தமிழ்நாட்டில் பொய்களையும் அவதூறுகளையும் மட்டுமே பேசி அரசியல் செய்யும் கட்சி என்றால், அதில் பிஜேபிக்கு எந்த வகையிலும் சளைத்தது அல்ல நாம் தமிழர் கட்சி.
நம்மோடு சில மனிதர்கள் இருக்கின்றார்கள், நீங்கள் எவ்வளவுதான் அவர்களை காறித் துப்பி, கழுவி ஊற்றினாலும் அடுத்த நாள் மீண்டும் அதே வேலையை எந்த கூச்சமும் இன்றி செய்வார்கள். அதில் முதன்மையானவர் ஆளுநர் ரவி. அடுத்து அண்ணன் சீமான்.
தான் போகுமிடத்தில் எல்லாம் உலுத்துப்போன சனாதன தர்மத்தையும், சமஸ்கிருத மேலாண்மையையும், பார்ப்பனியத்தையும் உயர்த்திப் பேசவில்லை என்றால் ரவிக்கு மண்டையே வெடித்துவிடும். அதே போல சீமான் தான் போகுமிடமெல்லாம் பெரியாரை இழிவுபடுத்துவது, திராவிடம் என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டு மொழிவழி சிறுபான்மையின மக்களைக் கொச்சைப்படுத்துவது போன்றவற்றைச் செய்யவில்லை என்றால் அண்ணனுக்கு அன்று தூக்கமே வராது.
அக்டோபர் 18 அன்று சென்னையில் பிரசார் பாரதி அலுவலகத்தில் இந்தி மாத விழாவின் நிறைவு நாள் அன்று, அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அதன்பின்னர் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரியைத் தவிர்த்து விட்டுப் பாடினர்.
இதற்கு தமிழகம் முழுக்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே ரவி ஒரு பார்ப்பன அடிமை என்பதும், தமிழின விரோதி என்பதும் ஊரறிந்த உண்மை என்பதால் நிச்சயம் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் நோக்கில் திட்டமிட்டே இது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அனைவரும் உறுதியாக நம்பினார்கள்.
ஏற்கெனவே 23.01.2018 அன்று நடந்த நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட பொறுக்கி சங்கராச்சாரி விஜேந்திரன் எழுந்து நிற்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தினான். அப்போது தமிழகம் முழுக்க எதிர்ப்பு ஏற்பட்டவுடன் அவன் தியானத்தில் இருந்ததால்தான் எழுந்திருக்கவில்லை என்ற சங்கர மடம் விளக்கம் கொடுத்தது.
இத்தனைக்கும் அந்த மேடையில் சாலமன் பாப்பையா போன்ற பட்டிமன்றப் பெருச்சாளிகளும் இருந்தார்கள். ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எந்த இந்து அமைப்போ பிஜேபியைச் சேர்ந்தவர்களோ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததோடு பார்ப்பான் விஜயேந்திரனை ஆதரித்தே பேசினார்கள்.
இப்போதும் ரவியின் தூண்டுதலின் பேரில் குறிப்பிட்ட அந்த வார்த்தையை நீக்கிவிட்டுப் பாடியதற்கு சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த டிடி தமிழ் நிர்வாகம், “அவர்கள் பாடும்போது மேடையின் பின்பக்கம் ஏதோ இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் இந்த வார்த்தை தவிர்க்கப்பட்டு விட்டது" என்று பதில் அளித்துள்ளது. அத்தோடு பிஜேபி அடிமைகளும் ஆளுநருக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதுதான் பார்ப்பன அடிமைகளின் இழிபுத்தி. நந்தனையும், வள்ளலாரையும் இவர்கள் எப்படி இறைவனோடு ஜோதியில் ஏற்றினார்கள் என்று நமக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால் இவர்கள் விடும் புளுகு கதைகளை யாரும் நம்புவதற்கு இங்கு தயாராக இல்லை.
இப்படி ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆளுநருக்கு எதிராகவும் தமிழை இழிவுபடுத்தும் பார்ப்பனிய சக்திகளுக்கு எதிராவும் களமாடிக் கொண்டு இருக்கும் போது, தமிழ்நாட்டையும் தமிழையும் காப்பாற்ற அவதாரம் எடுத்ததாய் சொல்லும் சீமான் மட்டும் “ரெண்டு வரியை நீக்குனதுக்கே இப்படி கொந்தளிக்கிறீங்களே, நான் ஆட்சிக்கு வரும் போது இந்தப் பாட்டையே தூக்கி விடுவேன், அப்போது என்ன செய்வீர்கள்” என ஒரே போடாகப் போட்டு ரவியையே மிரண்டு போகச் செய்திருக்கின்றார்.
அத்தோடு விடவில்லை அண்ணன்... “தமிழன் என்று சொன்னால் பிராமணனும் உள்ளே வந்து விடுவான் என ஐயா வீரமணி சொல்கிறார். 3% பிராமணப் பூச்சாண்டி காட்டி 30% திராவிடர் வந்துட்டீங்க. எங்களுக்கு என்ன இருக்கு. கீழடியில் உள்ள நாகரிகம் எப்படி திராவிட நாகரீகம்? அது தமிழர் நாகரிகம். இந்தியா என்ற நாடே அப்போது கிடையாது" என்றும்
“நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தூக்கிவிட்டு திறமையான பாவலர்களை வைத்து நல்ல பாடல்களை எழுதுவேன்" என்றும் சூளுரைத்து இருக்கின்றார்.
ஒரு பக்கம் தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்கி விடுவேன் என்கின்றார். காரணம் அதில் வரும் திராவிடம் என்ற வார்த்தை. அடுத்து திராவிடர்கள் என்றால் தெலுங்கர்கள் அவர்களால்தான் சுத்தமான தமிழர்களுக்கு ஆளும் அதிகாரம் கிடைக்காமல் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டார்கள் என்கின்றார்.
மொழிவழிச் சிறுபான்மையின மக்கள் மீது இன வெறுப்பையும் அவர்களுக்கு எதிராக வன்முறையையும் தூண்டிவிடும் வகையில் பேசியிருக்கின்றார். தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் 5.87 சதவீதம்தான் இருக்கின்றார்கள் என்று தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகின்றது. தவிர கன்னடம் பேசுவர்கள் 1.78, உருது பேசுபவர்கள் 1.75, மலையாளம் பேசுபவர்கள் 1 சதவீதத்தினரும் உள்ளனர்.
நிலைமை இப்படி இருக்கும் போது 30 சதவீதத்தை எப்படி அவர்களால் கைப்பற்ற முடியும்? அதற்கு எதாவது ஆதாரத்தை சீமான் இதுவரை வெளியிட்டு இருக்கின்றாரா?. உண்மையைப் பேசுபவனுக்குத்தானே ஆதாரம் தேவை. பொய்யை மட்டுமே பேசி அரசியல் செய்யும் சீமானுக்கு எதற்கு ஆதாரம்?.
3% பிராமண பூச்சாண்டி என்கின்றார். ஆனால் அது உண்மையா?
இந்திய மக்கள் தொகையில் வெறும் 3 சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பனக் கும்பல், அரசுப் பணிகளில் 70 சதவீதத்தைக் கைப்பற்றி வைத்திருக்கின்றது. குடியியல் பணிகள், மாநில முதன்மைச் செயலாளர்கள், ஆளுநர்கள், துணை ஆளுநர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என எங்கு பார்த்தாலும் உச்சிக் குடுமிகளாக காட்சி அளிக்கின்றார்கள். இந்திய நிர்வாகப் பணி அதிகாரிகள் 3300 பேரில் 2376 பேர் பார்ப்பனர்கள்.
இன்னும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்களே. இது எல்லாம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைப்படி அமைந்தது அல்ல. தனது பிறப்புரிமையின் அடிப்படையில் அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்ட பதவிகள். இந்தியாவில் இருக்கும் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் போன்றவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, இது எப்படி சாத்தியமானது என்பதை தெரிந்து கொண்டால்தான் பார்ப்பன சூழ்ச்சியை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இது எல்லாம் ஏதோ சுதந்திரத்திற்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கீடுகள் கிடையாது; அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கீடுகள்.
ஆனால் சீமானோ கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் 3% பிராமணப் பூச்சாண்டி என்கின்றார். 3 சதவீத பார்ப்பான் நல்லவன், அவன் தமிழன்; 30 சதவீத ( சீமான் எடுத்த மக்கள் தொகை கணக்குப்படி) திராவிடர்கள்தான் மோசக்காரர்கள், அவர்கள் வந்தேறிகள். இப்படி ஒரு மானங்கெட்ட அரசியலை சீமானால் மட்டுமே செய்ய முடியும்.
‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று பெயர் வைத்த அதே அண்ணாதான் தமிழ்நாடு என்றும் பெயர் வைத்தார். திராவிடம் பேசிய பெரியார் அதை எப்போதாவது எதிர்த்தாரா? சாகும் வரை தனித்தமிழ்நாடு வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றவர்தானே பெரியார்.
இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்கி அதை ஊர் ஊராய்ப் போய் வாய்கிழியப் பேசி தன்னை சுற்றி ஒரு அடிமைக் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார். அந்த அடிமைகளோ உண்மை எது, பொய் எது என்று எதைப் பற்றியும் கவலைப் படாமல் சீமான் பேசுவதையும் வாட்ஸாப்பில் வருவதையும் அப்படியே நம்பிக்கொண்டு வஞ்சத்தோடு ஒரு இன அழிப்பிற்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆர்.எஸ்.எஸ் பிஜேபி எப்படி முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைக்கின்றதோ அதே போல சீமான் தமிழ்நாட்டில் மொழிவழி சிறுபான்மையினர் இல்லாத நிலையை ஏற்படுத்த விரும்புகின்றார்.
ஒரு கடைந்தெடுத்த பார்ப்பன அடிவருடி அரசியலை முன்னெடுத்துக் கொண்டு இருக்கும் சீமானால் ஒரு போதும் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுக்க முடியாது. சீமானுக்கும் அது நோக்கமல்ல!.
- செ.கார்கி