உயர்சாதியினருக்கு (EWS) 10% இடங்களை ஒன்றிய அரசு ஒதுக்கிய பின்னர், ஆந்திராவின் காபு சாதியினருக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க ஆந்திர மாநில அரசு அரசாணை வெளியிட்டது. மீதமுள்ள 5 விழுக்காடு இடம் மற்ற (இதுவரை இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத) உயர்சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டது. குஜ்ஜார்கள், ஜாட்கள், படேல்கள், மராத்தாக்களைப் போன்றே காபுக்களும் இட ஒதுக்கீட்டிற்காகப் போராடி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. முன்னதாக மகாராஷ்டிர அரசு மராத்தாக்களுக்கு 16% இட ஒதுக்கீடு வழங்கியது. இவ்வகையான இட ஒதுக்கீடு SC, ST, OBC வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 50% இட ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தொடர்புடைய அரசுகள் இவ்வகை இட ஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை.
குஜராத் மாநில அரசு 10% EWS இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தது. ஆனால், இவ்வளவு காலம் போராடிக் கொண்டிருந்த படேல்களுக்கு இதனால் பயன் கிடைக்குமா? அதே போல், இட ஒதுக்கீடு இல்லாத சூத்திர சாதிகளுக்கு இந்த EWS இட ஒதுக்கீட்டினால் என்ன பலன் கிடைக்கும் என்பது உண்மையில் தெரியவில்லை. வரலாற்று ரீதியாக, தரமான ஆங்கிலக் கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்ற பார்ப்பனர்கள், பனியாக்கள், காயஸ்தர்கள், கத்ரிகள் போன்ற உயர்சாதிகளுடன் கிராமப்புறங்களில் வாழும், தரமான ஆங்கிலக் கல்வி கற்க வாய்ப்பற்ற, விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள சூத்திர சாதிகளையும் ஒரு நேர்கோட்டில் இணைத்து போட்டிபோடச் செய்யும் வேலையை EWS இட ஒதுக்கீடு செய்யும்.
வரலாற்று ரீதியாக விவசாயத் தொழில் புரியும் சூத்திர சாதியினர் படிப்பறிவற்ற உழவர்கள், கால்நடை மேய்ப்பவர்கள், கைவினைஞர்கள், ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வரும் வரை கல்வி உரிமை இல்லாதவர்கள். அவர்களுக்கு பதினாறாம் நூற்றாண்டு வரை சொத்துரிமையும் இல்லை. கடந்த இருநூறு ஆண்டுகளாக மட்டுமே சூத்திர சாதியைச் சேர்ந்த சிலர் மட்டுமே நில உரிமையாளர்களாகவும் பண்ணையார்களும் மாறி வருகின்றனர். சூத்திரர்களின் எழுத்தறிவினைமையும் நிலவுரிமையின்மையும் பல நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து வருகிறது.வேத காலம் தொட்டு, மனு தர்ம அடிப்படையில் இந்துப் பார்ப்பனிய ஆட்சிக்காலத்தில் நிலவுடமை கொண்ட சூத்திரர்களின் பிள்ளைகளுக்கு கூட சமஸ்கிருதத்தில் கல்வி கற்க உரிமை வழங்கப்படவில்லை. அதேபோல் இஸ்லாமியர்களின் ஆட்சிக் காலத்திலும் பாரசீக மொழிக் கல்வி பெறும் உரிமையும் சூத்திரர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பள்ளிகளைத் திறந்த பிறகுதான் சூத்திர சாதிகளைச் சார்ந்தவர்கள் பள்ளிக்குச் செல்லும் உரிமையைப் பெற்றனர். பிரிட்டிஷ் இந்தியாவின் பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த மகாத்மா ஜோதிராவ் ஃபுலே தான் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பள்ளியில் ஆங்கிலமும் மராத்தியும் படித்த முதல் சூத்திரர்.
இந்திய அரசியலமைப்பின் 15(4) ஆவது பிரிவில் உள்ள ‘சமூக நிலையிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ என்ற வரையறைக்குள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சாதியினரும் மட்டுமல்லாது, சூத்திர நிலவுடைமை சாதியினரும் உள்ளடக்கம்.
”சமூக நிலையிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்காகவோ, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் ஆகியோரின் மேம்பாட்டிற்காகவோ தனி ஏற்பாடு எதனையும் அரசுகள் செய்வதை 15 ஆவது பிரிவு தடுக்காது" என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 15 ஆவது பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள ”சமூக நிலையிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்” என்ற கருத்தாக்கம், அம்மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு போதுமானதாக இல்லாததால், "பொதுத்துறை நிறுவனங்களில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு தருவதை இந்த சட்டப் பிரிவு தடுக்காது" என்ற பொருளில் சட்டப் பிரிவு 16 (4) உருவாக்கப்பட்டது.
பட்டேல்கள், ஜாட்கள், குஜ்ஜாரா, மராத்தியர்கள், காபுக்கள், ரெட்டிகள், கம்மாக்கள், வங்காளத்தின் அனைத்து சூத்திரர்கள் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து சூத்திர சாதிகளும் "சமூக நிலையிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்ற வரையறைக்கு கீழ் வருகின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் நிலவுடமையாளர்களாகவும், மாநில அளவில் அரசியல் அதிகாரம் கொண்டவர்களாகவும் இருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் விவசாயத் தொழிலாளர்களாகவும், அமைப்புசாரா துறைகளிலுமே உள்ளனர்.
மற்றொரு புறம் பார்ப்பன, பனியா, காயஸ்தர், காத்ரி போன்ற உயர்சாதியினர் இந்துப் பார்ப்பனிய ஆட்சிக் காலத்தில் தொட்டு இஸ்லாமிய ஆட்சிக் காலம் வரை சமஸ்கிருத கல்வியையும், இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் பெர்சியக் மொழிக் கல்வியையும், ஆங்கீலேய ஆட்சிக் காலம் முதல் இன்று வரை நவீன ஆங்கில வழிக் கல்வியையும் கற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களே இந்திய ஒன்றியப் பணிகளிலும் பெரும்பான்மையாக உள்ளனர்.
இவர்களுடன் போட்டியிடும் நிலை ஏற்பட்டால், சூத்திரர்களால் ஒருபோதும் போட்டியிட்டு வெல்ல முடியாது. மண்டல் கமிஷன் அறிமுகப்படுத்திய 27% பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு, பொதுப் பிரிவில் இருக்கும் இடங்களில் இட ஒதுக்கீடு இல்லாத சூத்திரர்களுக்கு இதுதான் நடந்தது. பொதுப்பிரிவு இடங்களை உயர்சாதியினரே பெரும்பான்மையாக கைப்பற்றினர். சூத்திரர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
இட ஒதுக்கீட்டிற்குள் வராத இடங்களை, அதாவது பொதுப் போட்டிற்கு உரிய ஒன்றிய அரசு பணிகளும் கல்வி நிறுவனங்களும், பார்ப்பனர்கள், பனியாக்கள், காயஸ்தர்கள், கத்ரிகள் ஆகியோரால் கைப்பற்றப்பட்டன. சூத்திர சாதியில் மேல் அடுக்கில் இருப்பவர்கள் சமீப காலங்களில் இதை உணர்ந்து இட ஒதுக்கீடு கோரிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
1970-80 களில் பி.பி.மண்டல் ஆணையம் இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கத்திற்காக பல்வேறு ஜாதிகளின் கல்வியையும், சமூக நிலையையும் ஆய்வு செய்தபோது, சூத்திர சமூகத்தைச் சேர்ந்த நிலவுடமையாளர்கள் தங்கள் சாதிகளை இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்ப்பது தங்களின் கவுரவத்திற்கு குறைவானது என்று கருதினர்.
எம்.என்.ஸ்ரீநிவாஸ் கூறியது போல், அவர்களில் பலர் தங்களை ‘புதிய ஷத்திரியர்கள்’ என்று கருதினர். சமஸ்கிருதமயமாக்கலையும் பார்ப்பனியமாக்கலையும் ஏற்றுக் கொள்ளும் எண்ணவோட்டத்தில் இருந்தனர். ஆர் எஸ் எஸ் இவர்களைச் சிறந்த இந்துக்கள் என்று சித்தரித்து இறைச்சி சாப்பிடுவதைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து அவர்களில் சிலர் சைவ உணவு உண்பவர்களாக மாறினர். பார்ப்பன அடிமைகள் சங்கத்திற்கு அடியாட்களை சேர்க்கும் ஆர் எஸ் எஸ்ஸின் முயற்சிக்கு இவர்களே முக்கிய ஆதாரமாக விளங்கினர்.
நிலவுடமை மெல்ல மெல்ல சிதைந்து, உலகமய, தாராளமய, தனியார்மயமாக்கல் கட்டத்தில், இந்தியா உலக முதலாளித்துவ சந்தைக்குள் நகர்ந்ததால், இட ஒதுக்கீடு இல்லாத சூத்திரர்கள் பின்தங்கினர். ஒன்றிய அரசுப் பணிகள், மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற புகழ்பெற்ற ஒன்றிய அரசு கல்விநிறுவனங்களில் தங்களால் நுழைய முடியவில்லை என்பதை நிலவுடமை கொண்ட சூத்திர இளைஞர்கள் உணர்ந்தனர். இப்போதும் அனைத்து நிறுவனங்களிலும் இந்த நிலைமை தொடர்வதை தரவுகளின் உதவிகொண்டு அறிந்து கொள்ளலாம்.
இந்து மதத்தின் ஒரு பகுதியாக சூத்திரர்களை சேர்த்துக்கொண்டாலும், அவர்கள் பூணூல் அணியும் இருபிறப்பாளர்கள் இல்லை என்பதால் அவர்களுக்குப் அர்ச்சகர் பதவிகள் தரப்படுவதில்லை. இந்து மத வேதங்களையும் புராணங்களையும் விளக்கும் பொறுப்புகளும் தரப்படுவதில்லை. இந்து மதத்திற்குள் இருக்கும் இந்த ஏற்றத்தாழ்விற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் கூட்டணி இந்து அமைப்புகளும் ஒருபோதும் போராடியதில்லை, மாறாக சூத்திரர்களை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடியாட்களாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். கோவில்களிலும், அரசு நிறுவனங்களிலும் சங்பரிவார் சக்திகள் மறைமுகமாக வர்ணாசிரமத்தை கடைப்பிடிக்கின்றனர். இந்து மதத்தை சேர்ந்த அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என அவர்கள் கோரவில்லை.
ஆர்எஸ்எஸ்ஸின் தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகள் பார்ப்பனர்களின் கைவசமே உள்ளன. பனியாக்களின் பொருளாதார வலுவை கருத்தில் கொண்டு ஆர்எஸ்எஸ்ஸின் உயர்பதவிகளில் குறிப்பிடத்தக்க இடங்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்தியாவின் சில பகுதிகளில் 1967 ஆம் ஆண்டு முதல் மேல் தட்டு சூத்திர சாதியைச் சார்ந்த சிலர் மாநில அளவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தனர். இருப்பினும், 2014 ஆம் ஆண்டு நாட்டின் மொத்தக் கட்டுப்பாட்டுடம் ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் வந்தது. இந்திய பெருமுதலாளிகளின் விருப்பமிகு சேவகர்களாக இருப்பதால் மோடியும், அமித் ஷாவும் நாட்டை ஆளும் உயர்பதவிகளைப் பெற்றுள்ளனர். அதானியும், அமபானியும் இல்லாமல் மோடியும் அமித் ஷாவும் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் வந்திருக்க முடியாது. டெல்லியின் அதிகாரமிக்க பதவிகளை பிடித்திருக்கமாட்டார்கள். இந்துக் கடவுள்களை கைவிட்ட ஆர்.எஸ்.எஸ், இந்தியப் பெரு முதலாளிகளிடம் சரணடைந்தது
2014 ஆம் ஆண்டின் டெல்லி ஆட்சிக்குப் பின்னர், மராத்தா (மகாராஷ்டிரா), யாதவர்கள், தலித்துகள் (உத்தர பிரதேசம்), ஜாட்கள் (ஹரியானா) உள்ளிட்ட சூத்திரர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த ஷத்திரியர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். மோகன் பகவத் (பார்ப்பனர்), மோடி, அமித் ஷா (பனியா), யோகி ஆதித்யநாத் (யோகி உடையில் ஷத்திரியர்) உள்ளிட்ட அனைவரும் இந்தியப் பெருமுதலாளிகளால் இயக்கப்படுகிறார்கள். சூத்திரர்களின் நிலவுடமை அழித்தொழிக்கப்பட்டது. முதலாளித்துவ, இந்துப் பார்ப்பன, பனியா, ஷத்திரிய அதிகாரம் முழுமையாக நிறுவப்பட்டது.
கார்ப்பரேட் நலனை மையப்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் செயற்திட்டங்கள் பார்ப்பனர்களுக்கும், பனியாக்களுக்கும் பயனளிக்கின்றன. மென்பொருள் (Software), வன்பொருள் (Hardware) தொழில் துறையின் 92 சதவிகித பொருளாதாரத்தைக் அவர்களே கட்டுப்படுத்தி வருகின்றனர். உலகமயமாக்கப்பட்ட வணிகமும் அவர்களின் கைகளில் உள்ளது. நிலவுடமையை இழந்த சூத்திரர்கள் வணிகர்களாக மாறவில்லை. சேவைத் துறையையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. சூத்திரர்கள் பணியாற்றிய விவசாயத் துறையும் பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டது. இதனால் சூத்திரர்களின் சுயதொழில் வாய்ப்பும் அழிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு, அரசுத்துறையும் தனியார்த் தொழில் துறையும் திருபாய் அம்பானியால் (பனியா) கட்டுப்படுத்தப்பட்டது. அரசு உதவியுடன் மென்பொருள் துறை தென்னிந்தியாவின் என்.ஆர். நாராயண மூர்த்தியால் (பார்ப்பனர்) கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆங்கிலம் படித்த பார்ப்பன, பனியாக்கள் அரசுத் துறை, தனியார் துறை வேலை வாய்ப்புகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டனர். ஊடகங்களும் அவர்களின் கைகளில் உள்ளன. எடுத்துக்காட்டாக, பிரணாய் ராய் தனியார் தொலைக்காட்சித் துறையில் ஆங்கிலக் கல்வி கற்ற பார்ப்பன, பனியா, காயஸ்தா சாதியினரை பணியமர்த்துவதை தொடங்கினார். ஆனால் டெல்லியைச் சுற்றியுள்ள நிலவுடமை சூத்திரர்களால் கூட அந்தத் துறையில் நுழைய முடியவில்லை. அச்சு ஊடக நிலைமை நன்கு அறிந்ததே. ஆங்கிலக் கல்வி இல்லாமையும், அதனுடன் இணைந்த சமூக பிற்படுத்தப்பட்ட தன்மையுமே இதற்குக் காரணம்.
ஆங்கில வழிக் கல்வி கற்றுத்தரும் தனியார் பள்ளிகளில் உயர்கட்டணமே மாணவர் சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புறங்களில் வாழும் சூத்திர நிலவுடமை சாதியினர் தங்கள் குழந்தைகளை நகர்ப்புற உயர்நிலை ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு அனுப்ப முடியவில்லை. அவர்கள் மாநில மொழிக் கல்வி கற்றுத்தரும் தரம் குறைந்த கிராமப் புற பள்ளிகளில் தான் இன்றும் கல்வி பயின்று வருகின்றனர்.
சுருக்கமாகச் சொன்னால், உலகமயத்திற்கு பின்னர், சூத்திரர்கள் நிலவுடைமை வழங்கிய செல்வந்தத்தை பணக்கார பெருமுதலாளி வர்க்கத்திடம் இழந்தனர். சூத்திர குழந்தைகள் உயர்தர ஆங்கில கல்வி கற்கும் வாய்ப்பை பெற இயலாமல், மாநில மொழிக் கல்விக்குள்ளும் கிராமப்புற வாழ்க்கையிலும் சிக்கிக் கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ் அவர்களில் பலரைத் தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டு, வாக்குகளைத் திரட்டுவதற்கும், முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்துக்கும் பயன்படுத்தியது. மோடி, அமித் ஷா போன்ற தீவிரவாத இந்துத்துவா தலைவர்கள் ஆர் எஸ் எஸின் கைப்பாவையான சூத்திரர்களின் கதாநாயகர்களாக மாறினர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பெருமுதலாளிகளுக்கு சேவை செய்யும் நோக்கில் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற திட்டங்களுக்கு பின்னர் சூத்திரர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். அதன்பிறகு தான் தாங்கள் புதிய ஷத்திரியர்கள் அல்ல, புதிய சூத்திரர்கள் என்பதை உணர்ந்தனர். இதனால் சமஸ்கிருதமயமாக்கல் முகமூடி கிழிக்கப்பட்டு,. தலித்மயமாக்கல் என்ற செயல்முறைக்கு சூத்திரர்கள் மாறியுள்ளனர். அதாவது, பல சூத்திர சாதியினர் எஸ்.சி பிரிவுக்குச் செல்ல விரும்புகிறார்கள். இந்தப் போக்கு ஆர்.எஸ்.எஸ்.க்கு கவலையை உண்டாக்குகிறது.
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி அறிமுகப்படுத்தியுள்ள 10% EWS இட ஒதுக்கீடு என்பது மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படாத வரை, EWS இட ஒதுக்கீட்டினால் சூத்திரர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. வட இந்தியாவில், அதிலும் குறிப்பாக ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட பார்ப்பனர்கள், பனியாக்கள், காயஸ்தர்கள், காத்ரிகள் ஆகியோர் உயர்தர ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள். அவர்கள் எண்ணிக்கையிலும் கணிசமானோர். முன்பு 50% பொது பிரிவு இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டது போலவே, EWS இட ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து இடங்களையும் வேலைகளையும் அவர்களே ஆக்கிரமிப்பார்கள். முந்தைய 50% விழுக்காடு பொதுப் பிரிவு இடங்களை உயர்சாதி பணக்காரர்களுக்கு கிடைத்தது. ஒப்பீட்டளவில் ஏழைகள், அதாவது ஆண்டு வருமானம் 8 லட்சம் உடைய உயர்சாதி பார்ப்பன, பனியா, காயஸ்தா சாதியினர், தற்போதைய 10% EWS இடங்களையும் கைப்பற்றுவது நிச்சயம். இந்த 10% EWS ஒதுக்கீட்டால் இட ஒதுக்கீடு இல்லாத சூத்திரர்களின் இட ஒதுக்கீட்டிற்கான போராட்டங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க வின் உயர்மட்டத் தலைமைக்கு இது நன்றாகவே தெரியும்.
- காஞ்சா அய்லய்யா, அரசியல் கோட்பாட்டாளர், சமூக ஆர்வலர்.
நன்றி: https://countercurrents.org/ இணையதளம் (2019, பிப்ரவரி 2 வெளிவந்த கட்டுரை)
தமிழ் மொழியாக்கம்: விஜய் அமெரிக்கா