மனித கழிவை மனிதரே அகற்றும் கொடுமையை எவராலும் நியாயப்படுத்தவே முடியாது. தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடையிலும், செப்டிக் டேங்குகளிலும் இறங்கி வேலை செய்யும்போது விஷ வாயு தாக்கி கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இவை தடுக்கப்படவேண்டும். ஒரு குறிப்பிட்ட சாதியினரே தூய்மைபணியில் ஈடுபடுத்தப்படும் குலத்தொழில் முறை ஒழிக்கப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பங்களும், இயந்திரங்களும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் இது குறித்த விவாதங்களை நாம் ஆங்காங்கே பார்க்கமுடிகிறது. இது நமக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதேசமயம், இதுகுறித்த விவாதங்களை நடத்துபவர்கள் குறிப்பிட மறுக்கும் சில முக்கியமான செய்திகளை நாம் பேசியாக வேண்டும்.
மனித கழிவை மனிதரே கையால் அகற்றும் (Manual Scavenging) கொடுமை நீடித்திருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று எடுப்பு கக்கூஸ் என்று சொல்லப்படுகிற உலர் கழிப்பிடங்கள் (Dry Latrine). 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிகமான உலர் கழிப்பிடங்கள் இருக்கும் முதல் மூன்று மாநிலங்களாக உத்தர் பிரதேசம், ஜம்மூ காஷ்மீர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதாவது, 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்ற மேற்கு வங்காளமும், 9 ஆண்டுகளுக்கும் மேலாக தலித் சமூகத்தை சேர்ந்த முதல்வரால் ஆட்சி செய்யப்பட்ட உத்தர பிரதேசமும் முதல் மூன்று இடங்களில் இருப்பது மிகவும் வேதனைப்படத்தக்க உண்மை.
தமிழகத்தில் எடுப்பு கக்கூஸ் முறையை ஒழிப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு 20 வருடங்களுக்கு முன்பே எடுத்து கணிசமான அளவிற்கு அந்த முறையை ஒழித்திருக்கிறது.
2006 - 11 திமுக ஆட்சிக் காலத்தில், தூய்மை பணியாளர் நலனுக்கான பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது தமிழக அரசு. மிக முக்கியமாக, அருந்ததியர் உள் இடஒதுக்கீடு. அதன் மூலம், இன்று ஆண்டுக்கு குறைந்த 120 மருத்துவர்கள் அருந்ததியர் சமூகத்தில் இருந்து உருவாகிறார்கள். மருத்துவர்கள் தவிர, மாவட்ட நீதிபதிகள், சப்-கலெக்டர், டி.எஸ்.பி உள்ளிட்ட முக்கிய பதவிகளில் அருந்ததிய சமூகத்தினர் இடம்பிடிக்கின்றனர். பலநூறு பொறியாளர்கள் உருவாகிறார்கள்.
அந்த ஆட்சிக்காலத்தில்தான் தூய்மை பணியாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு, மாற்று தொழிலில் ஈடுபடுத்துவதற்கு வேண்டிய பயிற்சியும் நிதியுதவியும் அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுப்பதற்காக நவீன இயந்திரங்களை பயன்படுத்த முனைவோம் என்று உறுதியளித்திருந்தது திமுக. கெட்ட வாய்ப்பாக 2011 தேர்தலில் திமுக ஆட்சி அமையவில்லை.
2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், தூய்மை பணியாளர் நலன் என்று தனித்தலைப்பிட்டு முக்கியமான வாக்குறுதிகளை கொடுத்திருந்தது திமுக. ஆனால் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை இழந்தது.
இப்போது சில கம்யூனிச அமைப்புகள் தூய்மை பணியாளர் நலன்குறித்து பிரச்சாரம் செய்கிறார்கள். அதை நாம் வரவேற்கிறோம். ஆனால், தூய்மை பணியாளர் நலனிலும் மறுவாழ்விலும் அக்கறையுடன் செயல்பட்ட இனியும் செயல்படுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுகவினை தோற்கடிப்பதிலும் இதே கம்யூனிச இயக்கங்கள் தீவிரம் காட்டின என்பதையும் நாம் இங்கு நினைத்துப்பார்க்க வேண்டும்.
- பிரபாகரன் அழகர்சாமி