சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் புண்ணிய ஸ்தலங்களை இணைத்து பக்தர்களின் பயண நேரத்தை ஒரு மணிநேரம் குறைப்பதற்காக ‘சார்தம் பரிபோஜனா’ என்ற திட்டத்தை பாஜக ஆட்சி அமுல்படுத்த முன்வந்த போது, இது ஆபத்தானது என்று உள்ளூர் மக்கள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் புண்ணிய யாத்திரை வரும் பக்தர்களுக்கு நாங்கள் உதவி செய்வதைத் தடுக்கவே முடியாது என்று பிடிவாதத்துடன் செயல்பட்டதால் 41 தொழிலாளர்கள் சுமார் 20 நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கித் தவிக்கிறார்கள். (அவர்கள் மீட்கப்படப் போகிறார்கள் என்ற செய்தி இதை எழுதும் போது கிடைத்தது) சுரங்கத்திற்குள் வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தில் தவிக்கும் தொழிலாளர்கள் உயிருடன் திரும்புவார்களா? என்ற அச்சம், பீதியுடன் மன அழுத்தத்துடன் குடும்ப உறுப்பினர்கள் தவிக்கிறார்கள். நெடுஞ்சாலை (எண் : 34) யில் 900 கி.மீ தூரத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டுமானால் சுரங்கம் அமைக்க வேண்டும். மாற்றுப்பாதைகள், பாலங்களை உருவாக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இமயமலையைக் குடைந்து சுரங்கப் பாதை தோண்ட வேண்டும். இது மிகமிக ஆபத்தானது. நிலச்சரிவுகள் உருவாகும் ஆபத்துகள் உண்டு என்று விஞ்ஞானிகள் கடுமையாக எச்சரித்தனர்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த போது ‘தேசிய பாதுகாப்புக்கு – இந்தப் பாதை அவசியம் என்று அரசு முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. உச்சநீதிமன்றம் அனுமதித்து விட்டதால் சுற்றுச்சூழல் விதிமுறைகளை ஆட்சி புறந்தள்ளியது. இந்த திட்டத்திற்கு செய்யப்படும் ஒவ்வொரு பணியையும் இணைத்து ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டைப் பெற வேண்டும் என்பது விதி. இதை அந்த ஆட்சி முற்றாகப் புறந்தள்ளியது. ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியே சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதியைப் பெற்று பாதிப்பு பற்றி கவலைப்படாமல் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.

மதம் தொடர்பான திட்டம் என்றால் எந்த விதிமீறலையும் செய்யலாம் என்பதே எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. இமயமலையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் திட்டங்கள் எல்லாம் இதுவரை தோல்வியையே சந்தித்திருக்கிறது. அணைகள் உடைவதும், சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதும் வழக்கமாகி விட்டது என்று விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். நகரங்களில் மலை இல்லாத பகுதிகளில் செயல்படுத்துவது போல இமயமலைப் பகுதியில் செயல்படுத்த முடியாது என்ற அடிப்படையைக் கூட புரிந்து கொள்ளாமலே இத்திட்டத்தை மதவாத ஆட்சி நிறைவேற்ற முன்வந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சுமார் ஒரு மணிநேர பயணத்தைக் குறைப்பதற்காக இப்படி ஒரு ஆபத்தான திட்டம் தேவையா? இது அவசர முக்கியத்துவம் பெற்ற திட்டமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பக்தி, மதம் என்றாலே அறிவியல், பொது ஒழுங்கு பற்றி கவலைப்படத் தேவையில்லை என்ற முடிவுக்கு மதவாதம் உந்தித் தள்ளுகிறது.

குஜராத், உபி, பிஹார் மாநிலங்களில் திருவிழாக்களில் கூடும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்வதில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி மரணிப்பதும், பயணிக்கும் பாலங்கள் உடைந்து கீழே விழுந்து பக்தர்கள் உயிர் இழப்பதுமான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி பல இலட்சம் மக்கள் கூடும் திருவிழாக்களை உரிய பாதுகாப்புடன் நடத்தி பக்தர்களைப் பாதுகாத்து வருகிறது. ஆனால் ‘இந்து விரோத ஆட்சி’ என்று பாஜக கூப்பாடு போடுகிறது. தொழிலாளர்களின் உயிரைப் பணயம் வைத்துத் தான் புண்ணியம் தேட வரும் பக்தர்களுக்குப் பாதை அமைக்க வேண்டுமா? இந்த மத வெறிப் பார்வை வன்மையான கண்டனத்துக்கு உரியது.

இதுதான் ‘சனாதன தர்மம்’

தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டுவர இடைவிடாது போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வாழ்க்கை வரலாற்றை தமிழ்’இந்து’ நாளேட்டின் ‘பெண்’ இணைப்பு இதழ் வெளியிட்டு வருகிறது.

1907ல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மருத்துவப் படிப்பு படிக்க விரும்பிய போது அதை மருத்துவர்கள் வரவேற்கவில்லை. ஒன்று அவர் பிறந்த பிறப்பு ஒடுக்கப்பட்ட ஜாதி; மற்றொன்று அறுவை சிகிச்சை படிப்பை படிக்க விரும்பியதை ஏற்க மறுத்தார்கள். தனது திறமையால் அந்த மூடநம்பிக்கையை தகர்த்தார் முத்துலட்சுமி ரெட்டி.

சுப்புலட்சுமி என்ற மற்றொரு பெண் 13 வயதிலேயே கணவரை இழந்துவிட்டார். அவரை ‘விதவையாக்கி’ சமூகம் அவமானப்படுத்துவதை முத்துலட்சுமி ரெட்டியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கணவரை இழந்த பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சாரதா மையத்தை மைலாப்பூரில் இருவரும் இணைந்து தொடங்கினர். அதற்கு நிதியுதவி அளித்துவந்த சிலர் அந்த இயக்கத்தில் ‘பார்ப்பனரல்லாத’ பெண்களை சேர்க்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதான் சனாதன தர்மம் காட்டிய வாழ்க்கை முறை.

விடுதலை இராசேந்திரன்

Pin It