கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி அவர்கள் பற்றவைத்த நெருப்பு சனாதனிகளை சுட்டெரிக்கிறது. ஆளாளுக்கு ஒவ்வொரு விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

"சனாதனத்தில் மட்டும்தான் மனிதன் கடவுள் ஆக முடியும். சிறந்த உதாரணம் அய்யா வைகுண்டர் அவர்கள். அவர் மனிதனாக பிறந்தார். ஆனால் கடவுளாக வணங்குகின்றோம்" என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை. இந்தப் பேச்சு வழக்கம்போல அவரின் அரைவேக்காட்டுத்தனத்தைக் காட்டுகிறது.

அய்யா வைகுண்டரை கடவுளாக வணங்கும் மக்கள் தற்காலத்தில் பலர் உள்ளார்கள், குறிப்பாக தென் மாவட்டங்களில். அது தனிநபர் விருப்பம் என்பதால் அதை விமர்சிக்க முடியாது. ஆனால் அய்யா வைகுண்டர் ஒரு சனாதனி என சொல்லும் வரலாற்றுத் திரிபை அம்பலப்படுத்தி உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வது நம் கடமை.

akilathirattuஅய்யா வைகுண்டரின் சிந்தாந்தம் “நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றான்” என்பதுதான். அதனால்தான் உருவ வழிபாட்டை அய்யா வழி நிராகரிக்கிறது. அய்யா பதிகளில் (கோவில் அல்ல) உள்ளே ஒரு கண்ணாடி மட்டுமே இருக்கும். இது எப்படி சனாதனம் ஆகும்?

1800களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு மார்பு சேலை அணிதல், இடுப்பில் குடம் எடுத்தல், பொன்நகைகள் அணிதல் ஆகியன தடை செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் தலைப்பாகை கட்டுதல், மீசை வளர்த்தல், வளைந்த கைப்பிடி கொண்ட குடையை பயன்படுத்தல் தடை செய்யப்பட்டிருந்தது.

தங்கள் குழந்தைகளுக்கு இந்துக்கடவுளரின் பெயரை சூட்டுவது தடுக்கப்பட்டன. அய்யா வைகுண்டரின் பெற்றோர்கள் அவருக்கு தாங்கள் விரும்பிய 'முடிசூடும் பெருமாள்' என்ற பெயரை சூட்ட முடியாமல் 'முத்துக்குட்டி' என்ற பெயரையே தேர்ந்தெடுக்க நேர்ந்தது.

சாதிக் கொடுமைகளிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மீட்க 'அய்யா வழி' என்னும் தனி சமயத்தை தோற்றுவித்தார் அய்யா வைகுண்டர். அவர் சனாதனத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலோ, அல்லது சனாதனம் அவரை ஏற்றுக் கொண்டிருந்தாலோ ஏன் ஒரு தனி சமயத்தை தோற்றுவிக்கப் போகிறார்?.

இடுப்பில் கூட துண்டு அணிய முடியாத நிலை இருந்தது. அய்யாவழியில் துண்டை தலைப்பாகையாய் அணிய சொன்னார் அய்யா வைகுண்டர். இன்றும் அய்யா வழியில் தலைப்பாகை அணியும் வழக்கத்தின் பின்னணி இதுதான்.

அய்யாவழியில் அனைத்து மக்களும் பதியின் உள்ளே வரை செல்ல முடியும். சாதி வேறுபாடு, பாலியல் வேறுபாடு, பொருளாதார வேறுபாடு என எந்த வேறுபாட்டுக்கு அய்யா வழியில் இடமில்லை. அனைத்து மக்களும் சரிசமமாக அமர்ந்து அன்னம் உண்ணும் பழக்கம் இன்றும் அனைத்து அய்யா வழி பதிகளிலும் இருக்கிறது.

அய்யாவழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன. இதனை சனாதனம் ஏற்றுக் கொள்கிறதா?

அய்யாவழியின் வழிபாட்டு முறைகள் அனைத்தும் எளியத் தமிழில் இருக்கின்றன. சமஸ்கிருத மந்திரங்களுக்கு எந்த இடமுமில்லை. இதனை சனாதனம் ஏற்றுக் கொள்ளுமா?

‘தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்” என்றார் அய்யா வைகுண்டர் என்னும் போராளி.

‘காணிக்கையிடாதீங்கோ,
காவடிதூக்காதீங்கோ,
வீணுக்கு தேடுமுதல் விறுதாவில் போடாதீங்கோ‘ என்று அகிலத்திரட்டு நூலில் இருக்கிறது.

பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகிய மூடப் பழக்கங்களை கடுமையாகச் சாடினார் அய்யா வைகுண்டர்.

"பொய்யில்லை பிசாசுயில்லை
பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை
நொன்பலத் துன்பமுமில்லை" என்கிறார் அய்யா வைகுண்டர்.

சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாகச் சாடுகிறார் அய்யா.

“அறிந்து பலசாதி முதல் அன்பொன்றுக்குக் குள்ளானால்
பிரிந்து மிகவாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார்“

“தான மானங்களும் அதைப் பெற்றவர்க்குக்
கிட்டிக்கொள்ளும் பேதமில்லை மகனே“

(தான தர்மம் தவம் முதலானவற்றின் பலன்கள் அவற்றை மேற்கொண்டவர்களுக்குத் தவறாமல் கிடைக்கும். இதில் உயர்சாதி, தாழ்ந்தசாதி என்ற பேதங்களுக்கு இடமில்லை மகனே)

“அவனவன் தேடுமுதல் அவனவன் வைத்து ஆண்டிடுங்கோ,
எவனுக்கும் பதறி இனி மலைய வேண்டாம்“

ஒவ்வொருவரும் அவரவர் சம்பாதிக்கும் பொருளை அவரவரே தம் குடும்பத்தாருடன் அனுபவியுங்கள். எவனுக்கும் பதறி தேடிய பொருளை அவனிடம் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம்)

“ஏடுதந்தேன் உன்கையில் எழுத்தாணியும் கூடத் தந்தேன்
பட்டங்களும் பட்டயமும் தந்து பகை தீர்ந்தேன் என் மகனே“

(ஏழைச்சாதிகளுக்கு கல்வியும், ஞானநூல்களும் தேவையற்றவை என்று நீசர்கள் வகுத்த நெறியை மாற்றும் வகையில், நீயும் அறிவைப் பெறும் படியாக உன் கையிலும் ஏட்டையும் எழுத்தாணியும் தருவதோடு பலவிதப்பட்டங்களும் விருதுகளும் தந்து என் பலநாள் பகையைத் தீர்த்துக் கொள்வேன் மகனே)

இவ்வாறு அகிலத்திரட்டு முழுக்க ஆதிக்க எதிர்ப்பு ஓங்கி இருக்கிறது. சனாதனம் எந்த இடத்தில் இவ்வாறு கூறுகிறது? மக்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகையாகக் கூறுபோடும் வருணாசிரமக் கட்டமைப்பை அய்யா வழியோடு ஒப்பிடுவதே தவறு.

சனாதனத்திற்கு எதிராகக் கலகம் செய்த புத்தர், நாராயண குரு, வள்ளலார், அய்யா வைகுண்டர் என எல்லோருக்கும் காவிச்சாயம் கொடுக்கப் பார்க்கிறது பாஜக. உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கே மதச்சாயம் பூசும் கும்பல் ஆச்சே இது!

- குருநாதன் சிவராமன்