வெள்ளை நிற வெறியின் காரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், வெள்ளையர்கள் அல்லாத பிற மக்கள் தாக்கப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நிற வெறிக்கு முன்னோடியே நமது இந்தியாதான் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? அதுதான் உண்மை.
நாம் இன்று சமூகத்தில் காண்கிற சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு அடித்தளமாக இருப்பது வருணாசிரமக் கொள்கை. வருணாசிரமத்தை வருணம் + ஆசிரமம் என்று பிரிக்கலாம். வருணம் அதாவது நிறத்தைக் கொண்டு மக்களை பிரித்து அதன்படி அவர்களுக்கு வெவ்வேறான சமூக மதிப்பீடுகளை வழங்குவதே இதன் அடிப்படை.
அதன் படி வெண்மை நிற தோலும் செம்பட்டை நிற முடியும் கொண்ட ஆரியக் கூட்டம் இந்திய நிலப்பரப்பிற்குள் நுழைந்த போது இங்குள்ள பூர்வகுடி மக்களான கரிய நிற திராவிடர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டனர். ஆரியர், அனாரியர் என்கிற இரு பிரிவுகள் அப்போது உருவாகியது. இது அடிப்படையில் மக்களின் நிற வேறுபாடுகளை மையமாகக் கொண்டு தோன்றிய இருவர்ணப் பிரிவுகள்.
கிமு 1000ல் இருந்து கிமு. 600 வரையிலான பின் வேத காலத்தில் தங்களுக்குள்ளாகவே, புரோகிதம் செய்வதற்கான பார்ப்பனர்கள், போர்த்தொழில் புரிகிற சத்திரியர்கள், வேளாண்மை மற்றும் கால்நடை வளர்க்கும் வைசியர்கள் என்று பிரித்துக் கொண்டனர். இதனை மூவர்ணங்களாக வகுத்தனர். கருப்பு நிற பூர்வகுடி மக்களோடு கலந்து விடக்கூடாது, அது இழிவானது என்று கருதினர். ஆனால் ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு மத்திய ஆசியாவிலிருந்து நெடுந்தூரம் பயணித்து வந்த ஆரியக் கூட்டம், தங்களுடன் பெண்களை அதிகம் அழைத்து வரவில்லை. கடுமையான சீதோஷண நிலையும், பெரும் சவாலான மலைப் பகுதிகளும் பெண்களை வரவிடாமல் தடுத்துவிட்டன.
இதைக் குறித்து இந்து மதம் எங்கே போகிறது பாகம் ஒன்றில் அக்னிகோத்திரம் தாத்தாச்சாரியார் எடுத்துக் காட்டுகளோடு விளக்கி இருக்கிறார். தற்காலத்தின் முன்னேறியிருக்கும் மரபணு ஆய்வு முடிவுகளும் அதையே சொல்கின்றன. எனவே இங்குள்ள பெண்களோடு கலக்க வேண்டிய தேவை அவர்களுக்கு அடிப்படையிலேயே இருந்திருக்கின்றது. அதிலும் வேளாண்மை சார்ந்த தொழில்களைசெய்த வைசிய வர்ணத்தார் அதிகம் இங்குள்ள பூர்வகுடி மக்களோடு கலந்து பழக வேண்டிய இருக்கிறது. உண்மையைச் சொல்வதானால் ஆரியர்கள் வேளாண்மையையே திராவிடர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டனர். எனவே கலப்புகள் அதிகம் நேர வாய்ப்புள்ள வைசியர்கள் மூன்றாம் வர்ணத்தவராகவும், அதை அடுத்து உள்ளூர் பெண்களோடும், ஆரியரல்லாத பிற குழுக்களோடும் கலக்க வாய்ப்புகள் அதிகமுள்ள போர் வீரர்கள் அதாவது சத்திரியர்கள் இரண்டாம் வர்ணமாகவும், கலப்புகள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ள புரோகித கூட்டமான பார்ப்பனர்கள் முதல் வருணமாகவும் வகுத்துக் கொள்ளப்பட்டது. அதாவது கருப்பான ஆரியரல்லாத மக்கள், அதற்கடுத்து கலபுகளுக்கு உள்ளான மாநிற வைசியர்கள், பின் வெளிர் மாநிற சத்திரியர்கள், பளீர் வெண்மையான பார்ப்பனர்கள் என்று நிற அடிப்படையிலேயே சமூகம் பிரிக்கப்ப்பட்டது.
பின் வேதகாலத்தின் இறுதிக் கட்டத்தில் உடல் உழைப்பு தேவைப்படுவதால், ஆரியரல்லாத அதாவது அனாரியர்களை சூத்திரர்கள், நான்காம் வருணத்தவர் என்று பிரித்துக் கொண்டனர்.
வேளாண்மையில் அடுத்தகட்ட வளர்ச்சியான வியாபாரம், அதாவது பண்டமாற்று தோன்றுகிறது. வைசியர்களில் பெரும்பாலோர் அத் தொழிலுக்கு மாறுகின்றனர். பண்டமாற்றுக்கு அடிப்படையானது இடம்பெயர்வு. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு, தாங்கள் அறியாத புதிய நிலப்பரப்பு, மற்றும் மக்கள் குழுவோடு பழக வேண்டிய வாய்ப்பு ஏற்படுகிறது. அதில் கலப்புகள் அதிகமாகின்றன. சத்திரியர்கள் பிற பகுதிகளை கைப்பற்றி மகாஜன பதங்களாக மாறுகின்றனர். தங்கள் பகுதிகளை விரிவு செய்து கொள்ளும் போது சத்திரியர்களுக்குள்ளும் அதிக கலப்புகள் ஏற்படுகின்றன.
இதை டிக்காஷனோடு சிறிது சிறிதாக பால் கலப்பது போன்று கற்பனை செய்துகொள்ளலாம். ஏற்கனவே இந்திய நிலப்பரப்பெங்கும் பரவி வாழ்ந்திருந்த திராவிட மக்களை டிக்காஷனோடு ஒப்பிட்டால் வெண்மை நிறமான ஆரியர்களின் கலப்பு இந்திய வரைபடத்தில் மேலிருந்து கீழாக, அதாவது வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி நடந்திருக்கிறது. அதனால்தான் இன்றும் வட இந்தியர்கள் பெரும்பாலும் வெண்மை நிறமாக இருக்கின்றனர். தெற்கே வர வர மக்கள் பெரும்பாலும் கரிய நிறத்தில் இருக்கின்றனர்.
தாங்கள் விரும்பாத இந்த நிறக் கலப்பினை ஆரிய புரோகித கூட்டத்தால் தடுக்க முடியவில்லை. எனவே கலப்புக்கான விதிகளை வகுக்கின்றனர். மேல் வருணத்து ஆண் கீழ் வருணத்து பெண்ணை கலந்தால் அது அனுலோம சங்கரம் என்றும், கீழ் வருணத்து ஆண் தனக்கு மேலுள்ள வருண பெண்களை கலந்தால் பிரதிலோம சங்கரம் என்றும் வகுத்துக் கொண்டனர்.
வர்ண கலப்பு ஆரிய சாஸ்திரங்களால் கடுமையாக நிந்திக்கப் படுகிறது. அதையும் மீறி கலந்து பிறக்கும் பிள்ளைகள் வர்ணத்தில் கீழானவர்களாக கருதப்பட்டனர். நான்காம் வருணமான சூத்திர வர்ணத்து ஆண், முதல் வர்ணமான பார்ப்பன வர்ணப் பெண்ணோடு கலந்து பிறக்கும் பிள்ளையை சண்டாளன் என்று இழிவு செய்கிறது மனு சாஸ்திரம்.
வர்ணங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து வெவ்வேறு சாதிகளாக உறுமாறுகின்றன. இன்று ஆயிரக்கணக்கான சாதிகள் இந்தியாவில் உள்ளன. இவற்றுக்கு இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், தொழில், உடைமைகள், சமூக அந்தஸ்து என அனைத்துமே ஆரியக்கூட்டம் வகுத்த நால்வருணக் கோட்பாட்டின் படியே இயங்குகிறது.
இன்றும் கூட மேல் சாதி என கருதப்படும் கூட்டத்தைச் சேர்ந்த ஆண் தனக்குக் கீழான சாதியாக கருதப்படும் பெண்ணோடு கலப்பதற்கு சமூகத்தில் பெரிதாக எதிர்வினைகள் நிகழ்வதில்லை. ஆனால் கீழ் சாதி என கருதப்படும் பிரிவைச் சேர்ந்த ஆண் மேல்சாதி என கருதப்படும் பெண்ணை மணப்பாரானால் கடுமையான எதிர்வினைகள் ஆற்றப்படுகின்றன. பெரும்பாலான ஆணவக் கொலைகள் இவ்வாறே நிகழ்கின்றன. இது வருணக் கோட்பாட்டில் சொல்லப்பட்ட பிரதி லோம சங்கரம் என்ற வகை, ஆதலால் இந்த கலப்பு கடுமையாக தடுக்கப்படுகிறது.
இங்கு நிலவும் சாதியை ஏற்றுத்தாழ்வுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் மூல காரணமாக இருப்பது நிற வேற்றுமையே. வெள்ளையர்கள் கூட நிற வெறியை நேரடியாக வெளிப்படுத்துகின்றனர். பிறரை தாக்குகின்றனர்; கொல்கின்றனர். ஆனால் 3500 ஆண்டுகளுக்கு முன் இந்திய நிலப்பரப்புக்குள் ஊடுருவிய ஆரிய கூட்டம் தங்களது நிற வெறியை சாதிய படிநிலையாக உருவாக்கி நம்மை சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் பிரித்து அடக்கி ஆளுகின்றனர். இந்த ஆரிய கூட்டத்தால்தான் நிறவெறிக்கெல்லாம் மூதாதையாக இந்தியா திகழ்கிறது; அதைவிட மோசமான சாதி வெறி இங்கே தலை விரித்து ஆடுகிறது.
இன்று யார் எந்த வருணத்தவர்கள் என்று நிறத்தை வைத்தோ, அல்லது மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தியோ கண்டுபிடிக்க முடியாத படி எல்லா சாதிக்குள்ளும் வர்ணக் கலப்பு நேர்ந்துவிட்டது. ஆனாலும் கூட நாம் சாதியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறோம் என்றால், அது சமூகத்துக்கு விரோதமானது மட்டுமல்ல; அறிவியலுக்கே விரோதமானது.
- சுமன் கவி