கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு மீண்டும் ஒரு பேரிழப்பு!

ilankumaranar”உண்ணச் சிறிது போதும்! உறங்கப் படுக்கை தேடேன்! எண்ணப் பொழுது வேண்டும்! எழுத உரிமை வேண்டும்!”

என்பதை நெறியாகக் கொண்டு வாழ்ந்த பேரறிவாளர், செந்தமிழ் அந்தணர்,புலவர்மணி இளங்குமரனார் சென்ற சூலை 25ஆம் நாள் ஆய்வுக்கு ஓய்வுதந்து நம்மைவிட்டுப் பிரிந்தார்! தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் அவரது இறுதி நிகழ்வில் தோழர் நா. கதிர்வேல் கலந்து கொண்டார்.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த கூடல் மாநகரில் ஆசிரியராகப் பணிசெய்து அறிவார்ந்த பல மாணாக்கர்களை ஆக்கித் தந்தவர். மாங்குடி மருதனார், ஔவையார் போன்ற சங்கப் புலவர்களின் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவர்! ஐந்நூறுக்கு மேற்பட்ட நூல்கள் படைத்தளித்தவர்! இசைக்குறள் பாடிப்பல நூறு நன்னிகழ்வுகள் நடத்தி வைத்தவர்! தமிழ்த் தொண்டினை வெறும் மொழிப் பணியாக மட்டும் சுருக்கிக் கொள்ளாமல் தமிழ்க் குமுகத்தைப் பிணித்த அடிமை விலங்கொடிக்கும் சிந்தையுடன் பாடாற்றியவர்! புகழ், பதவி, பெரும்பொருள் நாடாதாவர், பதவியில் இருக்கும் எவரையும் நத்தி நில்லாதவர்!

போராடும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் யாவற்றுக்கும் நல்லாசிரியராகத் திகழ்ந்தவர் இளங்குமரனார். திருச்சிராப்பள்ளி அருகே அவர் நிறுவிய திருவள்ளுவர் தவச்சாலையில் அவரைப்பார்த்து உரையாடிய பொழுதுகள் பயன்மிக்கவை.

இளங்குமரனார் எந்த அரசியல் கட்சியிலும் இடம்பெறாத போதும் தெள்ளத்தெளிவான அரசியல் நிலைப்பாடுகள் கொண்டிருந்தார். 2009 தமிழீழ இனவழிப்புக்குப் பின் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் அறச்சீற்றம் பொங்க ஆற்றிய உரையை என்னால் மறக்க இயலாது.என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் தந்தைக்குரிய வாஞ்சையுடன் பழகுவார். நூல்கள் பரிசளிப்பார். நலம் பேணுங்கள் என்று திரும்பத் திரும்ப அறிவுறுத்துவார்,

இளங்குமரனார் பணி தொடர உறுதியேற்போம்! அவருக்குப் புகழ்வணக்கம்!

பெகாசஸ்: விடையிறுக்கப்படாத வினாக்கள்

பெகாசஸ் என்பது கிரேக்கப் பழங்கதையில் வரும் பறக்கும் குதிரையின் பெயர். இப்போது இசுரேலில் என்.எஸ்.ஒ. என்ற நிறுவனம் ஆக்கித்தரும் ஒற்று மென்பொருளுக்கு (spyware) இந்த மாயக்குதிரையின் பெயர்தரப்பட்டுள்ளது. இந்த ஒற்று மென்பொருள் இந்தியாவிலும் உலகெங்கிலும் அரசியலர், அமைச்சர், அதிகாரியர், ஊடகர், நீதியர், தொழில்துறையினர் உள்ளிட்ட பல்லாயிரம் பேரை வேவு பார்க்கப் பயன்படுத்தப் பட்டிருப்பதாக இந்தியாவின் ’ஒயர்’ உள்ளிட்ட பெயர் பெற்ற பன்னாட்டு ஊடகங்கள் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளன. இது பற்றி எதிர்க்கட்சிகளும் மாந்தவுரிமைச் செயற்பாட்டாளர்களும் ஊடகங்களும் எழுப்பும் வினாக்களுக்கு இந்திய அரசு விடை சொல்ல மறுத்து மௌன அழிச்சாட்டியம் பிடித்து வருகிறது.

பெகாசஸ் குறித்து பல அரசுகள் புலனாய்வு செய்ய முற்பட்டுள்ளன. பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோன் தன் கைபேசியையே மாற்றி விட்டார். இசுரேல் அரசே ஐஎஸ்ஒ நிறுவனத்தைக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ளது. இது குறித்து எவ்வித எதிர்வினையும் ஆற்றாமலிருப்பது இந்திய அரசு மட்டும் தான். இப்போது வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. உச்சநீதிமன்றம் “இதற்கு ஊடகச் செய்தி தவிர என்ன சான்று?” என்று விண்ணப்பர்களிடமே கேட்கத் தொடங்கியுள்ளது. அது அரசிடம் கேட்டு விடைபெற வேண்டிய வினாக்கள் உள்ளன. அரசால் மட்டும் தான் இந்த வினாக்களுக்கு விடையிறுக்க முடியும்:

  • பெகாசஸ் தனியாருக்கு விற்கப்படாது, அரசுகளுக்கு மட்டுமே விற்கப்படும், அதுவும் பொறுக்கியெடுத்த அரசுகளுக்கு மட்டுமே விற்கப்படும் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இசுரேல் பொறுக்கியெடுத்த அரசுகளில் இந்தியாவும் ஒன்றா?
  • இந்திய அரசு அல்லது அரசு நிறுவனம் பெகாசஸ் வாங்கியதா?

என்ன விலை கொடுத்து வாங்கியது? அதற்கு எந்தக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டது?

  • ஒற்றாட அரசுக்கு அதிகாரம் தரும் சட்டங்களின் படி உரிய அதிகார அமைப்பின் அனுமதி பெறப்பட்டதா?
  • இனின்னாரை வேவு பார்ப்பது என்ற முடிவை எடுத்ததுயார்?
  • பாபர் மசூதித் தீர்ப்பிலும் பீமாகொரேகான் வழக்கிலும் பெகாசசுக்கு ஒருவகி பாகம் உண்டா? அது என்ன?

நாடாளுமன்றத்து முரட்டுப் பெரும்பான்மையைப் பயன்படுத்தியும், கொடுங்கோன்மைச் சட்டங்களைக் கொண்டும், நெளிந்து கொடுக்கும் நீதிமன்றங்களைக் கொண்டும் இந்த வினாக்களைப் புதைத்து விடலாம் என்று மோதி-அமித்சா கும்பல் மனப்பால் குடிக்க வேண்டாம். நிலத்தடி நெருப்பு போன்ற இந்த வினாக்கள் எரிமலை போல் வெடித்து மாயக்குதிரையை எரித்துச் சாம்பலாக்கும் நாள் வரும்.

- தியாகு