ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது அருந்ததியர்களைப் பற்றி சீமான் பேசிய அருவருக்கத்தக்க சாதி வெறிப் பேச்சு தமிழகம் முழுவதும் உள்ள அருந்ததிய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கணிசமாக வாழும் முதலியார் ஓட்டுக்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில் தனது கட்சி வேட்பாளராக ஒரு முதலியாரை நிறுத்திய 'சாதி பார்க்காத' ஓட்டுப்பொறுக்கி சீமான், அந்த ஓட்டுக்களை முழுவதுமாக அறுவடை செய்து கொள்ள வழக்கமான கார்ப்ரேட் ஓட்டுப்பொறுக்கிகள் செய்யும் சாதிய அரசியலையே மிஞ்சி, ஒரு படி மேலே போய், முதலியார் என்ற சாதி எப்படி வந்தது என தனது வழமையான ஆமைக்கறி உருட்டை மிஞ்சும் புதிய உருட்டை நாக்கூசாமல் வெளியிட்டார்.

அதில், விஜயநகர மன்னர்கள் முதலியார்களிடம் பட்டாடை செய்து தரக் கேட்டார்கள். ஆனால் முதலியார்கள் வேறு ஆளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மறுத்து விட்டார்கள். வேறு வழியில்லாமல் விஜயநகர மன்னர்கள் சவுராஷ்டிராக்களை குஜராத்தில் இருந்து இறக்கினார்கள் என்றும், போருக்கு முதலில் போனதால் அவர்கள் முதலியார்கள் என அழைக்கப்பட்டார்கள் என்றும்,

அதேபோல் கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ்க் குடிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் எங்கள் ஆட்சியிலும் இதேபோல் தூய்மைப் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று விஜயநகர அரசர்கள் கேட்டபோது மறுத்து விட்டார்கள். எனவே வேறு வழியில்லாமல் ஆந்திராவில் இருந்து மலம் அள்ள அருந்ததியர்களை இங்கு கொண்டு வந்து இறக்கினார்கள் என்றும் தனது வன்மம் தோய்ந்த சனாதன சாதிவெறி நாக்கால் விஷம் கக்கினார்.seeman 432ஆனால் கடைசி வரையிலும் அருந்ததியர்களுக்கு முன்னால் தூய்மைப் பணி செய்த அந்த ஆதிக்குடியின் பெயரை மானஸ்தன் வெளிப்படுத்தவே இல்லை.

அருந்ததியர்களை அழைத்து வந்த விஜய நகரப் பேரரசு காலத்தில் மலம் அள்ளும் வகையிலான கழிப்பறைகள் இருந்ததா என்பதைப் பற்றிய எந்த வரலாற்றுக் குறிப்பையும் வரலாற்று தற்குறி சீமான் வெளியிடவே இல்லை.

சீமான் போன்ற சாதிவெறியர்கள் தெலுங்கு பேசும் மக்களை வந்தேறியாகக் காட்ட பயன்படுத்தும் கே.கே. பிள்ளை எழுதிய நூலே தவறானது என அருந்ததிய மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளும், இயக்கங்களும் சுட்டிக் காட்டுகின்றன.

அதன்படி கே.கே.பிள்ளை எழுதிய ‘தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்’ என்ற தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற நூலில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலுள்ள 1258-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு மேற்கோள் காட்டப்படுகிறது என்றும், அந்த மேற்கோள் ”நியாயத்தாரும், பன்னிரண்டு பணிமக்களுமுள்ளிட்ட பெரும் வேடரும், பாணரும், பறையரும், இருளரும் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளும்” என்று கூறப்பட்டுள்ளதாக உள்ளது

ஆனால் சௌத் இந்தியன் இன்ஸ்கிரிப்சன்ஸ் நூலின் எட்டாவது தொகுதியில் இடம்பெறும் அதன் உண்மையான பகுதியில்: “நியாயத்தாரும், பன்னிரண்டு பணிமக்களுமுள்ளிட்ட பெரும் வேடரும், பாணரும். பறைமுதலிகளும், செக்கிலியரும், இருளரும் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளும்” என்பதாக உள்ளது என்றும், இதிலுள்ள சக்கிலியர் என்கிற வார்த்தையை கே.கே.பிள்ளை எதற்காக வெட்டினார் எனத் தெரியவில்லை என்றும் தரவுகளோடு கூறுகின்றார்கள். கே.கே.பிள்ளை தெரிந்தே அருந்ததியர்களின் வரலாற்றை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டாரா என்று கேள்வி எழுப்புகின்றார்கள்.

இன்று சீமான் தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக வன்மத்தைக் கக்குவது, அவர் வாடகைக்கு வாங்கி நடத்தும் நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் ஆதித்தனாரின் கருத்தாகும். ஆனால் அப்போதே அந்த கருத்துக்கு பாவேந்தர் பாரதிதாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

தமிழகத்தில் இருக்கும் தெலுங்கர்கள் வீட்டில் தமிழைத்தான் பேச வேண்டும் என்று ஆதித்தனார் சொன்னதைக் கடுமையாக எதிர்த்தார் பாவேந்தர். "தமிழர்களும் மலையாளிகளும் கன்னடர்களும் தெலுங்கர்களும் ஓரினத்தார். தமிழும் கன்னடமும் மலையாளமும் தெலுங்கும் ஒரு மொழியே. இந்த உண்மையை உணராத எவரும் திராவிடம், தமிழகம் என்ற அடிப்படையில் எந்தக் கிளர்ச்சியும் செய்ய உரிமை இல்லை. திராவிடர்களைப் பகுத்துப் பார்க்கும் போக்கு தவறானது. தமிழ் இன உணர்வுக்கு எதிரானது. இல்லத்தில் தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள் என்றால் பார்ப்பனர்களைத் தமிழர்கள் எனக் கொள்ள வேண்டிய நிலை வரும். பார்ப்பனர்கள் தமிழர்கள் என்ற கருத்தைப் பரப்புவதற்காக ஆதித்தனார் இப்படி சொல்கிறாரா?..” என்று கொந்தளித்தார்.(குயில்: 1.9.1959)

உண்மையில் பார்ப்பன அடிமை சீமானுக்கு தமிழர் நலனில் மேல் அக்கறை இருக்குமானால் இதுவரை இருந்த அரசுகள் மக்களுக்கு செய்யத் தவறியது என்ன, தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதைச் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டிருப்பார்.

ஆனால் தமிழக மக்களின் சிந்தனையில் திராவிட இயக்கம் தெலுங்கர்களின் இயக்கம், அது வந்தேறிகளின் ஆதரவு அரசியலைச் செய்கின்றது போன்ற அற்பத்தனமான அரசியலை மக்கள் முன் வைத்து ஓட்டு கேட்க துணிந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், தமிழையே தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் 5.65 சதவீதத்தினரும், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் 1.68 சதவீதத்தினரும், உருதுவை தாய்மொழியாகக் கொண்டவர்கள் 1.51 சதவீதத்தினரும், மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் வெறும் 0.89 சதவீதத்தினரும் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரையும் சேர்த்தால் கூட 10 சதவீதத்தைத் தாண்டவில்லை.

ஆனால் இந்தப் பத்து சதவீத பேர்தான் தமிழ்நாட்டை அழித்து, சுடுகாடாக்கி விட்டதாக மனநோயாளியைப் போல சீமான் பிதற்றிக் கொண்டு இருக்கின்றார். மொழிவழிச் சிறுபான்மையின மக்கள் என்பவர்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் குடியுரிமையோடு வாழ்கின்றார்கள். அவர்கள் தங்களின் கருத்துக்களை பரப்பவோ, இல்லை தாங்கள் வாழும் நாட்டில் அரசியலில் பங்கெடுக்கவோ எந்தத் தடையும் இல்லை.

ஏன் தமிழர்களை எடுத்துக் கொண்டால் கூட பல்வேறு நாடுகளில் பொருளாதார வளத்தோடு வாழ்வதோடு, அரசியலில் முக்கியமான பாத்திரத்தைக் கூட ஆற்றுகின்றார்கள்.

குறிப்பாக மோசஸ் வீராசாமி நாகமுத்து என்பவர் 2015ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று கயானாவின் பிரதமராக இருந்துள்ளார். செல்லப்பன் ராமநாதன் என்ற தமிழர் 1999 முதல் ஆகஸ்ட் 2011 வரை 12 ஆண்டுகளில் இரண்டு முறை சிங்கப்பூர் ஜனாதிபதியாக இருந்துள்ளார். இது தவிர சிங்கப்பூரில் 10 தமிழ் எம்.பி.க்களும், கனடாவில் 2 தமிழ் எம்.பி.க்களும், மொரிஷியஸில் 3 தமிழ் எம்.பி.க்களும், கயானா மற்றும் பப்புவா நியூ கினியில் தலா ஒரு தமிழ் எம்.பி.யும், மலேசியாவில் 15 தமிழ் எம்.பி.க்களும், 6 செனட்டர்களும் பதவியில் இருந்திருக்கின்றார்கள்.

எப்படி பாஜக தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஓட்டுமொத்தமாக முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டு, முஸ்லிம்கள் இல்லை என்றாலும் தங்களால் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியும் என நிரூபிக்க முயல்கின்றார்களோ, அதே போல சீமான் இங்கே தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுக்கள் தனக்குத் தேவையில்லை என்றும், அவர்கள் இல்லாமலேயே தன்னால் தேர்தலில் வெல்ல முடியும் எனவும் காட்ட விரும்புகின்றார்.

பாஜகவை இயக்குவது மதவெறி அரசியல் என்றால், சீமானை இயக்குவது அப்பட்டமான சாதிவெறி அரசியல். இல்லை என்றால் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அருந்ததியர்களின் வாக்குகளைத் திட்டமிட்டே நயவஞ்சக சாதிவெறிப் பேச்சால் இழக்கத் துணிந்திருக்க மாட்டார்.

தேர்தல் அரசியலைத் தாண்டி சீமானுக்கு உள்ள சாதிவெறி அரசியலைத்தான் இது காட்டுகின்றது.

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 18,61,457 அருந்ததியர் மட்டுமே இருப்பதாகவும், இது மாநிலத்தின் பட்டியல் சாதி மக்கள் தொகையில் 6.5 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உள் இட ஒதுக்கீடு என்பது வெறும் மூன்று சதவீதம் மட்டுமே. ஆனால் அது கூட சீமான் போன்ற சாதிவெறியர்களின் கண்னை உறுத்திக் கொண்டே இருக்கின்றது.

தெலுங்கு பேசும் மக்கள் எல்லா சாதிகளிலும் உள்ளார்கள். குறிப்பாக பார்ப்பனர்கள், ரெட்டியார்கள், நாயுடுகள், செட்டியார்கள் போன்ற சாதிகளில் உள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராகப் பேசத் துப்பில்லாத கோழை சீமான், சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர்களுக்கு எதிராக கம்பு சுற்றுகின்றார்.

இலங்கை என்ற வேறு ஒரு நாட்டில், வேறு ஒரு தேசிய இனமாக வாழும் தமிழர்களை தொப்புள் கொடி உறவு என அழைக்கும் சீமான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இங்கு வசிக்கும் மக்களை பீ அள்ள வந்தவர்கள் என கூச்சமோ, குற்ற உணர்வோ இல்லாமால் பேசுகின்றார்.

மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு குடியேறி, தனது ஆதி நிலம் எதுவென்று கூட தெரியாமல் இந்த மண்ணின் பண்பாட்டோடு இரண்டறக் கலந்து வாழும் மக்களை ஒருவன் வந்தேறி என்கின்றான் என்றால், அவன் கேடுகெட்ட சங்கிப்பயலாகவே இருக்க முடியும்.

காரணம் இந்தியா மத ரீதியாக பிரிக்கப்பட்ட போது, இதுவே தங்களின் தாய்மண் என இந்தியாவில் தங்கிய முஸ்லிம்களை எப்படி வந்தேறிகள் என பாஜக அரசியல் செய்கின்றதோ, அதற்கு சற்றும் குறைவில்லாத கேடுகெட்ட பாசிச சாதிவெறி அரசியலைத்தான் சீமான் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

சீமானைப் பொருத்தவரை ஈழத்தில் பிறந்த பிரபாகரன் தமிழனத் தலைவன். ஆனால் இந்த மண்ணில் பிறந்து, இந்த மண்ணின் மக்களுக்காக மூத்திரச் சட்டி சுமந்து தன்மானத்தையும், சுயமரியாதையையும், பகுத்தறிவையும் கற்பித்த பெரியார் வந்தேறி.

அகதி முகாமில் இருக்கும் அனைத்து சாதி மக்களும், அனைத்து மொழி பேசும் மக்களும் தொப்புள்கொடி உறவுகள். தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழும் அருந்ததியர்கள் வந்தேறிகள்.

தமிழ் மக்களை குறைவான கூலிக்கு சுரண்டிக் கொழுக்கும் தமிழ் முதலாளிகளுக்கு எதிராகவோ, பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராகவோ திறக்காத சீமானின் வாய், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட அருந்ததிய மக்களுக்கு எதிராக நாலு முழம் விரிகின்றது என்றால், அதற்குப் பின்னுள்ளது மொழிவழி அரசியல் என்ற போர்வைக்குப் பின்னுள்ள சாதிவெறி அரசியல்தான்.

ஈனத்தனமான அரசியலின் மாற்றுப் பெயர்தான் நாம் தமிழர் கட்சி. அந்த கட்சியின் சித்தாந்த வழிகாட்டிதான் சாதிவெறியன் சீமான். சீமானின் கீழ்த்தரமான சாதிவெறி அரசியலுக்கு ஒத்தூதும் அவரது அடிப்பொடிகள்தான் தமிழ்நாட்டைப் பிடித்த பீடைகள்.

- செ.கார்கி

Pin It