச்சூழலை எந்த அமைப்பு ஏற்படுத்திக் கொடுதது என்று சிந்திப்ப தில்லை. பெரியாரும் திராவிடர் அமைப்புகளும் தமிழகத்தில் தோன்றியிருக்கா விட்டால், தொடர்ந்து பார்ப்பனர்கள்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாக இருந்து இருப்பார்கள். தமிழ்நாடும் சென்னை மாகாணம் என்ற பெயரிலேயே இருந்திருக்கும்.
1967 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் காமராசர் தோல்வியுற்றதில் இருந்தே தி.மு.க.வையும் கலைஞரையும் பழித்துரைப்பதும் இழித்துரைப்பதும் அன்றைய காங்கிரசு என்கின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும் காமராசர் சார்ந்த சாதி வெறியர்களுக்கும் வழமைகிப்போய் விட்டது. காமராசரைக் கொல்ல முனைந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களின் முதலைக் கண்ணீரில் மூழ்கிப்போன காமராசரின் தொண்டர்களுக்கு தி.மு.க.வும் கலைஞரும்தான் திட்டமிட்டு காமராசரை தோற்கடித்தார்கள் என்று பரப்புரை செய்கிறார்கள். அது தூசளவுக் கூட உண்மையில்லை.
காமராசரின் வடிவத்தை வைத்தும் நிறத்தை வைத்தும் பகடி செய்ததாகவும் அதற்கெல்லாம் தி.மு.க.வும் கலைஞரும்தான் காரணம் என்று பகிரி, முகநூல், வலையொளி போன்ற தளங்களில் வலம் வருகின்றன. இந்த வேலையை ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ கூட்டமும்தான் பின்னிருந்து இயக்குகின்றன. அவர்களின் எண்ணமும் இலக்கும் காமராசர் பிறந்த சாதிக்காரர்களிடம் பேசிப் பேசி தி.க., தி.மு.க. போன்ற அமைப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதுதான். இதை இன்று நேற்றல்ல காமராசர் வாழ்ந்த காலத்திலிருந்தே செய்து வருகிறார்கள். அதை இப்பொழுது மிகத் தீவிரமாக செய்கிறார்கள்.
மளிகைக்கடை, தோசைக்கடை, இட்லிக்கடை, துணிக்கடை, செங்கல் சூளை வைத்திருப்போர், கொத்தனார் வேலை செய்வோர், வீடு வீடாக தண்ணீர் குப்பி கொண்டு போடுவோர் மற்றும் இவர்கள் மட்டுமல்லாமல் காமராசர் மீது பற்றும் பாசமும் கொண்ட அனைவரும் ஆர்,எஸ்.எஸ். பார்ப்பன அடிமை இந்துவெறியர்கள் பரப்பும் தவறான செய்தியை நம்பிக்கொண்டு தி.மு.க. மீதும் கலைஞர் மீதும் கடும் வெறுப்பில் பிதற்றித் திரிகிறார்கள். இந்த மாதிரி பேசித்திரிகிறவர்கள் அனைவரும் பகிரி, நாளிதழ், தொலைக்காட்சிச் செய்திகள் தவிர்த்து வேறு எதனையும் படித்தறியா எளிய மனிதர்கள். அவர்களைக் குறிவைத்துதான் கஞ்சிக்கு மாரடிக்கும் கள்ளக்கூட்டங்கள் முடுக்காக வேலை செய்கின்றன.
தமிழிசை சவுந்தரராசன், கரு.நாகராசன் போன்ற நூற்றுக் கணக்கான கோடாரிக்காம்புகளும் ஊருக்கு ஊர் இறங்கி வேலை செய்கிறார்கள். இவர்கள் பொறுக்கித்தின்பதற்காக, தான்சார்ந்த சமுகத்தையும் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு படிக்காத எளிய மக்களையும் திசை மாற்றி, வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக கீழறுப்பு வேலை செய்து வருகிறார்கள்.
காமராசர் மீதும் அவர் ஆற்றிய தொண்டின் மீதும் தி.மு.கவுக்கு எந்தளவு மதிப்பிருந்தது என்பதற்கு காமராசர் விருதுநகர் தொகுதியில் தோற்றபோது அண்ணா மிகவும் வருந்தினார் என்ற செய்தி ஒன்று போதாதா? 1967ல் காமராசர் விருதுநகர் தொகுதியில் தோல்வியடைந்த காலகட்டத்திலும் அதற்கு முன்பும் காங்கிரசு கட்சி தமிழ்நாட்டில் எப்படி எல்லாம் ஆட்சி நடந்தியது என்று வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால்தான் விளங்கிக் கொள்ள முடியும்.
தமிழ்த்தேசியத் தந்தை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ‘தென்மொழி’ இதழில் அன்றைய காங்கிரசின் தகுதி பற்றி இப்படிக் கூறுகிறார். ‘பேராயக்கட்சி யென்பது கொள்ளையர்களும் கொலைஞர்களும் ஒதுங்கிக் கிடக்கும் ‘பாட்டு மடம்’ என்றும், அங்கிருப்பவர்களில் பெரும்பாலோர் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள் என்பதும், சிலர் நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் என்பதும் தென்மொழிக்குத் தெளிவாகத் தெரியும்.’ (தென்மொழி, சுவடி : 4, ஓலை : 12, சனவரி. 1967.)
அன்றைக்கு காங்கிரசு கட்சிக்குள் எப்படிப்பட்டவர்கள் இருந்திருக் கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. இப்படிப் பட்ட மனிதர்களோடு இருந்து கொண்டுதான் காமராசர் தமிழ்நாட்டுக்கு பள்ளிக்கூடங்களைத் திறந்து, பேரணைகளைக் கட்டி தமிழகத்தை வளமாக்கியிருக்கிறார்.
தமிழ் நாட்டில் மகாத்மா காந்தி சென்றடையாத மனமாளிகைகளை எல்லாம் காமராசர் சென்றடைந்தார். ஆட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சான்று காட்டுவது போல சிறப்பாகத் தொண்டாற்றினார். தமிழ்நாட்டு மக்கள் வாழ்வில் புதிய கிழக்குப் பிறந்தது. காலங்காலமாக பார்ப்பனிய சனாதன இருள் மண்டிக்கிடந்த மூளைப் புலங்களில் அறிவொளிப் பாய்ந்தது.
பொறுக்கும்மா ஆரியக் கூட்டத்திற்கு? அடிவயிறு எரிய 20-ஆம் நூற்றாண்டு சாணக்கியன் (இராசாசி) தன் சிண்டை இறுக்கிக் கட்டிக் கொண்டு தனக்குள் ஒரு பிரம்ம வேள்வி நடத்தி தெளிந்தான். அந்த வேள்வியில் பிறந்ததுதான் ‘காமராசர் பாசம்’. சாணக்கியனின் கண்ணசைவுக்கு காத்திருந்த அன்றைய பார்ப்பன ஊடகங்கள் தங்கள் பூணூலை உருவிக் கொண்டு களத்தில் இறங்கின. புதிய கீதை எழுதி நாடெங்கும் பரப்பப் பட்டன. இராசாசி கண்ணனாகவும் காமராசரை அவர் காலடியில் இருந்து வாழ்த்துப் பெறும் அர்ச்சுனனாகவும் கருத்துப் படங்கள் வரையப்பட்டன. நாளிதழ்கள், கிழமை இதழ்களென அனைத்திலும் வண்டி வண்டியாக காமராசரைப் புகழ்ந்தார்கள்.
பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்பது பனிக்கடலின் கீழ்க்கொதிக்கும் எரிமலைப் போன்றது. எளிய மக்களாலும் படித்துப் பட்டங்கள் பெற்ற பட்ட தாரிகளாலும் அதைத்தெரிந்து கொள்ள முடியாது. அதைக்கண்டுணர வேண்டுமானால் திராவிட பெரியாரியல் ஆய்வு மனம் வேண்டும்.
ஆரியப் பார்ப்பனர்கள் ஒருவரை புகழ்கிறார்கள் என்றால் ஒன்று அவரைத் தன்வயப் படுத்தப் பார்க்கிறார்கள் என்று பொருள். அல்லது அணைத்து அழித்தொழிக்கப் போகிறார்கள் என்று பொருள். காமராசரைப் பொருத்தவரையில் இரண்டுமே செய்தார்கள். இந்திய மாநிலங்களில் எந்த மாநில முதல்வரும் கொடுக்காத கல்வி வளர்ச்சியை காமராசர் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தார். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற ஆரிய நரிகள் பொறுத்துக் கொள்ளுமா?
காமராசர் காங்கிரசில் இருந்தாலும் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் திராவிட இயக்கச் செயல்பாடுகளாகவே இருந்தன. அதனால் தான் அவர் முதல்வரானதும் தமிழ்நாட்டில் கல்வி மூலை முடுக்கெல்லாம் ஓடிப்பாய்ந்தது. காமராசர் தன் தொண்டாலும் ஈகத்தாலும் தமிழகத்தில் உயர்ந்த இடத்தை அடைந்ததும் அவரை எடுத்துக் கொண்டாட திட்டம் தீட்டிய பார்ப்பன அரசியல் குள்ளநரிகளும் ஊடகங்களும் உரிமை கொண்டாடத் துடித்தன.
ஒழுங்காக ஆட்சி செய்து கொண்டிருந்த காமராசரிடம் இருந்து ஆட்சியைப் பிடுங்க ‘கே.பிளான்’ திட்டத்தைக் கொண்டு வந்து அவராகவே ஆட்சியை விட்டு இறங்கிப்போக வைத்தார்கள். அனைத்திந்திய காங்கிரசு தலைவராக்கி தன்னாட்சியாக செயல்பட விடாமல் கொலை முயற்சி எல்லாம் செய்து முடக்கினார்கள். அது காமராசரை அரசியலிலிருந்து அழித்தொழிக்கும் செயல். நேரடியாக பார்ப்பனர்களை எதிர்க்கும் தி.மு.க.வையும் கலைஞரையும் எதிர்க்கத் துணிவற்ற பார்ப்பனர்கள் காமராசரைக் கைக்கொண்டு தி.மு.க.வையும் கலைஞரையும் திட்டவும் வசைபாடவும் காமராசரைக் கேடயமாகவும் கருவியாகவும் தொடங்கினர்.
காமராசர் என்கிற மாமனிதரை வைத்து காங்கிரசு கட்சியை கணித்துவிடக் கூடாது. அன்றைய காங்கிரசு என்பது நூறு விழுக்காடு ஆர்.எஸ்.எஸ்.தான். நூறு விழுக்காடு பாரதிய சனதாதான். நூறு விழுக்காடு இந்துத்துவாதான். அந்தச் சனாதன புதைச்சேற்றில் இருந்துதான் கல்விக் கண்மலரை பறித்துக் கொடுத்தார் பெருந்தலைவர் காமராசர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால்தான் அன்றைய பார்ப்பர்கள், சனாதனச் சிந்தனையாளர்கள் கதர் சட்டைக்குள் ஒரு கருப்புச் சட்டைக்காரர் என்று காமராசரைச் சொன்னார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்த பார்ப்பனர்களின் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றிய தி.மு.க. திருக்குறளை மக்களிடம் பரப்பியது, பார்ப்பனப் ‘புரோகித, முறையை ஒழித்துக் கட்டியது, பழைய இறைவணக்கப் பாடலை எடுத்து வீசி விட்டு மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ் வணக்கப் பாடலை கொண்டு வந்தது, சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு, எனப் பெயர் வைத்தது போன்ற சில புரட்சிக்கரமாகன செயல்களைச் செய்ததும் ‘கைபர் போலன்’ கணவாய் நினைவுக்கு வந்து விட்டது போல் அச்சங்கொண்ட ஆரியக்கூடம் தி.மு.க.வை கலைஞரை அழித்தொழிக்க ஆரபித்ததே கதை கட்டும் வேலை.
இன்னும் மூவாயிரம் ஆண்டுகள் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தமிழர்களாக மாறப்போறதும் இல்லை. வாழப் போறதும் இல்லை. தமிழ்நாட்டில் அவர்கள் (பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.) கை ஓங்கினால் மீண்டும் தமிழ்நாட்டை தட்சணபிரதேசமாக மாற்றுவார்கள். ஏனென்றான் தமிழும் தமிழர்களும்தாம் அவர்களின் கடைசி இலக்கு. அந்த இரண்டையும் அழித்து விட்டால் அல்லது ஒடுக்கி விட்டால் அவர்களின் ஆளுமை இந்தியவில் நிலப்பரப்பில் எந்த தொந்தவும் இன்றி தொடரும்.
தமிழையும் தமிழர்களையும் அழிவிலிருந்து காப்பது திராவிட கொள்கைகள்தான். தி.க.தான், திமு.க.தான். அதனால்தான் தி.க., தி.மு.க. இரண்டையும் வன்மங்கொண்டு தாக்குகிறார்கள். அதற்கான ஒரு கருவியாகவும் கேடயமாகவும் காமராசரைப் பயன் படுத்துகிறார்கள். மற்றபடி அவர்களுக்கு காமராசர் மீது எந்த பாசமும் பற்றும் கிடையாது.
காமராசர் வாழ்ந்தக்காலத்தில் தி.மு.க.வின் நிலை என்னவாக இருந்தது என்று பார்க்க வேண்டுமானால் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் ஒரு பதிவைப் பார்த்தால் நன்கு விளங்கும். பார்ப்பனர்களும் அவர்களின் அடிவருடிகளும் பரப்பி வரும் செய்தி எவ்வளவு பொய்யானவை என்பதைக் காட்டும்.
“சென்ற தேர்தலில் விழுந்த அடி உங்கள் மேல் அன்று. நீங்கள் நம்பியிருந்த பக்தவச்சல, சுப்பிரமணியக் கூட்டங்களின் ஒருமித்த கொள்கைகளின் மேலேயே அந்த அடி விழுந்தது. அவர்கள் பிறவியிலேயே ஆரிய அடிமைகள்; பார்ப்பனரை நத்திப்பிழைக்கவே கற்றவர்கள்; பழக்கப் பட்டவர்கள். அவர்களிடமிருந்தும், வடநாட்டுப் பிடியினின்றும் நீங்கள் விலகுவதற்காகவே நீங்கள் அரசியலில் தனிப்படுத்தப் பட்டீர்கள் என்று கருதிக்கொள்ளுங்கள். இன்னொருமுறை இந்தியாவை ஒன்றிணைக்கும் வீண் முயற்சியில் ஈடுபட்டு அரசியலில் நிலையான வீழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டா.’ என்று எழுதுகிறார்கள் (தென்மொழி : சுவடி: 8, ஓலை : 4, சூன் 1970)
ஐயா பெருஞ்சித்திரனார் அவர்கள் தமிழினத்திற்கு அரிதிலும் அரிதாகக் கிடைத்த தமிழ்த்தேசிய பெருவெடிப்பு. தமிழறத்திற்கோர் எடுத்துக் காட்டு. எள்ளளவேணும் நேர்மை வாடாத சீர்மைக்கோல். அப்படிப்பட்ட பேரறிஞர் எழுதியதை எல்லாம் படிக்காத தற்குறிகளும் தன்னலவாதிகளும் போலித் தமிழ்த்தேசிய வெம்பல்களும் வீணர்களும் காமராசர் கொண்ட கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை திராவிடமென்றும் அது அழித்தொழிக்கப்பட வேண்டியவை என்றும் கூறி அந்தக் காமராசரைக் கொண்டே திராவிடத்தையும் அதன் தலைவர் களையும் பற்றிப் பொய்யுரைகளையும் புனைவுரைகளையும் பரப்பி வருகிறர்கள்.
அதே ஐயா பெருஞ்சித்திரனார் அவர்கள் இன்னோர் இடத்தி ‘இந்தியாவின் அரசியல் அமைப்பே மாற்றப்பட வேண்டிய காலம் வந்து விட்டது. எனவே தமிழக அரசியலை வலுப்படுத்தவும், அதில் உங்களை நிலைப்படுத்திக் கொள்ளவும் தமிழகத் தலைவர்களுடன் சேர்ந்து உழையுங்கள். உங்கள் ஆற்றலும் வினையாண்மையும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அரசியலடிப்படையிலும், பொருளியல் அடிப்படையிலும், குமுகாய அடிப்படையிலும் அடிமையுற்றுக் கிடக்கும் தமிழினத்தைத் தூக்கி நிறுத்தப் பயன்படட்டும். ‘பச்சைத் தமிழர்’ என்று பெரியார் கொடுத்த பெயரை நிலைநாட்டிக்கொள்ளுங்கள். தி.மு.க.வில் இணைந்து விடுங்கள்; அல்லது இணைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தொடங்கியுள்ள தன்னாட்சிப் போராட்டத்திற்குத் துணை நில்லுங்கள்.’ ………….. மூவாயிர மாண்டுகளாக மதத்தாலும் குலத்தாலும் இழிவுபடுத்தப்பட்டு தாழ்ந்து கிடக்கும் உயர்வு சான்ற ஓர் இனத்தின் அடிமை வரலாறு இப்படித்தான் முற்றுப்பெற வேண்டும்; இதைவிட வேறு வழியில்லை! பெரியாரும், நீங்களும், கலைஞர் கருணாநிதியும் சேர்ந்து விட்டால் தமிழினத்தை அசைப்பதற்கு எத்தனைப் பட்டாளம் வந்தாலும் இயலாது. பார்ப்பனரை அழிக்க வேண்டுவதில்லை; ஆனால் பார்ப்பனியத்தை நாம் அழித்தேயாகல் வேண்டும்.” (தென்மொழி. சுவடி : 8, ஓலை : 4, சூன் 1970)
தந்தை பெரியாரும், கருமவீரர் காமராசரும், முத்தமிழறிஞர் கலைஞரும் வேறு வேறு அமைப்புகளில் இருந்தலும் எப்படி ஒன்று பட்டு நொந்துக் கிடந்த தமிழினத்திற்கு பண்டுவம் பார்த்திருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கும் ஒரு சான்றாவணப் பதிவு இது.
காமராசர் மேல் பற்றுக் கொண்டதாக நடிக்கும் பி.ஜே.பி.யினர் என்றாவது காமராசருக்கு விழா எடுத்ததுண்டா? அவர் செய்த தொண்டை பாராட்டி ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. நடத்தும் நாளிதழ்களோ, தொலைக்காட்சிகளிலோ, மேடைகளிலோ புகழ்ந்து பாராட்டிப் பேசியதுண்டா? வடநாட்டில் காமராசருக்கு பெருமை சேர்க்க எந்த சாலைக்காவது, எந்தக் கல்லூரிக்காவது, குறைந்த அளவு பள்ளிப் பாடப் புத்தகங்களிலாவது அவர் பெயரைக் கொண்டு சென்றார்களா என்றால் இல்லை என்பதுதான் விடையாக இருக்கும். விடுதலைக்குப் பாடுபட்ட தேசியத் தலைவர்கள் வரிசையில் வடநாட்டு பாட நூல்களில் அவர் இல்லவே இல்லை. திருவள்ளுவரையே ஏற்காதவர்கள் காமராசரை ஏற்பார்களா என்ன? வயிற்றை மட்டுமே வாழ்விடமாகக் கொண்ட தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
காமராசரின் தொண்டர்கள் கவனம் திராவிட கொள்கைப்பக்கம் திரும்பாமல் தடுக்கவே காமராசரை தி.மு.க. தோற்கடித்து விட்டது, அவர் உருவத்தை எள்ளி நகையாடியது என்றெல்லாம் பார்ப்பனிய நாளிதழ்களும் கிழமையிதழ்களும் பொய்யைப் பரப்பி காமராசருக்கும் திராவிட கொள்கைக்கும் (ஆழ்ந்து பார்த்தால் அவர் திராவிடர் கொள்கையாளரே) இடைவெளியை அதிகப்படுத்தியது போல இன்றுள்ள பார்ப்பன ஊடகங்களும் அவர்களின் அடிமைகளும் இன்று காமராசரின் பற்றாளர்களும் போலித் தழ்தேசிய வாதிகளும் காமராசர் சார்ந்த சமுகத்தினரும் திராவிட கொள்கை பக்கம் திரும்ப விடாமல் தடுப்பதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள். இதை உண்மைத் தமிழுணர்வாளர்களும் காமராசர் பற்றாளர்களும் உணர வேண்டும்.
எனவே தமிழர்களே நாம் ஒன்றிணைந்து ஆரிய கொள்கை யாளர்களை எதிர்த்துக் களமாடினால்தான் தமிழும் தமிழரும் தமிழ்நாடும் தலை தப்பும். இல்லை என்றால் வரலாற்றில் தமிழர்கள் இருந்தாலும் தமிழ்நாடு இருக்காது. தமிழ்நாடு இருந்தாலும் அது தமிழ்நாடாக இருக்காது. நாம் திராவிடக் கொள்கையை கைவிடுவதென்பது நுனிக்கிளையில் இருந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுவதற்கு ஒப்பானது. அந்தத் தவறைச் செய்யாதிர்கள் தமிழர்களே.
- இறை.ச.இராசேந்திரன், மும்பை