கேடுகெட்ட நடுநிலை

சில நாள்களுக்கு முன், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளரும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பொண்ணுப் பாண்டி இந்தியப் பொதுவுடமைக் கட்சியிலிருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில், ஒரு பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. உறுப்பினராகச் சேர்ந்து விட்டார்.

peter alphonseஅவர் பொதுவுடமைக் கட்சியில் நெடுநாள் உறுப்பினர். அவருடைய தொலைபேசி கூட, “இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா...” என்றுதான் பாடி அவரை அழைக்குமாம். அப்படிப்பட்டவர் திடீரென்று கட்சி மாறி விட்டார்.

உடனே அவர் எவ்வளவு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு கட்சி மாறினார் என்று நம் வைகோ சொல்லி விடுவார் என்று எதிர்பார்த்தேன். எல்லோருக்கும் எவ்வளவு பணம் பரிமாறப்படுகிறது என்பதைக் கணக்கிடும் அதிகாரி அவர்தானே! ஆனால் இம்முறை அவர் வாயே திறக்கவில்லை.

யாரேனும் தி.மு.க. பக்கம் சென்றால் மட்டும்தான் அந்தக் கூக்குரல்கள் எழும் போலிருக்கிறது. அண்மையில் பீட்டர் அல்போன்ஸ் த.மா.கா..விலிருந்து விலகியவுடன் கூட அப்படி ஒரு குரல் எழுந்தது. தந்தி தொலைக்காட்சியில் உரையாடிய விடியல் சேகர், பீட்டருக்கு எவ்வளவு விலை பேசப்பட்டதோ என்றார். மனசாட்சி உள்ள எவருக்கும், பணத்துக்கு விலை போகக் கூடியவர் அல்லர் பீட்டர் என்று தெரியும். ஆனாலும் விடியல் சேகர் ஏன் அப்படிச் சொன்னார்? “இன்றையத் தேர்தலின் கதாநாயகன் கலைஞர்தான்” என்று பீட்ட்டர் சொல்லி விட்டார் அல்லவா! உடனே சேற்றை வாரி இறைக்க வேண்டியதுதான்.

யார் வேண்டுமானாலும் அ. தி.மு.க.விற்குப் போகலாம். அதில் ஒன்றும் தப்பில்லை. அவர்கள் எல்லோரும் காசுக்கு ஆசைப்பட்டுப் போகின்றவர்கள் இல்லை. அவர்கள் கொள்கை மறவர்கள். ஆனால் தி.மு.க. பக்கம் சென்றுவிட்டால், விலை போகின்றவர்கள் ஆகி விடுவார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டையும் ஒரே மாதிரி நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்கின்றவர்களை எல்லாம் கவனித்துப் பாருங்கள். இரண்டு எதிர்ப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரியும். “நடுநிலையாளர்” தமிழருவி மணியன் தன் இதழில், “அ.தி.மு.க. ஓர் அரக்குக் கோட்டை, தி.மு.க. காகிதப் புலி” என்று எழுதுகிறார். இதுதான் இவர்களின் கேடுகெட்ட நடுநிலை.

===============

2ஜி வழக்கும் சில கணக்கும்

தவறான கணக்குகளால் சிலர் தற்காலிகமாகத் தப்பித்தனர் - அது பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு. தவறான கணக்குகளால் சிலர் சிறை சென்றனர் -அது 2ஜி வழக்கு!

தேவை ஏற்படும் போதெல்லாம் அல்லது தேர்தல் வரும் போதெல்லாம் சிலர் 2ஜி வழக்கு பற்றிப் பேசுவார்கள். இப்போது அந்த ‘சீசன்’ தொடங்கியுள்ளது.

2ஜி வழக்கு பற்றிப் பேசுகின்றவர்கள் மிகுதி. அந்த வழக்கு பற்றிய உண்மைகள் அறிந்தவர்கள் சிலர், மிக மிகச் சிலர். 2ஜி பற்றி நெடு நேரம் பேசுகின்றவர்களிடம் ஒரே ஒரு சின்னக் கேள்வியை முன்வையுங்கள். அவர்களின் அறியாமையை நாம் அறிந்து கொள்ளலாம். வேறொன்றுமில்லை, 1.76 லட்சம் கோடி என்று தொடர்ந்து இந்த வழக்கில் ஒரு தொகை பேசப்படுகிறதே அது எப்படி வந்தது என்று மட்டும் கேளுங்கள். அடுத்தததாக, அந்தத் தொகை அந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் எங்கும் காணப்பட வில்லையே ஏன் என்று கேளுங்கள். இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தெரியாதவர்கள்தாம் 2ஜி பற்றி நிறையப் பேசிக் கொண்டுள்ளனர்.

பணிவோடு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், 2ஜி குறித்துக் காரசாரமாக மேடைகளில் பேசும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருக்கே கூட இந்த விளக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சரி, அந்த உண்மைகளைச் சின்னக் கணக்குகளின் மூலம் நாம் பார்த்து விடுவோம். ஆ. ராசா அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது, இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைக்கற்றைகள் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டன. இன்றிருப்பது போல் அன்று பலரிடம் கைத் தொலைபேசி இல்லை. எனவே 52.75 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைகள் மட்டுமே விலை போயின. ஒரு மெகா ஹெட்ஸ் 276 கோடிக்குப் போயிற்று. அதன்மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானம் 14,559 கோடி.

தலைமைத் தணிக்கைக் கணக்காளராக அன்று இருந்த வினோத் ராய் கற்பனையில் ஒரு கணக்குப் போட்டார். அவர் 2008 முதல் 2013 வரை அப்பதவியில் இருந்தார். ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்று இல்லாமல் அலைக்கற்றைகளை ஏலத்துக்கு விட்டிருந்தால் ஒரு மெகா ஹெட்ஸ் 3350 கோடிக்கு விற்பனையாகி இருக்கும் என்பது அவர் கணக்கு. அது அவருடைய கற்பனைக் கணக்கு. அதன்படி பார்த்தால், 1,76,712 கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கும் என்றாகிறது. போனால் போகிறது என்று 712 கோடியை விட்டுவிட்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டுள்ளனர். இப்படித்தான் அந்த 1.76 என்னும் தொகை வந்தது.

இங்கும் கூட இரண்டு செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. வினோத் ராய் கணக்குப் படியும் அது ஊழல் அன்று, அரசுக்கான இழப்புத் தொகை. அவ்வளவே. இரண்டாவது, 1.76 இல் வரப்பெற்ற 14ஆயிரம் கோடியைக் கழிக்க வேண்டும் இல்லையா? அதனைக் கழித்துவிட்டு 1.62 லட்சம் கோடி என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.

இந்த வழக்கில் ஆ. ராசா, 2011 பிப்ரவரி 2 ஆம் நாள் கைது செய்யப்பாட்டார். அதாவது, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு! 2011 ஏப்ரல் 2 ஆம் தேதி குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 1.76 லட்சம் கோடி என்ற தொகை எங்கும் குறிக்கப்படவில்லை. தணிக்கையாளரின் கணக்கை சி.பி.அய் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஒரு கணக்குப் போட்டு 32 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.

தணிக்கையாளர் கூறியது போல், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைகள், ஏலத்துக்கே விடப்பட்டன. 2008ஆம் ஆண்டே ஒரு மெகா ஹெட்ஸ் 3350கோடிக்கு விற்றிருக்க வேண்டுமென்றால், 6 ஆண்டுகளுக்குப் பின் எவ்வளவு கோடி ரூபாய் கூடுதலாக விற்பனை ஆகியிருக்க வேண்டும்? ஆனால் 367.2 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றை ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. அதாவது ஒரு மெகா ஹெட்ஸ் 297 கோடி ரூபாய். அவ்வளவுதான்.

ஏலத்துக்கு விட்டும், 6 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மெகா ஹெட்ஸ் 21 கோடி ரூபாய்தான் கூடுதல் விலைக்குப் போயுள்ளது. வினோத் ராய் கணக்குப்படி 3350 கோடிக்கே விற்பனை ஆகியிருந்தால், 11 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் வந்ததோ வெறும் ஒரு லட்சத்து ஒன்பது ஆயிரம் கோடிதான். அப்படியானால் இப்போது 10 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று கூறலாமா? மோடி உட்பட எல்லோரையும் கைது செய்யலாமா?

தலைமைத் தணிக்கைக் கணக்காளர் போன்ற மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்றபின், அவர்களுக்கு வேறு அரசு பதவிகள் வழங்கக்கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் இப்போது ஓய்வு பெற்றபின், வினோத் ராய், இன்னொரு பெரிய பொறுப்பில் (UN panel of external auditors and honorary advisor to the railways) அமர்த்தப்பட்டுள்ளார்.

புரிய வேண்டிய கணக்குகள் இப்போது புரிந்திருக்கும்!

======================

ஏலம் விடும் வைகோ

விஜயகாந்த்துடன் கூட்டணி சேர்ந்த நாள் முதல், அமைச்சரவையே அமைந்து விட்டது போல ஒரு கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் வைகோ. போதாக்குறைக்கு, தே.மு.தி.க. சுதீஷ் வேறு, யார் யாருக்கு என்னென்ன அமைச்சர் பதவி என்று அறிவித்து விட்டார். இப்போதெல்லாம் மக்கள் நலக் கூட்டணியினர், உள்துறை அமைச்சராக, நிதித்துறை அமைச்சராகப் பவனி வருகின்றனர். துணை முதல்வர் பதவியை வைகோதான் பாவம் வேண்டாம் என்று கூறி விட்டார். (சிறுவனாக இருந்தபோது போலீஸ் திருடன், டாக்டர்-நோயாளி விளையாட்டு விளையாண்டது  நினைவுக்கு வருகிறது).

vijayakanth 248கோவில்பட்டி மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட வைகோ, ஒரு காவல் துறை அதிகாரியிடம் ஆவேசமாகப் பேசுவது அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் படமாக ஓடிக் கொண்டிருந்தது. (அவர் யாரிடம்தான் ஆவேசம் இல்லாமல் பேசினார்?) சும்மா நிற்கும் காவல் அதிகாரியை, “எங்கே என்னை அடியுங்கள் பார்க்கலாம்“ என்கிறார். யாராவது தொட்டால் அல்லது கைது செய்தால் அதில் ஒரு பரிவு கிடைக்காதா என்று மனத்திற்குள் ஒரு கணக்கு இருக்கலாம்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க., அ.தி.மு.க ஊழல் சொத்துகளை எல்லாம் பறிமுதல் செய்து, பொது இடத்தில், “ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்....” என்று ஏலம் விடுவாராம். சொல்கிறார். அந்த உரிமை எல்லாம், சட்டப்படி மாநில அரசுக்கு உள்ளதா என்பது ஒரு புறமிருக்க, எனக்கு இன்னொரு நினைவு வந்தது.

தி.மு.க.வில் இருந்தபோது கலைஞர் இவரை நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் அனுப்பி வைத்தார் அல்லவா! அதனால்தான் இவரும் இப்போது ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் என்று ஏலம் விடுகிறார்!!

================

அடவு கட்டி ஆடுகிறார்கள்!

அறைகூவல்கள், அவதூறுகள், ஆவேசப் பேச்சுகள் என அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. எல்லாவற்றிலும் முதல் இடத்தில் நிற்பவர் இன்று வைகோதான். களத்தில் கதாநாயகனாகி விடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டார் போலிருக்கிறது.

தி.மு.க விஜயகாந்த்துக்கு 500 கோடி கொடுக்க முன்வந்தது என்று குற்றம் சாடுகின்றார் வைகோ. பாவம், விஜயகாந்த் விலைக்கு வாங்கப்படும் பொருள் ஆக்கப்பட்டு விட்டார் என்பதுதானே பொருள்! தன் அணியின் தலைவரையே ஏன் இப்படி அவர் கொச்சைப் படுத்துகிறார் என்று தெரியவில்லை.

அதே போன்ற ஒரு கேள்வியைப் பாலிமர் தொலைக்காட்சி அவர் முன் வைத்தபோது சினம் கொண்டு சீறி எழுகிறார். நேர்காணலைப் பாதியிலேயே முடித்துக் கொள்கிறார். “ஒரு பெண்ணைப் பார்த்து நீ கற்புடையவளா என்று கேட்டாலே அவளுடைய கற்பு சந்தேகத்துக்கு உரியதாகி விடுமாம்“ - சொல்கிறார் வைகோ. மற்றவர்களின் கற்பைப் பற்றி இவர் கேள்வி கேட்கலாமாம். ஆனால் இவரிடம் எவரும் எதுவும் கேட்கக் கூடாதாம். நல்ல கற்பு, நல்ல முற்போக்குச் சிந்தனை!

இன்னொரு பக்கம் சீமான், வரும் தேர்தல், தமிழனுக்கும் தெலுங்கனுக்கும் இடையிலான போர் என்கிறார். அவதூறுக்குப் பெயர் வைகோ என்றால், இனவாதத்தின் பெயர் சீமான் என்றாகிறது.

தமிழர் முன்னேற்றப் படை என்னும் அமைப்பின் நிறுவனத் தலைவர் கி. வீரலட்சுமி, “தமிழரைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறத்தி, தில்லியில் நாடாளுமன்றத்தின் முன் நான் தீக் குளிக்கத் தயார், சீமான் தயாரா?” என்று கேட்கிறார். இப்போது அவர் ம.ந.கூ.வில் இனைந்துவிட்டார். ஆதலால் விஜய்காந்தும், வைகோவும் தமிழர்கள் ஆகிவிட்டனர். எனவே இனிமேல் தீக் குளிக்க வேண்டியதில்லை.

இன்னும் ஒன்றரை மாதத்தில் இப்படி எத்தனை எத்தனை கூத்துகள் அரங்கேறுமோ தெரியவில்லை.

==============

அம்மாவும் 21 அடிமைகளும்

சென்னை தீவுத்திடலில் கடந்த 9ஆம் தேதி தன் கட்சியின் வேட்பாளர்கள் 21 பேரை ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். மேடையில் 8 குளிர் சாதனக் கருவிகள். அமர்திருந்ததோ அவர் மட்டுமே. மேடைக்கு கீழே எந்தக் குளிர் சாதன வசதியும் இல்லாமல் 21 சட்டமன்ற வேட்பாளர்கள்.

jayalalitha election campaign

==============

சாதனைதான்

கடந்த 10ஆம் தேதி மாமண்டூரில் நடைபெற்ற மாநாட்டில், விஜயகாந்த் 20 நிமிடங்கள் பேசினார். எந்தச் செய்தியையும் சொல்லாமல், எந்த அரசியலும் பேசாமல் 20 நிமிடங்கள் ஒருவரால் புரிந்தும், புரியாமலும் பேச முடிகிறது என்பது சாதனைதானே!