2024 ஜூன் 30 அன்று, நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிவந்த பிரிட்டிஷ் கால குற்றவியல் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. 163 ஆண்டுகால இந்தியத் தண்டனைச் சட்டத்திற்குப் (IPC) பதிலாக பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதாவும் 126 ஆண்டுகால குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் (CRPC) பதிலாக பாரதிய நியாய சன்ஹிதாவும், இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் (IEA) பதிலாக பாரதிய சாக்ஷிய அதிநியமும் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இந்திய குற்றவியல் நீதி வழங்கல் முறைக்கு அடிப்படையாக அமைந்துள்ளன என்று கூறப்படுகிறது.
புதிய சட்டங்கள் இன்னும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருந்தாலும், இந்தி ஆதரவாளர்கள் இந்தி பேசாத தென்னிந்தியாவுக்கு அவர்களுடைய அண்மைய முன்னெடுப்புக்களுடன் ஒரு செய்தியை அனுப்புவதற்கான ஒரு வாய்ப்பைத் தவறவிட மாட்டார்கள். அண்மையில், கேரளாவில் தேசிய மக்கள் நலத் திட்டத்திற்கு (National Health Mission) ‘ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்’ என்று பெயர் மாற்றம் செய்யுமாறு மத்திய அரசு கோரியதற்கு, அது கேரளாவின் கிராமப்புற மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்திற்குப் பொருந்தாது என்று கேரளா அரசு மறுத்து விட்டது. அதனால் மத்திய அரசு அத்திட்டத்திற்கு நிதியளிக்க மறுத்து விட்டது. இறுதியில் கேரள அரசு நிதிப் பற்றாக்குறை காரணமாக வேறுவழியின்றி, இந்திய மேட்டிமையின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து போனது. தமிழ்நாட்டின் துணிவு இல்லாமல் போயிருந்தால் இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான கருத்தாக்கமான கூட்டாட்சி முறை நசுக்கப்படுவதில் முடிந்திருக்கும்.இந்தியாவில் நீதிமன்ற அமைப்பு எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய நெருக்கடியை இந்தக் காலனிய கால சட்டங்களின் மறு உருவாக்கத்தால் தீர்க்க முடியாது. இன்று, 3 கோடியே 40 இலட்சம் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன, கண்ணுக்கெட்டிய தூரத்தில் இதற்குத் தீர்வு தென்படவில்லை. உயர்நீதி மன்றங்களில் 17 இலட்சம் வழக்குகளும், 18122 வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. நடைமுறைத் தாமதங்கள், அடிக்கடி ஒத்தி வைக்கப்படுதல், எளிதில் கையாள இயலாத சட்ட நடைமுறைகள் மற்றும் சாட்சியங்களை அழைத்து வருதல், சான்றுகளைச் சமர்ப்பித்தல் ஆகியவை குவிந்தும் கொண்டிருக்கும் நெருக்கடிக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்திய நீதிமன்றங்கள் அமைப்பில் தேங்கியிருக்கும் மிகவும் பழைய வழக்குகள் 38 ஆண்டுகளுக்கு முந்தியவையாகும். “தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி” என்ற கூற்று இந்திய சமுதாயத்தின் நீதி அமைப்பிற்குப் பொருந்தாத ஒன்றாகத் தெரிகிறது.
நிலுவையிலிருக்கும் பெரும்பாலான வழக்குகள் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், இந்த வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும் அதனால் பாதிக்கப்படும் உயிர்களுக்கும் உதவுவதற்கும் பதிலாக முறையான விவாதங்கள் இல்லாமல், தேவையான விசாரணையின்றி அந்தச் சட்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியமைப்பது தேவையற்றதாகும். அது மேலும் குழப்பத்துக்கும் தாமதங்களுக்கும் இட்டுச் செல்லும். இந்த அமைப்பு முறைக்கு மிகப்பெரிய சவால் இரண்டு இணையான சட்ட முறைமைகளுக்குள் இயங்குவதாகும். 2024 ஜூன் 30 க்கும் முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பழைய சட்டத் தொகுப்புக்களுக்குள் விசாரணைக்கு வரும், அதேநேரத்தில் புதிய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டங்களின் விதிமுறைகளின் கீழ் விசாரணைக்கு வரும். இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் நீதிமன்ற அமைப்பின் மூலம் விளக்கமளிக்கப்பட வேண்டியிருக்கும். அதனால் இந்தச் செயல்முறை தாமதமாகும். இந்தச் சட்டங்கள் பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படவே இல்லை, மாறாக துணை நிகழ்ச்சிநிரல் இனமாக சமர்ப்பிக்கப்பட்டு, 146 உறுப்பினர்கள் அவைத்தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தைவிட்டு வெளியேற்றிய பிறகு நிறைவேற்றப்பட்டவையாகும். இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய மாநில அரசுகளுடனும் இந்தச் சட்டங்கள் குறித்து எந்த விவாதங்களும் நடத்தப்படவில்லை அல்லது நாட்டில் உள்ள முன்னணி அரசியல் சாசன நிபுணர்களுடனும் கலந்தாலோசிக்கப்படவில்லை. இது ஆளும் ஒன்றிய அரசு தேசத்தின் நிர்வாகத்தை நடத்துவதில் செருக்கையும் சர்வாதிகார முறையையும் பயன்படுத்துவதைக் காட்டுகிறது.
இந்தியாவெங்கும் உள்ள வழக்கறிஞர்களூம் நீதிமான்களும் இந்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை நினைத்து ஏன் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள்? புதிய சட்டங்களை புதிதாகக் கற்பதுடன், இரண்டு சட்டத் தொகுப்புக்களின் கீழ் தொழில்புரிய வேண்டியிருப்பதால் இது இந்தியக் குடிமக்களின் குடியுரிமைகள் மீது என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிய தீவிரமான கவலையும் ஏற்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவருமான மணிஷ் திவாரி இந்தியாவின் கடல்கடந்த காங்கிரசின் தலைவரான் சாம் பிட்ரோடாவுடன் நடத்திய உரையாடலில் அவருடைய கவலைகளைத் தொகுத்துக் கூறியுள்ளார்: “ஒரு குற்றவியல் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும்போது, முதல் தகவல் அறிக்கையில்தான் தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையீடும் முதல் தகவல் அறிகையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இந்திய உச்சநீதி மன்றம் லலிதகுமாரி வழக்கில் தெளிவாகக் கூறியுள்ளது. இந்தப் புதிய சட்டங்கள் இந்த நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக உள்ள 17000 காவல் நிலையங்களின் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு முறையீடும் முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால், குற்றவியல் சட்டத்தின் முதலாவது படிக்கட்டில் அடியெடுத்து வைப்பதற்கு குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் இந்தப் புதிய சட்டம் காவல்துறைக்கு விருப்ப உரிமையை அளிக்கிறது. மூன்றிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதா வேண்டாமா என்பதை காவல்துறையின் விருப்பத்துக்கு விட்டு விடுகிறது. அதனால் அதிகாரமற்றவர்கள், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், சமுதாயத்தின் பலவீனமான பிரிவுகளிலிருந்து வருவோர் அல்லது தகவல் தொடர்பு எட்டாத தொலைவில் உள்ள கிராமபுறங்களில் வாழ்வோருக்கு, பொறுப்பில் உள்ள காவல்நிலையங்களின் கருணையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும், அங்கு ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் தான் குற்றவியல் சட்ட இயந்திரத்தை இயக்கக் கூடியவராக இருப்பார்.”
புதிய சட்டத்தில் இன்னொரு பெரிய பிரச்சனை காவல்துறை பாதுகாப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை எவ்வளவு காலம் வைத்திருக்கலாம் என்பது பற்றியதாகும். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் புகழ்பெற்ற நீதிமானும் ஆகிய வி.ஆர்.கிருஷ்ணய்யர் அங்கு பிணை விடுவிப்பு இருக்கலாம், சிறை இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். இப்போதுள்ள சட்டப்படி, காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்தால், ஒரேகாலத்தில் அதிகபட்சக் காவல் 15 நாட்கள் இருக்கலாம், 15 நாட்கள் வரை தொடரலாம். அதன்பிறகு, அந்த நபர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுகிறார், 16 வது நாளே பிணை விடுவிப்புக் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகுதியாக இருக்கிறது. ஆனால் புதிய சட்டத்தின்படி, சிறு குற்றங்களுக்கு 60 நாட்களும் பெரிய குற்றங்களுக்கு 90 நாட்களும் காவலில் வைத்துக் கொள்ள வழி வகுக்கிறது. ஆகவே, 60 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குள் பிணை விடுவிப்பு மனு செய்யப்படுகிறபோது, காவல்துறை அந்த நபர் இன்னும் விசாரணைக்குத் தேவைப்படுகிறார் என்று கூறலாம். அதனால் புதிய சட்டத்தின்படி, 60 அல்லது 90 நட்களுக்குள் ஒருவருக்குப் பிணைவிடுவிப்புக் கிடைப்பதற்கான வாய்ப்பு அருகிப் போகலாம்.
கைவிலங்கிடுவது புதிய சட்டத்தின்படி காவல்துறையின் விருப்பத்திற்கு விடப்படுகிறது. கைவிலங்கிடுவது மனித கண்ணியத்தின் மீதான தாக்குதல் என்று உச்ச நீதிமன்றம் ஒருமுறை கூறியுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் விதிமுறை அரசியல் எதிராளிகளின் குடியுரிமைகளுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படலாம், அவர்களை அவமதிக்கவும் இழிவுபடுத்தவும் கூடப் பயன்படுத்தப்படலாம்.
காலனிய கால அரசெதிர்ப்புச் சட்டங்கள் மனித உரிமைப் போராளிகளுக்கு எப்போதுமே கவலையளிப்பவையாக இருந்து வந்துள்ளன. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் கூட அந்தக் கொடூரச் சட்டங்களின் விதிமுறைகளைத் தவறாகப் பயன்படுத்திச் சிறைப்படுத்தப்பட்டனர். புதிய சட்டங்கள் அரசெதிர்ப்புச் சட்டங்களை விலக்கிவிட்டு, நான்கு தனித்தனி நடவடிக்கைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: சீர்குலைவு நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள், இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகள், மற்றும் ஆயுதம் தாங்கிய கலகம். இந்தப் விதிமுறைகளில் உள்ள பெரிய பிரச்சனை சீர்குலைவு நடவடிக்கை தான். கடந்த காலத்தில், அரசியல் விமர்சனத்தை மௌனிக்கச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடையில் பேசும் பேச்சு, விவாத மன்றத்தில் பேசும் பேச்சு, அல்லது கவனக்குறைவாக பரப்பப்படும் ஒரு சமூக ஊடகப் பதிவு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அச்சுறுத்தி விடுமா? கூட்டாட்சியை ஆதரிக்கும் ஒரு நபர் குஜராத் மைய ஆட்சிக்கு எதிராகப் பேசுவது பிரிவினைவாதமாக கருதப்படுமா? இந்தப் பகுதிகள் நன்கு வரையறுக்கப்படவில்லை, இவை இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையான கருத்துரிமையைத் தடை செய்யலாம்.
மேலும் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கு ஏற்கெனவே கடுமையான சட்டங்கள் இருக்கிற போது, பயங்கரவாதம் குறித்த விதிமுறை ஏன் பொதுச் சட்டத்திற்குள் மதிப்பிடப்படுகிறது என்பது குறித்து பல வழக்கறிஞர்களுக்கு பல கேள்விகள் இருக்கின்றன. பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை விசாரிப்பதற்கு அரசாங்கத்தின் முன்கூட்டிய அனுமதி பெறப்படவேண்டும், சுதந்திரமான அதிகாரி அனைத்துச் சான்றுகளையும் பரிசீலனை செய்யவேண்டும் என்ற விதிமுறை இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் 1967 இல் இருக்கிறது. புதிய குற்றவியல் சட்டங்கள் அப்படிப்பட்ட பாதுகாப்பு எதையும் அளிக்கவில்லை. இந்தியாவிலோ, எந்த ஒரு அயல்நாட்டிலோ இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவாரானால் அவருடைய சொத்தினைக் கைப்பற்றும் விதிமுறையுடன் பயங்கரவாதி குறித்து வரையறுக்கிறது. பணத்தாள் (currency) கடத்தல் கூட பயங்கரவாதச் செயலாக கருதப்படும்.
திவாரி மேலும் கூறியுள்ளதாவது: “யாரோ ஒருவர் ஒன்றைப்பற்றி எள்ளலாகவோ நகைச்சுவையாகவோ ஏதோ ஒன்றைக் கூறுகிறார் என்றால், அது அவதூறாக கருதப்படும். கருத்துரிமை தூக்கி வீசியெறியப்பட்டிருக்கிறது. அனைத்துக் கட்சிகளிலிருந்தும் புகழ்பெற்ற சட்ட நிபுணர்களைக் கொண்ட பாராளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை அமைத்து இந்தச் சட்டங்கள் ஒவ்வொன்றின் விதிமுறைகளையும் ஒவ்வொன்றாக பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். இந்தச் சட்டங்கள் பெருங்கேடு பயக்கும் தன்மை கொண்டவை, அவற்றை நடைமுறைப்படுத்துவது கொடுங்கோன்மையைக் குறிப்பதாகும். அவை இந்த நாட்டில் காவல்துறையின் ஆட்சிக்கு அடித்தளத்தை நிறுவுவதாக இருக்கின்றன. அவை காவல்துறைக்கு விரிவான வாய்ப்பெல்லையை அளிக்கின்றன, ஏனென்றால் பிணை குறித்த சட்டங்கள் போன்றவை சில விதிமுறைகள் ஐயப்பாட்டுக்கு இடமளிக்கிற வகையில் இரட்டைத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.”
மரண தண்டனைக்கு கூடுதல் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன, இவை சீர்திருத்துவதை விடப் பழிவாங்குவதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் நீதிமுறைக்கு வித்திடப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகின்றன. அரசெதிர்ப்புச் சட்டங்களுக்குப் பதிலாகக் கொண்டு வரப்படும் சட்டங்கள் எப்போதையும் விட அடக்குமுறை கொண்டவையாகத் தெரிகின்றன. பா.ஜ.க. தனது இந்து தேசியவாதத் திட்டத்திற்குப் பொருந்தும் வகையில் கொடூரமான சட்டங்களை இயற்றுவதற்கு காலனிய சட்டத் தொகுப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இப்புதிய சட்டங்களை மறுபரிசீலனை செய்து, திருத்தம் செய்யாவிட்டால் அவை குடியுரிமைகளுக்கும் கருத்துரிமைக்கும் கடுமையான அச்சுறுத்தலாக அமைந்து விடலாம். அது இறுதியில் நாட்டின் ஜனநாயக மற்றும் மதச்சார்பின்மை விழுமியங்களைச் சீர்குலைத்துவிடக் கூடும்.
- ஜார்ஜ் ஆப்ரஹாம்
நன்றி: countercurrents.org
தமிழில்: நிழல்வண்ணன்